உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பகலில் பி.டெக்., மாணவர்; இரவில் பாதுகாவலர்

பகலில் பி.டெக்., மாணவர்; இரவில் பாதுகாவலர்

ஹைதராபாத்தை சேர்ந்த 19 வயது அபிராம், கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அவரது கல்விக்கடன் 10 லட்சம் ரூபாய்க்கு மாதம் 27 ஆயிரம் ரூபாய் தவணை செலுத்த வேண்டியிருக்கிறது. இரு சகோதரிகளும் படிக்கும் நிலையில், தந்தை சம்பளம் மட்டும் போதுமானதாக இல்லை என்பதால், அபிராமும் வேலை பார்க்க தொடங்கி விட்டார். தந்தை செக்யூரிட்டியாக இருக்கும் அதே நிறுவனத்தில் இரவு நேரத்தில் அவர் தான் செக்யூரிட்டி.காலை 7:00 மணிக்கு தந்தை வந்து மாற்றி விட்டதும், வீட்டுக்கு சென்று கல்லுாரிக்கு புறப்பட்டு செல்வார். தான் செக்யூரிட்டி வேலை பார்ப்பதை, இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார் அபிராம். இரவு நேரத்தில் படித்துக் கொண்டே காவல் வேலையில் இருக்கும் அவரது முகத்தை மறைத்த வீடியோக்கள், வலைதளங்களில் பரவி வருகின்றன.

பொறியாளரின் விசித்திர ஆசை; புதையுண்டது போயிங் விமானம்

பிரிட்டனின் டெர்பிஷையரை சேர்ந்தவர் டேவ் பில்லிங்ஸ், 45. பொறியாளரான இவர், பழைய, 'போயிங் 737' விமானத்தை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். விமானத்தை பொழுதுபோக்கு அறையாக மாற்றுவது அவரது திட்டம். 7 வயது மகன் மிகுந்த ஆர்வம் காட்டியதால் உற்சாகம் கொண்ட பில்லிங்ஸ், இன்னொரு நண்பர் உதவியுடன் விமானத்தை வீட்டுக்கு கொண்டு வந்தார். 3 டன் எடையுள்ள விமானத்தின் உடல் பகுதியை 14 அடி ஆழ குழி தோண்டி இறக்கி மூடி விட்டார். தோட்டத்தில் ஏற்கனவே இருக்கும் நிலவறையுடன் விமானத்தை இணைத்து, பொழுதுபோக்கு அறையாக மாற்றும் அவரது யோசனை, வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

'பாராகிளைடிங்' சென்ற ரஷ்யர்; மின் கம்பியில் சிக்கிய பரிதாபம்

ஹிமாச்சல் மாநிலம் மண்டி சுற்று வட்டாரத்தில், 'பாராகிளைடிங்' எனப்படும், பறக்கும் சாகசம் செய்வோர் அதிகம். இப்படி 'பாராகிளைடிங்' சென்ற ரஷ்ய சுற்றுலாப்பயணியின் பாராசூட் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கியது. அவர், பூமியில் இருந்து 500 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தார். உடனடியாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் உதவியுடன் கீழே தார்பாலின், மெத்தைகள் போட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். அத்தனை உயரத்தில் தொங்குபவரை மீட்பது பெரும் சிரமமாக இருந்தது. மாவட்ட நிர்வாகம், கிரேன் ஏற்பாடு செய்தது. இரண்டரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு ரஷ்ய சுற்றுலாப்பயணி பத்திரமாக மீட்கப்பட்டார்.

குட்டி குரங்குடன் கொஞ்சி குலாவும் 'பஞ்ச்'

ஜப்பானின் இச்சிகாவா உயிரியல் பூங்காவில் இருந்த, 'பஞ்ச்' என்ற ஒராங் உடான் குரங்கு குட்டியின் வீடியோ, இந்தாண்டு துவக்கத்தில் வைரல் ஆனது. தாயால் கைவிடப்பட்டு, மற்ற குரங்குகளாலும் புறக்கணிக்கப்பட்ட, 'பஞ்ச்', குரங்கு பொம்மை ஒன்றை கூடவே இழுத்துக்கொண்டு சென்ற காட்சி, பலரையும் கண் கலங்க வைத்தது. இப்போது அதே 'பஞ்ச்' குரங்கு வளர்ந்திருக்கிறது. பூங்காவில் இருக்கும் இன்னொரு குட்டி குரங்குடன் அது கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் பரவி வருகின்றன. 'தனக்கு கிடைக்காத அன்பையும், அரவணைப்பையும் மற்ற குட்டி குரங்குகளுக்கு பஞ்ச் வழங்குவதாக' பதிவு செய்துள்ளனர், பார்வையாளர்கள்.

புல்லாங்குழல் இசையில் உருக வைத்த 'உயிரே' பாடல்

தன் தந்தை ராமகிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், சத்தியமங்கலத்தை சேர்ந்த சேஷகிரி. மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' படத்தின் 'உயிரே' பாடலை அப்படியே புல்லாங்குழல் இசையில் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ராமகிருஷ்ணன். என் அப்பா ஏதோ இந்தப் பாடலைப் பயிற்சி செய்வதாக நினைத்து செய்கிறார். நான் இதை உலகத்தினர் அனைவரும் கேட்க வேண்டும் என்று கருதுகிறேன்' என்கிறார், சேஷகிரி. அவரது பதிவை 70 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ