உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஊராட்சிகளில் பொறியாளர் இன்றி கட்டட அனுமதி: விதிமீறல்களால் அதிகரிக்கும் அபாயம்

ஊராட்சிகளில் பொறியாளர் இன்றி கட்டட அனுமதி: விதிமீறல்களால் அதிகரிக்கும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊராட்சிகளில், பொறியாளர் மேற்பார்வையின்றி கட்டட அனுமதி வழங்கப்படுவதால், விதிமீறல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 2019ல் பொது கட்டட விதிகள் அமலுக்கு வந்த நிலையில், 10,000 சதுர அடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, உள்ளாட்சிகள் அனுமதி வழங்கலாம். இதில், பெரும்பாலான பகுதிகளில், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீடு காரணமாக, தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

ஒற்றை சாளர முறை

இந்நிலையில், 30 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒற்றை சாளர முறை ஏற்படுத்தப்பட்டது. கடந்த, ஜனவரி முதல் பெரும்பாலான ஊராட்சிகளில், திட்ட அனுமதி வழங்கும் பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுஉள்ளன. இதன்படி, உரிமம் பெற்ற பொறியாளர்கள் வாயிலாக, பொதுமக்கள், 'ஆன்லைன்' முறையில் தங்கள் விண்ணப்பங்கள், கட்டட வரைபடங்களை தாக்கல் செய்கின்றனர். இதில், கட்டட வரைபடங்கள், 'ஆட்டோகேட்' முறையில் தானாக ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கு அடுத்த நிலையில், அந்த விண்ணப்பம் தங்கள் பகுதியை சேர்ந்தது தான் என, சம்பந்தப்பட்ட ஊராட்சி சார்பில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒற்றை சாளர முறை இணையதளத்தில், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், இதை செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில், இணையதள இணைப்பு வழங்குவதற்கான பணிகள் தற்போது தான் நடந்து வருகின்றன. அத்துடன், ஊராட்சி தலைவர்களாக இருப்போரில் பலருக்கு, கணினி வாயிலாக இதைச் செயல்படுத்த போதிய அனுபவம் இல்லை. எனவே, இந்த விண்ணப்பங்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக பணியாளர் ஒருவரே ஒப்புதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, விதிமீறல் கட்டடங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும், புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, அது குறித்த விபரம் ஊராட்சி தலைவருக்கு தெரிய வேண்டும். இதற்காகவே, ஒற்றை சாளர முறையில, அவர்கள் விண்ணப்பத்தை பார்த்து, அடுத்த நிலைக்கு செல்ல ஒப்புதல் அளிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.

நல்லதல்ல

இதில், ஊராட்சி தலைவர்களுக்கு, அவர்களின் இடத்தில் இதை செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். அதைவிடுத்து, ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் சார்பில், வேறு நபர் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது நல்லதல்ல. விரைவாக கட்டட அனுமதி வழங்குவதற்காக அரசு உருவாக்கிய திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். இதில், ஊராட்சி நிலையில், பொறியாளர் மேற்பார்வை இருப்பது அவசியம். எனவே, ஊராட்சிகளில் இணையதள வசதியை ஏற்படுத்துவதுடன், தனியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஊராட்சிகளுக்கு சேர்த்து பொறியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஊராட்சிகளில் கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான பணிகளுக்கு, பொறியாளர்களை நியமிக்க வேண்டும். இதற்கான பணியிடங்களை உருவாக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. - உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Prabhu Dhanapal D
டிச 17, 2024 18:18

எல்லா ஊருலயும்.... லஞ்சம் லட்சம் லட்சமா வாங்குகின்றனர்..... காசு இல்லாம ஒரு வீடு கட்ட முடியாது..


Saravanan Bala
டிச 17, 2024 11:04

சிவில் என்ஜினியர்களை ஒழித்து கட்டிவிட்டனர். பல கல்லூரிகளில் அந்த படிப்பை எடுத்துவிட்டனர், உட்கட்டமைப்பிற்கு சிறந்த ஆராய்ச்சியுடன் கூடிய பொறியியல் படிப்பு தேவை. ஜப்பான், மேற்கத்திய நாடுகள் சிறந்த கட்டுமானம் தூய்மையான சாலைகள், வடிகால் வசதி நீர் மேலான்மை, கழிவு நீர் மேலான்மை, திடக்கழிவு மேலான்மை அனைத்தும் ஒருங்கினைந்து செயல்பட சிறந்த பொறியாளர்கள் தேவை. இங்கு ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அரசியல் செல்வாக்கு படைத்தவன் கான்ட்ராக்டர், மேஸ்திரிதான் என்ஜினிர்.


t
டிச 16, 2024 17:51

எங்க ஊருல எல்லாம் மேசன் வச்சுத்தான் வீடு கட்டுவோம் இப்பவர நல்லாத்தான் இருக்கு என்ஜினீயர் வச்சு கட்டுன கட்டடம் பத்து வருஷம் கூட தாங்கறது இல்லா ?‍♂️


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை