உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓய்விற்கு பின் பதவி உயர்வு கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்விற்கு பின் பதவி உயர்வு கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: பதவி உயர்விற்கு பரிசீலிக்கப்படுவதற்கான உரிமை இருந்தும், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த ஒரே காரணத்திற்காக, பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவர் பணி ஓய்வு பெறும் வயதை அடைந்த பிறகும், பின் தேதியிட்ட பதவி உயர்வு மற்றும் அதற்குரிய பெயரளவிலான பலன்களை உரிமையாக கோர இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கரூர் மாவட்டம் அரகுணிப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி காவலாளி மருதமுத்து அலுவலக உதவியாளராக பதவி உயர்வு பெற்றார். இவரது பணி 1993ல் வரன் முறைப்படுத்தப்பட்டது. இவர் 2016 ஏப்.,30 ல் ஓய்வு பெறும் வயதை அடைந்தார். தனது பணிக்காலத்தில் வேறு எவ்வித பதவி உயர்வும் வழங்கவில்லை; பதவி உயர்வு கோரிய மனுவை பரிசீலிக்குமாறு கரூர் கல்வி மாவட்ட அலுவலருக்கு மனு அனுப்பினார். 2020ல் நிராகரிக்கப்பட்டது. அதற்கு எதிராக மருதமுத்து உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 2025 ல் தனி நீதிபதி,'மனுதாரர் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றுவிட்டார். மனு தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து மருதமுத்து மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு 2001 முதல் 'தேர்வு நிலை' அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு வேறு எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், அவர் தனது பணிக் காலத்தில் அதை கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும். பதவி உயர்விற்காக பரிசீலிக்கப்படுவது அடிப்படை உரிமையாக இருந்தாலும், பதவி உயர்வு பெறுவதற்கான உரிமை என்பது ஒரு முழுமையான உரிமை அல்ல என்பதை குறிப்பிடுவது பொருத்தமானது.பதவி உயர்விற்காக பரிசீலிக்கப்படுவதற்கான உரிமையும், பதவி உயர்வு பெறுவதற்கான உரிமையும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டவை. மனுதாரரின் பெயரை பதவி உயர்விற்கு பரிசீலிக்கப்படுவதற்கான உரிமை இருந்தும், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த ஒரே காரணத்திற்காக, பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவர் பணி ஓய்வு பெறும் வயதை அடைந்த பிறகும், பின் தேதியிட்ட பதவி உயர்வு மற்றும் அதற்குரிய பெயரளவிலான பலன்களை உரிமையாகக் கோர இயலாது. மேல்முறையீட்டு மனுவில் தகுதி இல்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பாரதி
மே 17, 2026 12:25

இதுபோன்ற பயனற்ற வழக்குகளுக்கெல்லாம் நீதிபதிகளுக்கு நேரம் இருக்கும் திருப்பரங்குன்றம் பற்றி கேள்வி கேட்டால் மாத்திரம் ரத்த கொதிப்பு வந்துவிடும் நாட்டுப் பற்று அற்ற அரை கிறுக்கர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை