கோவை : கோவை 'மெட்ரோ' ரயில் திட்டத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய இரண்டு அறிக்கைகளை, தமிழக அரசு இன்னும் வழங்காமல் இருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகம் பதிலளித்திருக்கிறது.கோவையில் நான்கு வழித்தடங்களில் 'மெட்ரோ ரயில்' இயக்க ஆரம்ப காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் துவங்கி, அவிநாசி ரோட்டில் விமான நிலையம் வழியாக நீலாம்பூர் வரை 20.4 கி.மீ., துாரம், கோவை சந்திப்பில் துவங்கி, சத்தியமங்கலம் ரோட்டில் வலியம்பாளையம் பிரிவு வரை, 14.4 கி.மீ., துாரம் என, மொத்தம், 34.8 கி.மீ., துாரத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்தது. சமர்ப்பிக்கவில்லையே
2023ம் ஆண்டு ஜூலையில், தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. ஆய்வு செய்த தமிழக அரசு, 2024ம் ஆண்டு பிப்., 16ல், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. நிதியுதவிக்காக, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு, 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கையை, தமிழக அரசு அனுப்பியது.'மெட்ரோ' ரயில் கொள்கை-2017ன் படி, எந்தவொரு நகரத்திலும் 'மெட்ரோ' திட்டம் செயல்படுத்த வேண்டுமெனில், விரிவான திட்ட அறிக்கையோடு, 'காம்ப்ரிஹென்சிவ் மொபிலிட்டி பிளான்' (Comprehnsive Mobility Plan) எனப்படும், அறிக்கை இணைத்திருக்க வேண்டும்.அதாவது, திட்டமிட்டுள்ள வழித்தடத்தை ஒட்டி, வேறு சில சிறு வழித்தடங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் சமர்ப்பிக்க வேண்டும். அதுதவிர, வேறொரு வழித்தடத்துக்கும், ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். சுட்டிக்காட்டிய மத்திய அரசு
இவ்விரு அறிக்கைகளை இணைக்காத காரணத்தால், இன்னும் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு, தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலருக்கு, மே 1ம் தேதி விரிவான திட்ட அறிக்கையை, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை திருப்பி அனுப்பியது.இச்சூழலில், ஜூலை 25ல் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில், மெட்ரோ திட்டம் தொடர்பாக கேள்வி எழுந்தபோது, திட்ட அறிக்கையை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என்பதை, மத்திய அரசு சுட்டிக்காட்டியது.திட்ட அறிக்கை திரும்பி வந்து ஆறு மாதங்களாகப் போகிறது; கோரப்பட்ட இரண்டு அறிக்கைகளையும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் சமர்ப்பிக்காமல் இருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக, கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு, 'அக்., 21 வரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான ஆவணங்களை, தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை. 'மொபிலிட்டி பிளான்' மற்றும் மாற்று வழித்தட ஆய்வறிக்கை சமர்ப்பித்தால், மெட்ரோ ரயில் திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என தெரிவித்திருக்கிறது. இதன் மூலம், கோவை 'மெட்ரோ' ரயில் திட்டத்தை, தமிழக அரசு கிடப்பில் போட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அப்படியானால், 'செய்வதைதான் சொல்வோம்; சொல்வதைதான் செய்வோம்' என, மைக்கில் தி.மு.க.,வினர் முழங்குவது சும்மானாச்சும்தானா?