UPDATED : ஜூலை 19, 2025 02:41 AM | ADDED : ஜூலை 19, 2025 01:46 AM
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காலம் தாழ்த்துவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.முந்தைய தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்களாக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி இருவரும் ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, இருவருக்கு எதிரான விசாரணை நிலவரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விளக்கம் கேட்டிருந்தார்.சென்னை உயர் நீதிமன்றம் இப்படி தாமாக முன்வந்து, தங்களுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.நீதிபதிகள் ஆசானுதீன் அமானுல்லா, எஸ்.வி.என்.பாத்தி அமர்வில், இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் பதிலளிக்க இரண்டு வார காலம் அவகாசம் கேட்டார்.அப்போது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'இந்த வழக்கில்ஏன் இன்னும் பதில் அளிக்காமல் கால தாமதம் செய்கிறீர்கள்? வழக்கு விபரங்களை படித்துவிட்டு நாங்கள் விசாரணைக்கு தயாராக வந்தால் நீங்கள் சர்வசாதாரணமாக கால அவகாசம் கேட்டு வழக்கைஒத்திவைக்க கோருகிறீர்கள். அடுத்த முறை எந்த காரணமும் தெரிவிக்க கூடாது' எனக்கூறி விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.மேலும், அடுத்த விசாரணை வரை சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -