உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  விமர்சனங்களால் தேஜஸ் திறனை வீழ்த்த முடியாது!

 விமர்சனங்களால் தேஜஸ் திறனை வீழ்த்த முடியாது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய் கண்காட்சியில், நம் விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பல்வேறு நாடுகள் பங்கேற்ற இந்த சாகச கண்காட்சியில் நம் நாட்டின் போர் விமானமான தேஜஸ் கீழே விழுந்தது, நம் மக்களின் இதயத்தை மட்டுமின்றி, நம் பொறியாளர்களின் இதயத்தையும் சுக்குநுாறாக நொறுக்கி இருக்கிறது. விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதற்கான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் உண்மை தெரியவரும். அதுவரை விபத்து தொடர்பாக வெளியாகும் விமர்சனங்களுக்கு நம் மக்கள் காது கொடுக்காமல் புறந்தள்ளுவது தான், சுதேசிய விமான தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதாக இருக்கும். இல்லையெனில், இந்த துறையில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உழைப்பும், முயற்சியும் வீணாகிவிடும். ஏனெனில் உண்மை வெளியாவதற்கு முன்பாகவே, வெடித்து சிதறிய விமானத்தில் இருந்து எழுந்த கரும்புகை போல், தேஜஸ் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் தலைதுாக்க ஆரம்பித்து இருக்கின்றன. அதுவும், ஆயுத விற்பனையில் நம் நாடு மெல்ல முன்னேறி கொண்டிருக்கும் சூழலில், அதை கவிழ்த்துவிட சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு, இந்த விபத்து மிகப்பெரும் வாய்ப்பாக மாறி இருக்கிறது. விமான சாகச நிகழ்ச்சி சொல்லப்போனால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடக்கும் விமான சாகச நிகழ்ச்சிகளில், விபத்துகள் நடப்பது சகஜமான நிகழ்வு தான். காரணம், துல்லியம் தவறிவிடுவது. அதில் பிழை ஏற்பட்டால் அவ்வளவு தான். அதாவது இங்கே, கரணம் தப்பினால் மரணம். துபாயில் நம் தேஜஸ் விமானம் விபத்தை சந்தித்ததற்கும், துல்லியத்தை தவறவிட்டது தான் முக்கிய காரணமாக இருக்க முடியும். வானில் வட்டமடித்து முடித்ததும், வெகு வேகமாக கீழே செங்குத்தாக சீறிப்பாய்ந்த விமானம், மீண்டும் மேல் எழும்பும் நிலைக்கு வருவதற்கான துாரத்தை கடந்து விட்டது. அந்த துல்லியத்தை தவறவிட்டதால் இந்த துரதிருஷ்டம் நிகழ்ந்தது. விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்புவதற்கு கூட, விமானிக்கு நேரம் கிடைக்கவில்லை. போர் விமானங்கள் பாதுகாப்பில் பெரிதாக மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவுக்கு கூட இந்த சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு விமான சாகசத்தின்போது, அமெரிக்காவின், 'எப்/ஏ - 18 ஹார்னெட்ஸ்' மற்றும் 'தண்டர்பேர்டு எப் - 16சி' போர் விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின. கடந்த, 2003ல் நடந்த ஒரு சாகச நிகழ்ச்சியில், தண்டர்பேர்டு விமானம் மீண்டும் கட்டுப்பாட்டை இழக்க, அதன் விமானி கடைசி வினாடியில் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். தேஜஸ் போர் விமானத்தை பற்றி தற்போது தவறான தகவல்களை அளித்து வரும் சீனாவுக்கும் இந்த சங்கடம் ஏற்பட்டு இருக்கிறது. 2011ல் ஷாங்ஸியில் நடந்த சாகச நிகழ்ச்சியின்போது அந்நாட்டின், 'ஜே.எச்., - 7' விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. 2016ல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த, 'ஏ.ஜே., - 10எஸ்' விமானமும் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. நம்பிக்கை பணக்கார நாடுகளின் போர் விமானமாக இருக்கட்டும், நன்கு பயிற்சி பெற்ற தேர்ந்த விமானியாக இருக்கட்டும், அதிக உயரத்தில் பறந்து செங்குத்தாக கீழே விழும் சாகசத்தை நடத்தி காட்டும்போது சில நேரங்களில் சறுக்கல் ஏற்பட்டு விடுகிறது. இந்த சறுக்கலை கோடிட்டு காட்டாமல், நம் உள்நாட்டு தயாரிப்பு மீது உலக நாடுகள் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு, சீன ஊடகங்கள் கதைகட்டி கதறி கொண்டிருக்கின்றன. தேஜஸ் விமானம் விபத்தில் சிக்கியதற்கு காரணம் அதன் தொழில்நுட்ப கோளாறோ, அதன் வடிவமைப்போ அல்ல. விமான சாகசத்தின் போது நிகழ்ந்த மிக மெலிதான தவறு. இந்த தவறு வேறுவிதமாக சித்தரிக்கப்படுவதால், தேஜஸ் விமானத்தின் ஏற்றுமதி அடுத்து வரும் காலங்களில் சற்று சரிவை சந்திக்கலாம். அதே நேரம், சீன போர் விமானங்கள் மீது பல நாடுகளுக்கு இன்றுவரை நம்பிக்கையே இல்லை. இரண்டாவது விபத்து ஏனெனில் தேஜஸின் பாதுகாப்பு நிரூபிக்கப்பட்டது. நவீனம், நம்பகம், விலை என அனைத்திலும் பெயருக்கு ஏற்றார் போல தேஜஸாக ஜொலிக்கிறது. கடந்த கால, 'டிராக் ரிக்கார்டு'களை எடுத்து பார்த்தால், தேஜஸ் அறிமுகமான 20 ஆண்டுகளில், ஒரேயொரு முறை மட்டுமே இதுவரை விபத்தில் சிக்கி இருக்கிறது. இரண்டாவது விபத்து என்றால், அது துபாயில் நடந்தது தான். ஒரு விமானத்தின் பொறியியலுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், அந்த விமானத்தை பற்றிய விமர்சனத்திற்கும் இருக்கிறது. அதை வைத்து தான், சர்வதேச அளவில் அதன் வியாபாரமும் அமைகிறது. அந்த வகையில் தேஜஸ் மீது தற்போது எழுந்திருக்கும் எதிர்மறையான விமர்சனம், அதை வாங்க துடித்துக் கொண்டிருந்த சில நாடுகளை யோசிக்க வைக்கும். சில நாடுகள் தயக்கம் கூட காட்டும். ஆனால், அதன் மீதான நம்பகத்தன்மையை அழித்துவிடாது என்பது தான் நிதர்சனம். சிறு கோளாறு கூட இல்லாமல் பல ஆயிரம் மணி நேரம் வானில் பறந்த சாதனை தேஜஸ் விமானத்திற்கு இருக்கிறது. எனவே, ஒரு விபத்தை வைத்து, அதன் திறனை குறைத்து மதிப்பிடுவது முட்டாள்தனம். விமான சாகச நிகழ்ச்சிகளில் சிறு பிழை நடப்பது கூட மன்னிக்க முடியாத குற்றம். இதில், மாற்றுக்கருத்து இல்லை. இங்கே, விமானிகளும் மனிதர்கள் தான் என்பதை, விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். போர் விமானங்கள் பாதுகாப்பில் பெரிதாக மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவுக்கு கூட இந்த சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது தேஜஸ் விமானம் விபத்தில் சிக்கியதற்கு காரணம் அதன் தொழில்நுட்ப கோளாறோ, அதன் வடிவமைப்போ அல்ல. விமான சாகசத்தின் போது நிகழ்ந்த மிக மெலிதான தவறு இந்த சறுக்கலை கோடிட்டு காட்டாமல், நம் உள்நாட்டு தயாரிப்பு மீது உலக நாடுகள் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு சீன ஊடகங்கள் கதைகட்டி கதறி கொண்டிருக்கின்றன தேஜஸ் அறிமுகமான 20 ஆண்டுகளில், ஒரேயொரு முறை மட்டுமே இதுவரை விபத்தில் சிக்கி இருக்கிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி