"டில்லி உஷ்ஷ்ஷ்..." நவராத்திரியும், ஜி.எஸ்.டி.,யும்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜி. எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் நான்கு அடுக்குகளில் இருந்து, 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. இந்த மாற்றம், இம்மாதம் 22ம் தேதி அமலுக்கு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.எதற்கு 22ம் தேதி?
மோடி எந்த திட்டத்தை துவங்கினாலும் அதை நல்ல நாளில் தான் துவக்குவார். நவராத்திரி துவங்கும் நாளான 22 மிகவும் நல்ல நாள். எனவே, அன்றைய தினம் மக்களுக்கு இந்த நல்ல திட்டம் துவங்கும் என பேசப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல என்கின்றனர் அதிகாரிகள். ஜி.எஸ்.டி.,யின் இரண்டு வரி விகிதம் தொடர்பான அரசாணைகள் வெளியிட, ஏகப்பட்ட வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறதாம். 150க்கும் மேலான 'சர்குலர்'கள் தயாரித்து வெளியிட வேண்டும். இதை உடனடியாக செய்ய முடியாது; நேரம் தேவை. அத்துடன், பல விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.இதனால் தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து மீடியாவிற்கு எந்த பேட்டியும் கொடுக்கவில்லையாம்; பல நிருபர்கள் கேட்டும் மறுத்துவிட்டாராம். இவருக்கு பதிலாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், 'டிவி'க்களில் தோன்றி பேட்டியளித்தார்.