"டில்லி உஷ்ஷ்ஷ்...." பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டமா?
சமீபத்தில் டில்லியில் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடந்தது. அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நட்டா பங்கேற்றனர். தமிழக பா.ஜ., தலைவர் மற்றும் முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. 'ஏன் அண்ணாமலை வரவில்லை?' என, இரண்டு முறை கேட்டாராம் அமித் ஷா. 'மற்ற முன்னாள் தலைவர்கள் வரும்போது ஏன் அண்ணாமலை பங்கேற்கவில்லை?' என தற்போதைய பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும் கேட்டுள்ளார். இத்தனைக்கும் நட்டா, அண்ணாமலைக்கு போன் செய்து அழைப்பு விடுத்தாராம்.'எனக்கு முக்கிய வேலை இருப்பதால் பங்கேற்கவில்லை' என அண்ணாமலை தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்தபோதும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், 'கட்சி தான் முக்கியம்; அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்' என நிர்மலா சொன்னாராம். ஆனால், அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.'பார்லிமென்ட் தேர்தலில் அண்ணாமலையால் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உடைந்தது' என்பது மத்திய பா.ஜ., தலைவர்களின் எண்ணம். இதனால் தான், சமீபத்தில் அமித் ஷா தமிழகம் வந்தபோது அண்ணாமலைக்கு உத்தரவிட்டாராம். அதை தொடர்ந்து, 'பழனிசாமியை முதல்வர் பதவியில் அமர்த்துவது பா.ஜ.,வின் லட்சியம்' என பேசினார் அண்ணாமலை. 'அப்படியிருக்க ஏன் டில்லி கூட்டத்தில் பங்கேற்கவில்லை?' என, பா.ஜ., தலைவர்கள் சந்தேகப்படுகின்றனர்.இதற்கிடையே இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 'அ.தி.மு.க.,வினர் ஒன்றிணைய வேண்டும்' என செங்கோட்டையன் பேசியுள்ளார். இன்னொரு பக்கம் தினகரன், பா.ஜ., - -அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். அவரும், 'அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும்' என சொல்லி வருகிறார்.ஓராண்டிற்கும் மேலாகவே, 'அ.தி.மு.க., ஒன்றாக இருக்க வேண்டும்; கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்கள் இணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும்' என, பல முயற்சிகளை எடுத்தவர் அமித் ஷா.எனவே, செங்கோட்டையன் மற்றும் தினகரன் விவகாரங்களுக்கு காரணம் உள்துறை அமைச்சரா? 'பழனிசாமி மீது நெருக்கடியை ஏற்படுத்தி, பன்னீர்செல்வம் உட்பட அனைவரையும் அ.தி.மு.க.,வில் இணைக்க அமித் ஷா முயற்சிக்கிறாரா' என்கிற சந்தேகமும், டில்லி அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.