டில்லி உஷ்ஷ்ஷ்: காங்கிரசுக்கு சிக்கல்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசுக்கு இரண்டு உளவு அமைப்புகள் உள்ளன. ஒன்று, 'இன்டலிஜென்ஸ் பீரோ' என அழைக்கப்படும் ஐ.பி., உள்நாட்டில் உளவு பார்க்கும்; மற்றொன்றான 'ரா' எனும் அமைப்பு, வெளிநாடுகளில் உளவு மேற்கொள்ளும்.அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் உட்பட, பல ரகசிய தகவல்கள் இந்த உளவு அமைப்புகளிடம் உள்ளன. 'சோனியாவிற்கும், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோசுக்கும் தொடர்பு உள்ளது' என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. இதன் பின்புலம், உளவுத்துறை தகவல்கள் தான் என சொல்லப்படுகிறது. 'சோரோஸ் நிதி உதவி அளிக்கும் ஒரு அமைப்புடன், சோனியாவிற்கு தொடர்பு உள்ளது' என பா.ஜ., கூறுகிறது; ஆனால், காங்கிரஸ் இதுவரை வாயே திறக்கவில்லை.'இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும்; மேலும், சோனியாவை தொடர்ந்து, புதிய எம்.பி.,யான பிரியங்கா தொடர்பான அதிரடி செய்திகளும் விரைவில் வெளியாகும்' என்கின்றனர் பா.ஜ.,வினர். டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும்போது, காங்கிரசுக்கு எதிரான பல விஷயங்கள் வெளியாக உள்ளதாம்.ராகுல் அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுகிறார். அவருடைய வெளிநாட்டு பயணங்களின்போது யாரை சந்தித்தார் என்ற விபரங்களையும் பா.ஜ., வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜ்கபூருக்கு பாரத ரத்னா?
மறைந்த ராஜ்கபூர் பிரபல ஹிந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தவர். இவருடைய குடும்பம் முழுதும் ஹிந்தி சினிமாவை ஆண்டு கொண்டிருக்கிறது. இவருடைய மகன்களான ரிஷி கபூர், ரன்தீர் கபூர், ராஜிவ் கபூர் மற்றும் பேத்தி கரினா கபூர் என அனைவருமே நடிகர்கள் தான்.பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்த ராஜ்கபூரின் நுாற்றாண்டு விழா, இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. இதற்காக, ராஜ்கபூர் குடும்பத்தினர் அனைவரும் பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தனர்.பிரதமர், இவர்களுடன் பேசிய வீடியோ வெளியிடப்பட்டு பிரபலமானது. இந்நிலையில், டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு விஷயம் பேசப்படுகிறது. அது, ராஜ்கபூருக்கு இந்தியாவின் உயரிய விருதான, பாரத ரத்னா வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதுதான்.'ஜனவரி மாதம் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது, பத்ம விருதுகள் அறிவிப்பு வெளியாகும்; அப்போது பாரத ரத்னா விருது குறித்து செய்தி வெளியாகும்' என்கின்றனர்.