பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில், பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்பமேளா நெரிசலில், 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இது, மவுனி அமாவாசை நாளில், அதிகாலை 2:00 மணிக்கு நடந்தது. துாக்கத்தில் இருந்த பிரதமர் மோடியை எழுப்பி, இந்த விஷயம் சொல்லப்பட்டதாம்; அதன்பின், மோடி துாங்கவே இல்லையாம். அதிகாலை, 4:00 மணிக்குள் நான்கு முறை உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினாராம்.எந்த ஒரு பிரச்னையும் வரக் கூடாது என, பல மாதங்களாக திட்டமிட்டு, இதுவரை எந்த ஒரு சம்பவமும் இல்லாமல் நடந்த கும்பமேளாவில், பக்தர்கள் இறந்தது மோடியை அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டதாம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p7nggfw6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 1954ல் நடைபெற்ற மஹா கும்பமேளாவில், அப்போதைய பிரதமர் நேரு திரிவேணி சங்கமத்தில் நீராடினார்; அதன் பின் ஏற்பட்ட நெரிசலில், 800 பேர் இறந்தனர். ஆனால், 'நேருவின் நிகழ்ச்சிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை' என, இந்த விபரத்தை ஆய்வு செய்த கமிட்டி தெரிவித்தது. 'கடந்த 1954ல் நடந்தது போல இப்போது நடக்கக் கூடாது; அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்' என, உ.பி.,யில் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது, அவரை மிகவும் பாதித்துள்ளதாம்.'திரிவேணி சங்கமத்தில் நீராட, வயதானோர் மட்டுமின்றி, இளைஞர்களும் அதிக அளவில் வருகின்றனர். இதற்கு காரணம், சமூக வலைதளம் தான்' என்கின்றனர் அதிகாரிகள். இளைஞர்கள், கையில் மொபைல் போனுடன் வந்து, வாட்ஸாப்பிலும், முக நுாலிலும் வீடியோவை பகிர்கின்றனர். இதை பார்க்கும் பலரும் கும்பமேளாவிற்கு வருகின்றனர். சமூக வலைதளத்தால் கூட்டம் அதிகமாகியுள்ளது; இதை அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லையாம்.'தினமும் கோடிக்கணக்கில் பக்தர்கள் நீராடி செல்லும்போது, மவுனி அமாவாசை தினத்தன்று மட்டும் எப்படி இந்த நெரிசல் ஏற்பட்டது?' என்றால், 'அதிகாலை, 1:00 மணிக்கே செல்லுங்கள் என, சிலர் புரளியை கிளப்பி விட்டதால், நெரிசல் ஏற்பட்டது' என, சொல்லப்படுகிறது. 'இதன் பின்னால், சதித்திட்டம் உள்ளது' என, பா.ஜ.,வினர் எண்ணுகின்றனர். 'வரும் புதன்கிழமை பிரதமர் திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்' என, சொல்லப்பட்டது. ஆனால், துயர சம்பவத்திற்கு பின் பிரதமர் 5ம் தேதி அங்கு செல்வாரா?