சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:திருவேற்காடு நகராட்சி, கோலடி பகுதியில், 13 ஏக்கர் பரப்பளவில், அம்பேத்கர் விளையாட்டு திடல் உள்ளது. அதை அழித்து, 1,000 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு ஆகிய நகராட்சிகள், ஒன்பது ஊராட்சிகளை ஒருங்கிணைத்து அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, வேறு எங்கும் இடம் கிடைக்கவில்லையா?அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ளன. அவற்றையும் அழிக்க தி.மு.க., அரசு துடிப்பது ஏன்; புதிதாக விளையாட்டு திடல்கள் உருவாக்கப்படாமல், ஏற்கனவே இருப்பதை அழிப்பது முறை தானா?இந்த விளையாட்டு திடலை தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துவதுடன், கருமாரியம்மன் கோவில், சிவன் கோவில், தேவாலயம் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அருகாமையில் இருப்பதால், மக்கள் பயன்பாட்டில் இல்லாத ஒதுக்குபுறமான இடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை, அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு அறிக்கையில், 'சென்னை கொடுங்கையூரில் சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில், புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. 'தற்போது கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பை அகழ்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. 'பின், புதிதாக சேரும் குப்பையை அகற்ற, 75 ஏக்கர் பரப்பளவில், 1,600 கோடி ரூபாய் செலவில், புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அத்திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்' என, சீமான் தெரிவித்துள்ளார்.