வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடல் கொந்தளிப்பில் இழந்த தனுஷ்கோடி நகரை மீண்டும் உருவாக்க வேண்டும்
ராமேஸ்வரம்: 61 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (1964 டிச., 22ல்) அதிகாலை ஏற்பட்ட புயலால் கடல் கொந்தளித்து மரண ஓலத்தில் புனித நகர் தனுஷ்கோடி உருக் குலைந்தது. இப்புயலின் அடையாளமாக இன்றும் இடிந்த கட்டடங்கள் காட்சியளிக்கிறது. இலங்கையில் சீதையை மீட்டு ராமர் திரும்பிய போது, அவர் எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ் (வில், அம்பு)கோடி என ராமாயணத்தில் கூறப்படுகிறது. தமிழகத்தின் தென்கிழக்கு திசையில் ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ.,ல் உள்ள இந்நகரம் 100 ஆண்டுகளுக்கு முன்பு புனித தலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் வணிக நகரமாகவும் விளங்கியது. 1914ல் தனுஷ்கோடி, இலங்கை தலைமன்னார் இடையே இரு பயணிகள் கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடி வரை ' போட் மெயில் ' எனும் பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இந்த இரு போக்குவரத்தும் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கியது. இரு கடலும் சங்கமிக்கும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அக்காலத்தில் பக்தர்கள் முதலில் தனுஷ்கோடியில் நீராடிவிட்டு, பின் ராமநாதசுவாமி கோயிலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். தமிழகத்தின் சிறந்த துறைமுகமாகவும், அதிக வருவாய் ஈட்டி தரும் முக்கிய நகரமாகவும் தனுஷ்கோடி இருந்தது. 2ம் உலகப்போரில் இந்தியாவின் தென்கடல் எல்லையில் சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்கிய இந்நகரை, சிலமணி நேரத்தில் சூறாவளி காற்றும், ராட்சத கடல் அலைகளும் புரட்டி போட்டு நகரையே சின்னா பின்னமாக்கி காணாமல் போக செய்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. தேசிய பேரிழப்பு
இதே நாளில் அதாவது 1964 டிச., 22 அதிகாலை 12:00 மணிக்கு மேல் ஏற்பட்ட புயலில் 160 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால், ராட்சத அலைகள் எழுந்து தனுஷ்கோடியை தாக்கியது. துாக்கத்தில் இருந்த மீனவர்கள், ரயிலில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த கல்லுாரி மாணவர்கள், பக்தர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் சிக்கி உயிரிழந்தனர். சில மணி நேரத்தில் தனுஷ்கோடியில் இருந்த பள்ளி, தபால் நிலையம், மருத்துவமனை, விநாயகர் கோயில், சர்ச் கட்டடங்கள் சேதமடைந்து புயல் அரக்கன் மென்று துப்பிய எலும்பு துண்டுகள் போல் சிதைந்து போனது. மறுநாள் (டிச., 23) புயலின் கோர தாண்டவத்தின் அடையாளமாக எங்கு பார்த்தாலும் பிணக் குவியல்கள் கிடந்தன. இந்த உடல்களை அடையாளம் காண, கணக்கிட முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனால் இச்சம்பவத்தை தேசிய பேரிழப்பு என மத்திய அரசு அறிவித்தது. இச்சம்பவம் குறித்து புயலில் தப்பிய மூதாட்டி மலையம்மாள் 79, கூறியதாவது: அன்றிரவு வீசிய சூறை காற்று, கனமழை பெய்ததை இதுவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. மேலும் கடல்நீர் ஊருக்குள் புகுந்து கட்டடங்களை மூழ்கடித்தது. என் பெற்றோர் எங்களை மேடான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் குளிரிலும், மழையிலும் நடுங்கி உயிர் தப்பினோம்.வரலாறு அழிந்து போகும்
61 ஆண்டுக்கு பின்பு இன்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு உருகுலைந்த கட்டடங்கள் புயல் கோர தாண்டவத்தின் பாதிப்பை உணர்த்தும் வரலாற்று நினைவுச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன. இன்று வரை இங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. 2017ல் பிரதமர் மோடி உத்தரவில், தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதன்பின் மாநில அரசுகள் ஒரு கல்லை கூட துாக்கி போடாமல், மக்களுக்கு ஒரு வசதி கூட ஏற்படுத்தவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி கூட இல்லாமல், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மனநிம்மதியின்றி செல்கின்றனர். ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இந்நகரின் வரலாறு அழியாமல் பாதுகாக்க, இங்கு பிரமாண்ட ராமர் சிலை, பாராங்கல்களில் ராமாயண வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவிய சிற்பங்கள் வடிவமைத்து, உடைந்த நிலையில் கம்பீரமாக காட்சியளிக்கும் சர்ச், கோயில், தபால் நிலைய கட்டடங்களை புதுப்பித்து புயலின் சோக வரலாற்றை மக்கள் அறிந்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஓரிரு ஆண்டுகளில் சர்ச், விநாயகர் கோயில் முழுமையாக இடிந்து மண்ணோடு மண்ணாக புதைந்து போகும். வரலாறும் அழிந்து போகும் அபாயம் உள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர். 'மறக்க முடியாத தனுஷ்கோடி பேரழிவு': உயிர் தப்பிய ஸ்ரீவி., ஆசிரியர் பால்ராஜின் நினைவலைகள்
தனுஷ்கோடி பேரழிவில் இருந்து உயிர் தப்பி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் வசிக்கும் 93 வயது ஓய்வு ஆசிரியர் பால்ராஜ் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா மானகசேரியில் பிறந்தேன். 1964ல் தனுஷ்கோடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினேன். அங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். 33 ஆசிரியர்கள் இருந்தனர். என்னுடன் திருத்தங்கலை சேர்ந்த அருள்ராஜும், அவரது மனைவி ஞானமும் பணியாற்றினர். நான் தனுஷ்கோடியில் மாதம் ரூ. 3 வாடகையில் ஒரு ஓலை குடிசை வீட்டில் தங்கியிருந்தேன்.
கடல் கொந்தளிப்பில் இழந்த தனுஷ்கோடி நகரை மீண்டும் உருவாக்க வேண்டும்