சென்னை: ''தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டவற்றில், 64 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் ஒப்புதலுக்காக, 37 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன,'' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை, ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதற்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். மீட்டெடுப்பு
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தி.மு.க., அரசு, 2021ல் பதவி ஏற்றபோது கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. முதல் அலையில், 8.59 லட்சம் பேர்; இரண்டாவது அலையில், 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். செயற்கை சுவாசம் அளிப்பதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நெருக்கடியை போர்க்கால அடிப் படையில் அரசு சமாளித்தது. மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல், மாநிலத்தை மீட்டெடுத் தது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அரசு பொறுப்பேற்ற பின், அதை தொலைநோக்கு திட்டங்களாக அறிவித்து, 2021 ஜூன் மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஐந்தாண்டு நிறைவை நோக்கி அரசு உள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி, 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள உச்சபட்ச வளர்ச்சி இது. வருவாய் பற்றாக்குறை, 3.49 சதவீதமாக இருந்தது; தற்போது, 1.17 சதவீதமாக குறைந்து உள்ளது. நிதி பற்றாக்குறை, 4.91 சதவீதமாக இருந்தது; இது, 3 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ல் தமிழகத்தில், 46,159 தொழிற்சாலைகள் இருந்தன; தற்போது, 52,514 தொழிற்சாலைகள் உள்ளன. பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 1.08 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.தி.மு.க., அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 திட்டங்களுக்கு பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அரசின் பரிசீலனையில், 40 திட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் ஒப்புதலுக்காக, 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதுவரை, 64 தொலைநோக்கு திட்டங்கள் மட்டுமே நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளன. சொல்லாத திட்டங்கள் வேளாண் துறையை பொறுத்தவரை, 35 பணிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசின் பரிசீலனையில் இரண்டு பணிகள் உள்ளன. மத்திய அரசிடம், ஒரு பணி நிலுவையில் உள்ளது. தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காத நிலையிலும், நிதி ஆதாரங்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றாது தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 13 சதவீதம் அதாவது 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதை பட்டியலிட்டிருந்தேன். அதை, தி.மு.க., அரசால் மறுக்க முடியவில்லை. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, '2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் செயல்பாட்டில் உள்ளன. அரசின் பரிசீலனையில், 40 வாக்குறுதிகள் உள்ளன' என, தெரிவித்துள்ளார். தி.மு.க., அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், வரிசை எண் வாரியாக, எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன; அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர் என்ற விபரங்களை வெளியிட வேண்டும். ----அன்புமணி, தலைவர், பா.ம.க.,