போதைப்பொருள் கடத்தலும் நுகர்வும்: உளவுத்துறை திடுக் அறிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
- நமது சிறப்பு நிருபர் -: போதை பொருள் பிரச்னை தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்ற உளவு துறையின் அறிக்கை நகல், நமக்கு கிடைத்துள்ளது. புதிய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு, இந்த அறிக்கை சரியான அடித்தளம். தமிழகத்தில் உள்ள போதை பொருள் பிரச்னையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, கடத்தல் + வியாபாரம்; அடுத்தது, நுகர்வு அல்லது பயன்பாடு. இலங்கைக்கான கடத்தல் பாதைகளை அணுகக்கூடிய ஒரு கோஷ்டியால், சென்னையில் தொடங்கி மதுரை, ராமநாதபுரம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வினியோக சங்கிலி நீண்டுள்ளது. மாநிலம் முழுதும் போதை பொருள் நுகர்வு, சீராக அதிகரித்து வருகிறது. கல்வி மற்றும் சேவை துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, 16 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் வரவால், சென்னை மற்றும் கோயம்புத்துாரில் போதை நுகர்வு அதிகரித்துள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவான என்.சி.பி., தேர்தல் மற்றும் குற்ற தடுப்பு பிரிவான, இ.பி.சி.ஐ.டி., மற்றும் மாநில காவல் துறை ஆகியவை கைப்பற்றிய போதை பொருட்களை ஆய்வு செய்தால், சில உண்மைகள் தெளிவாகும். பெரும்பாலான பறிமுதல்கள், சென்னை, மதுரை அல்லது கடலோர மாவட்டங்களில் நடந்துள்ளன. அதுவும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, போதைப்பொருள் கடத்தும் மையமாக உருவெடுத்துள்ள இலங்கைக்கு வினியோகம் செய்வதற்காகவே, இந்த போதை பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன என்பது தெரியவரும். எளிது
போதை கடத்தல் தொழிலில் எக்கச்சக்க லாபம் கிடைப்பதால், ஏழை மக்கள், மீனவர்கள் போன்றோரை அதில் இழுத்து விடுவது எளிதாக இருக்கிறது. இதனால், போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. எளிதாக கிடைக்கும் கஞ்சா, ஆந்திரா- மற்றும் ஒடிஷா மாநில எல்லைகளில் இருந்தும், மருந்து என்ற பெயரில் கடத்தப்படும் மெத் ஆம்பெட்டமைன், டில்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் வடகிழக்கு நகரங்களில் இருந்தும், தமிழகம் வருகின்றன. இந்த கடத்தல் தொழிலால் கை நிறைய பணம் பெறுபவர்கள், மதுரை மற்றும் கடலோர மாவட்டங்களை சேர்ந்தவர்கள். துரதிர்ஷ்டவசமாக, போதை பொருட்களை பறிமுதல் செய்வதில் தான் காவல் துறை குறியாக உள்ளதே தவிர, முழுமையான விசாரணை நடத்தி, கடத்தல் கும்பலின் முழு வலையமைப்பையும் முறியடிப்பதில், அது கவனம் செலுத்துவதில்லை. போதை பொருள் தடுப்பு பணிக்குழு, அனைத்து வழக்குகளிலும் முழுமையான விசாரணையை நடத்துவதற்கு மத்திய அமைப்புகள் மற்றும் பிற மாநிலங்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது இல்லை. பாதிப்பு
தேசிய போதைப்பொருள் மற்றும் மனவியல் மருந்துகள் சட்டத்தின் கீழ் அதிக சதவீத தண்டனை பெற்று கொடுப்பதாக, அரசின் புள்ளி விபரம் காட்டினாலும், அதன், 'சி' பிரிவில் அதாவது வணிக அளவு வழக்குகளின் தண்டனை விகிதம், 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது, விசாரணை சரியில்லை என்பதை காட்டுகிறது. திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றம், இன்னும் செயல்படவே இல்லை. வேலுாரில், அறிவித்தபடி ஒரு விரைவு நீதிமன்றம் தொடங்காமல் தள்ளிப் போகிறது. போதை பொருள் கடத்தல் குறித்து தகவல் அளித்தால், பெரிய வெகுமதி வழங்கும் திட்டத்தை அரசு தயாரித்தது. ஆனால், வேண்டியவர்களை பாதிக்கும் என்பதால் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாடு வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டாலும், அதனால் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லையே என்ற அபத்தமான கருத்தும் நிலவுகிறது. இதனால், மேலும் பல கடலோர கிராமங்கள், உடனடியாக கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தலுக்கு துணை போகும் நிலை உள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அப்பால் போதை பொருட்களை கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக இருப்பது, தமிழக கடலோர கிராமங்களும், மீனவர்களுமே. மீனவர்கள், ஒரு கணிசமான ஓட்டு வங்கியாக இருப்பதால், தமிழக மீன்வள துறையும், கடலோர காவல் படையும் சாதாரணமான மீன்பிடி விதிமுறைகளை கூட சரிவர அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. பதிவு செய்யப்படாத படகுகள், கூடுதல் மோட்டார்களை பயன்படுத்துதல், படகு செல்லும் பாதையை, 'ரிமோட்'டிலிருந்து கண்காணிக்கக் கூடிய கருவிகளையும் அணைத்துவிட்டு பயணிக்கும் படகுகள், அடிமட்ட இழுவலை மீன்பிடித்தல் ஆகியவை, மிக அதிகமாக நடக்கும் சட்ட விரோத செயல்கள். போதை கடத்தல் எனும் மோசமான வலையில் சிக்காமல் இருக்க, மீனவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, நீண்டகால திட்டங்களை, அரசுகள் வகுப்பது அவசியம். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அல்லது மக்களின் போதை பழக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது, இதுவரை சரியாக ஆய்வு செய்யப்படவில்லை. ஆகவே, அரசு எந்தளவு திட்டமிட வேண்டும் என்பதே யாருக்கும் தெரியவில்லை. முந்தைய அரசு, போதை பொருள் பழக்கத்தின் பரவல் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது; ஆனால், நீண்ட நாளாகியும் அது முடியவில்லை. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள், மது அல்லது போதை பொருட்களின் தாக்கத்தில் அவ்வாறு செயல்படுகின்றனர் என்ற கருத்து, பொதுமக்களிடையே இப்போது அதிகரித்து வருகிறது. ஆனால், முறையான செயல்பாட்டு நடைமுறைகள் இல்லாததும், சமூக ஊடகங்களின் சக்தியும், எதிர்காலத்தில் பதிவாகும் ஒவ்வொரு குற்றத்தையும் பெரிதுபடுத்தி, போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புபடுத்தப் போகின்றன. பலன் தராது
போதை பொருள் கடத்தல், பயன்பாடு ஆகியவற்றை தடுக்க, உண்மையிலேயே அரசு விரும்பினால், சில தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். * 'ஏ' பிரிவு - சிறு அளவு குற்றங்களுக்கான தண்டனையை உயர்த்த வேண்டும் * இடைத்தரகர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்கள் மீது மட்டும் அதிக வழக்குகள் போடுவது, மக்களுக்கு கவர்ச்சியாக தோன்றுமே தவிர, நீண்டகால பலன் தராது * எதார்த்தத்துக்கு மாறான இலக்குகளை நிர்ணயித்து காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்தால், சட்ட விரோத கைது அதிகமாகும். ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து கஞ்சா கொண்டு வந்து அல்லது வாங்கி வந்து, அதை தமிழகத்தில் பறிமுதல் செய்ததாக காட்டுவது அதிகரிக்கும் * சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், பெரும்பாலான வழக்குகளை முடித்து வைக்கும் பொறுப்பு காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மீது சுமத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் * இவ்வளவு கைப்பற்றினோம், பறிமுதல் செய்தோம் என்று பிடிபட்ட போதை பொருட்களின் அளவை மிகைப்படுத்தி காட்டி, அதன் அடிப்படையில் புள்ளிவிபரங்கள் காட்டக் கூடாது. அவ்வாறு செய்வது, தவறான வெற்றி உணர்வையும், ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கும். அது நாட்டுக்கு நல்லதல்ல.