உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்காளர் தீவிர திருத்த பணியில் மக்களை பயமுறுத்துகின்றனர்!: கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் குற்றச்சாட்டு

வாக்காளர் தீவிர திருத்த பணியில் மக்களை பயமுறுத்துகின்றனர்!: கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன' என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதே சமயம், எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீது வரும் டிச., 4ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டு, தேர்தல் முடிந்த நிலையில், தமிழகம், மேற்கு வங்கம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக திருத்தப் பணி நடந்து வருகிறது. வரும் டிச., 4ம் தேதிக்குள் வாக்காளர் சரிபார்ப்பு பணியை முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுஉள்ளது. தி.மு.க., மனு இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - வி.சி., கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் தனி நபர்கள் சார்பிலும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல, கேரளா, மேற்குவங்க மாநில அரசுகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ''இரண்டாம் கட்டமாக நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது. டிஜிட்டல் முறையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன,'' என்றார். தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'டிச., 4ம் தேதிக்கு பின் விண்ணப்பங்கள் பெறப்படாது என தேர்தல் கமிஷன் கூறி இருக்கிறது. எனவே, இவ்வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்' என, கோரினார். மற்றொரு வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் வாதிடும்போது, ''அவசர கதியில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், பணிச்சுமை தாங்காமல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். ''அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்ப படிவங்கள் தேவையில்லை என்கின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களில் வேறு விதமான உத்தரவை பிறப்பிக்கின்றனர். தேர்தல் கமிஷனின் நடவடிக்கை ஒரே மாதிரியாக இல்லை. இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்,'' என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ''அரசியல் கட்சிகள் தான் தேவையின்றி இந்த விவகாரத்தில் அரசியல் செய்கின்றன; மக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான தகவல்களை அளிக்கின்றன,'' என்றார். விசாரணை இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான மனு மீது, வரும் டிச., 1ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு டிச., 3ம் தேதி மனுதாரர்கள் பதில் அளிக்க வேண்டும். அதன் பின் இவ்வழக்கு விசாரணை டிச., 4ம் தேதி நடக்கும். கேரளாவில் டிச., 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. முதலில் புகார்களுக்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்கட்டும். கேரளா தாக்கல் செய்த மனு தொடர்பாக, தேர்தல் கமிஷன் டிச., 1ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின், டிச., 2ம் தேதிவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே போல், மேற்குவங்க மாநிலம் தொடர்பாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை டிச., 9ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அ.தி.மு.க., தரப்பு கோரிக்கை!

நேற்றைய விசாரணையின் போது, அ.தி.மு.க., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரம், எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும், மற்ற மனுக்களுடன் சேர்த்து தங்கள் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்திய பின், அ.தி.மு.க.,வின் மனு மீதான வாதங்கள் கேட்கப்படும் என தலைமை நீதிபதி உறுதியளித்தார்.-- டில்லி சிறப்பு நிருபர் -: '


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ