மதுரை : மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக துவங்கிய 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் நேற்று முன்தினம் நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை, மேலஅனுப்பானடியைச் சேர்ந்த, வி.கே.குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் கார்த்திக், 32, தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் ஒரு மாதமாக தனக்கன்குளம் பகுதியில் மனைவி மீனாட்சியுடன் வசித்தார். இரு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரை சிறையில் உள்ள வெள்ளைக்காளி தரப்பு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். வி.கே.குருசாமி தரப்புக்கு தற்போது தளபதி போல் செயல்பட்டவர் காளீஸ்வரன்.போலீஸ் தரப்பில் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கரிசல்குளத்தை சேர்ந்தவர் வி.கே.குருசாமி. அதே பகுதி கழுத்தறியான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. இருவரும் உறவினர்கள். ஒரே காலகட்டத்தில் மதுரை வந்த இரு குடும்பத்தினரும், கீரைத்துறையில் அருகருகே வீடுகளில் வசித்தனர்.அரசியல் ஆசையால் குருசாமி தி.மு.க.,விலும், ராஜபாண்டி அ.தி.மு.க.,விலும் இணைந்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டுவதில் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ராஜபாண்டிக்கு உதவியாக இருந்தவர் அவரது அண்ணன் மகன் சின்ன முனீஸ். கடந்த 2003ல் குருசாமி தரப்பில் மிரட்டல் விடுத்த போது, மோதல் ஏற்பட்டது. அப்போது காயத்தில் துடித்த முனீஸ், 'என் உயிரை எடுத்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் அனைவரையும் வெட்டிக் கொலை செய்தே தீருவேன்' என, எச்சரித்தார். இதனால் குருசாமி தரப்பு அவரை கொலை செய்தது. இப்படி தான் துவங்கியது பகை. இந்த பகையில் காளீஸ்வரன் 22வது நபராக கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினார்.
குருசாமிக்கு 'டார்கெட்'
வெள்ளைக்காளி, அவரது கூட்டாளிகள் சிலர் சிறையில் இருந்தபடி குருசாமியை கொல்ல திட்டமிட்டனர். இதில், சிலர் போலீசில் சிக்கினர். 2023ல் மதுரை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு விமானத்தில் பெங்களூரு சென்றார் குருசாமி.அங்கு பனசாவடி பகுதியில் உணவகத்தில் டீ குடித்த அவரை, ஐந்து பேர் கும்பல் வெட்டி சாய்ந்தது. பலத்த காயங்களுடன் தப்பிய குருசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது வரை அவர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறுகிறார்.குருசாமியை கொல்ல முயன்ற வழக்கில் வெள்ளக்காளி ஆதரவாளர்கள் பிரசன்னா, கார்த்திக், குரு, விஜய் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, துப்பாக்கி வைத்திருந்ததாக குருசாமி, அவரது மகன் மணி உட்பட நான்கு பேர் மீது கீரைத்துறை போலீசார் வழக்கு பதிந்தனர். இருவர் கைது செய்யப்பட்டனர். தற்போது, குருசாமி வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜபாண்டி உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அவரது உறவினரான வெள்ளைக்காளி தரப்பு சிறையில் இருந்தபடி பகையை தொடர்கிறது. இருதரப்பும் நண்பர்கள், உறவினர்கள் மூலமே பழிக்குபழியாக கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர்.
என்கவுன்டர்
ராஜபாண்டி ஆதரவாளர் சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி ஆகியோர் பொதுமக்களை மிரட்டுவது, கொலை முயற்சியில் ஈடுபடுவதுமாக இருந்தனர். போலீசாருக்கே மிரட்டல் விடுத்தனர். குருசாமி, அவரது மகன் மணியை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டினர். மதுரை, சிக்கந்தர்சாவடி மாயக்கண்ணன் வீட்டில் பதுங்கியிருந்த சகுனி கார்த்திக், முத்து இருளாண்டியை போலீசார் கைது செய்ய முயன்றனர். போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற இருவரும், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் என்கவுன்டருக்கு குருசாமி தான் காரணம் என கருதியது வெள்ளைக்காளி தரப்பு. அதற்கு பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது.
நீளும் கொலை பட்டியல்
2003ல் ராஜபாண்டி ஆதரவாளர் முனீஸ் கொலை. இக்கொலையில் பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமூர்த்தி, வழுக்கை முனீஸ், வி.கே.குருசாமி, கணுக்கன் முனியசாமி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தற்போது குருசாமி மட்டுமே உயிருடன் உள்ளார் 2008ல் சின்ன முனீஸ் கொலையில் தொடர்புடைய வழுக்கை முனீஸை, ராஜபாண்டி உறவினர் சப்பாணி முருகன் கொலை செய்தார் குருசாமி தரப்பால் கொலையான சின்ன முனீஸ் தம்பி வெள்ளைக்காளி வருகைக்குப்பின், ராஜபாண்டி தரப்பு பலம் பெற்றது. தொடர்ந்து, சின்ன முனீஸ் கொலையில் தொடர்புடைய குருசாமி உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தியை, 2008ல் வில்லாபுரத்தில் வெள்ளைக்காளி தரப்பு கொலை செய்தது. இதில், வெள்ளைக்காளி, உறவினர் சகுனி கார்த்திக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சிறை சென்றனர். சிறையில் முத்து இருளாண்டி என்பவருடன் வெள்ளைக்காளிக்கு நட்பு ஏற்பட்டது. பின், மூவரும் ஜாமினில் வந்தனர் 2013ல் வெங்காய மார்க்கெட்டில் சின்ன முனீஸ் கொலையில் தொடர்புடைய குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டி கொலை செய்யப்பட்டார். இதில், வெள்ளைக்காளி, சகுனி கார்த்திக், முத்து இருளாண்டியை போலீசார் கைது செய்தனர் குருசாமி தரப்பு, சகுனி கார்த்தியின் தாய் மாமன் மயில் முருகனை, அதே ஆண்டில் நடனா தியேட்டர் அருகே கொலை செய்தது. இதில், குருசாமி மகன் மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் பழிக்குப்பழியாக 2015ல் குருசாமி மகன் மணியின் நண்பர் குப்பு என்ற முனியசாமியை கொன்றது வெள்ளைக்காளி, ராஜபாண்டியின் மகன் தொப்பிலி முனியசாமி தரப்பு 2016ல் குருசாமியின் மகள் விஜயலட்சுமியின் கணவர் எம்.எஸ்.பாண்டியனின் தம்பி காட்டுராஜா, பஸ்சில் சென்ற போது கமுதி அருகே, வெள்ளைக்காளி தரப்பு பஸ்சில் வைத்து கொலை செய்து போலீசில் சரணடைந்தது இதற்கு பழிவாங்க குருசாமியின் மகன் மணி, 2017ல் ராஜபாண்டியின் மகன் தொப்பிலி முனுசாமியை கமுதிக்கு கடத்தி, பைக்குடன் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி சாம்பலாக்கினார். இதில், முனுசாமியின் சாம்பல் கூட கிடைக்கவில்லை. இவ்வழக்கில் மணி, கணுக்கன் கைது செய்யப்பட்டனர் இதற்கு பின், 2017ல் வெள்ளைக்காளி தரப்பைச் சேர்ந்த சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர் குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை அரசு மருத்துவமனையில் வைத்து வெட்டிக் கொன்றனர் 2018ல் கீழ்மதுரையில் ரேஷன் கடையில் வைத்து குருசாமி மருமகன் எம்.எஸ்.பாண்டி என நினைத்து, அவரது உறவினர் முனியசாமியை கொலை செய்தனர். இந்த வழக்கிலும் வெள்ளைக்காளி ஜாமின் பெற்றார் தொடர்ச்சியாக, 2019ல் குருசாமி மருமகன் எம்.எஸ்.பாண்டி தேர்தல் பணியில் ஈடுபட்டபோது, வெள்ளைக்காளி தரப்பால் ஓட ஓட விரட்டி கொல்லப்பட்டார் வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த குல்லா என்ற முத்துப்பாண்டியை 2020ல் குருசாமி தரப்பு கொலை செய்தது. இதில், மாடு மணி என்பவர் கைது செய்யப்பட்டார் 2020ல் குருசாமி மருமகன் எம்.எஸ்.பாண்டி கொலையில் தொடர்புடைய சடையாண்டி மகன் முனியசாமியை, குருசாமி தரப்பை சேர்ந்த வகுத்தாலை என்ற மணி மிரட்டினார். இதனால் வகுத்தாலை என்ற மணியின் நண்பர் முருகானந்தத்தை ரோட்டில் வைத்து தலையை அறுத்து வெள்ளைக்காளி தரப்பு கொலை செய்தது 2025 மார்ச் 23ல் குருசாமி சகோதரி மகன் காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டார். இந்த இரு குடும்பத்து பகையில் நடந்து வரும் இந்த கொலைகளின் தொடர்ச்சியாக, இரு தரப்பிலும் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என, இதில் சம்பந்தப்பட்ட மேலும், ஆறு பேர் வெவ்வேறு கால கட்டங்களில் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.