தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம்: முதல்வர் ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
விவசாயிகளை தெருவில் நிறுத்தும் வகையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டிஷார் ஆட்சியின்போது, 1894ல் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013 வரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சட்டத்தின் வாயிலாக, அரசுக்கு நிலம் தேவைப்பட்டால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அதை கையகப்படுத்திக்கொள்ளும். நியாயமான இழப்பீடு அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் அரசே நிர்ணயிக்கும். இதில் உடன்பாடு இல்லையென்றால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்ல வேண்டும். நிலத்தையும் இழந்து, நிலத்துக்கான பணத்தையும் பெற முடியாமல் வழக்கு விசாரணை நீளும். எனவே, நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு, மறுவாழ்வுக்கான உத்தரவாதம் உள்ளிட்டவற்றுக்காக, கடந்த 2013ல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், 2023ல் தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டு வந்தது. அதாவது, 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். நிபுணர் குழு முடிவு ஒரு திட்டம் மாநிலத்துக்கு முக்கியமானது என்று நினைத்தால், அதை சிறப்புத் திட்டமாக அரசு அறிவிக்கும். நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாலும், நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது. இதில், தனியாருக்குச் சொந்தமான நிலம் இருந்தாலும் கையகப்படுத்தப்படும் என்பதால் ஆபத்தான இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன். தொடர்ந்து போராடி வருகிறோம்! நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் வாயிலாக, ஆறு, ஏரி, குளம், நீர்நிலைகளின் வகைப்பாட்டை மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தை தாரைவார்க்க வகை செய்யப்பட்டுள்ளது. நிலம் மட்டுமல்ல, வீடு இருந்தால் அவற்றையும் பறித்துக் கொள்ள சட்டம் வகை செய்துள்ளது. அதனால் இச்சட்டத்தை, தமிழக அரசு, உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்தையும், அதற்கான சட்ட மசோதா சட்டசபையில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதையும் எதிர்த்து, கடந்த 2024ம் ஆண்டிலிருந்து பல கட்டங்களாக போராடி வருகிறோம். ஆனால், தமிழக அரசு போராட்டங்களை கொஞ்சமும் மதிக்காமல், சட்டத்தை நிறைவேற்றி மக்களை வதைப்பதிலேயே குறியாக இருக்கிறது. - பி.ஆர்.பாண்டியன் தலைவர், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு - நமது நிருபர் -