சென்னை: தமிழகத்தில் வீடுகள், விவசாயம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால், கடந்த எட்டு ஆண்டுகளில் அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.எனவே, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களுக்கு, 100 யூனிட் இலவச மின்சார சலுகை நிறுத்தம் குறித்து, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.அதிகரிப்பு
தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின் வினியோகம் செய்கிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும், கைத்தறி, விசைத்தறிக்கு, இலவசம் மற்றும் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்குகிறது. அதன்படி, 2015 - 2016 வரை அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து, மின் கட்டண மானியமாக ஆண்டுக்கு, 7,700 கோடி ரூபாய் வரை செலவானது.கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்து, மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார்.இதனால், அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து, மின் கட்டண மானிய செலவு, 2016 - 17ல் முதல் முறையாக, 10,484 கோடி ரூபாயாக அதிகரித்தது.இதுவரை வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. புதிய மின் இணைப்பு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், அரசின் மானிய செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.அதன்படி, 2016 - 17ல் இருந்து, 2023 - 24 வரை எட்டு ஆண்டுகளில், இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக, 1.02 லட்சம் கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளது.மறுபரிசீலனை
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசும், மின் வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வசதி படைத்தவர்களின் வீடுகளுக்கு மட்டும், 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. 2019 லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தோல்வியால், அதை செயல்படுத்தவில்லை.தற்போது, ஒரு வீட்டிற்கு இரு மாதங்களுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் அரசுக்கு, 460 ரூபாய் செலவாகிறது. இந்த சலுகை, 2.40 கோடி வீடுகளுக்கு கிடைக்கிறது.மின் கட்டணம் உயர்வுக்கு ஏற்ப, அரசின் மானிய செலவும் தொடர்ந்து அதிகரிக்கிறது. எனவே, ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகள் உட்பட வசதி படைத்தவருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டுமா என்பதை அரசு மறுபரிசீலனை செய்து, தகுதியானவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.வசதி படைத்தவர்களுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதால், நிதி நெருக்கடி குறையும். இது, மின் கட்டணத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மின் கட்டண மானியமாக
அரசு வழங்கிய நிதிஆண்டு - ரூபாய் கோடியில்---------------------2016/ 17 - 10,4852017/ 18 - 12,2872018/ 19 - 12,2572019/ 20 - 12,6162020/ 21 - 12,8322021/ 22 - 13,4952022/ 23 - 13,7832023/ 24 - 14,976----------------------------------மொத்தம் - 1.02 லட்சம் கோடி ரூபாய்------------------------------------எந்தெந்த பிரிவுக்கு எவ்வளவு மானிய செலவு?பிரிவு - ரூபாய் கோடியில்----------------------வீடு - 7,015விவசாயம் - 6,832குடிசை வீடுகள் - 312வழிபாட்டு தளங்கள் - 19விசைத்தறி - 550கைத்தறி - 15கூட்டுறவு சங்கங்கள் - 60சிறு, குறுந்தொழில்கள் - 150***