உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேதாரண்யம் முல்லை, நத்தம் புளிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி!

வேதாரண்யம் முல்லை, நத்தம் புளிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேதாரண்யம் முல்லைப்பூ, நத்தம் புளி உள்ளிட்ட ஐந்து வேளாண் விளைபொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெறுவதற்கான பணிகளை, வேளாண் விற்பனை வாரியம் துவக்கியுள்ளது.புவிசார் குறியீடு என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தியாகும் பொருளுக்கான சிறப்பு அடையாளமாக கருதப்படுகிறது. அத்துடன், அந்த பொருளின் தனித்துவ குணங்கள் காரணமாக, சர்வதேசம் மற்றும் தேசிய அளவில், அதற்கு நுகர்வோர் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது.வேளாண் விளைபொருட்கள், உணவுகள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, இந்திய அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் சார்பில், புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.அவ்வாறு தமிழகத்தில் தனித்துவம் பெற்ற வேளாண் பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெறுவதற்கான பணிகளை, வேளாண் துறையின் கீழ் இயங்கும் தமிழக வேளாண் விற்பனை வாரியம் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, 35 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற, ஏற்கனவே விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது.அதில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம் என, ஏழு வேளாண் விளைபொருட்களுக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.இதைத்தொடர்ந்து, கடலுார் மாவட்டம் நல்லுார் வரகு, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் முல்லைப்பூ, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன. இதற்காக, விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, வேளாண் விற்பனை வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புவிசார் குறியீடு கிடைப்பதால், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது எளிதாகிறது. அவற்றின் தேவை மற்றும் ஏற்றுமதி அளவும் அதிகரிக்கிறது. விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, இது வழிவகுக்கும்.இதைக் கருத்தில் வைத்து, தமிழகத்தில் உற்பத்தியாகும் பல வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற, வேளாண் துறை முயற்சித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

5 பொருட்களின் சிறப்பு அம்சங்கள்

நல்லுார் வரகு:

இது, வறட்சியை தாங்கி வளர்கிறது. ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. இரும்பு, கால்சியம் தாதுக்கள் நிறைந்துள்ளது

வேதாரண்யம் முல்லை:

கடலோர பகுதிகளில் உப்பு காற்றை தாங்கி வளர்கிறது. அதிக நறுமணம் உடையது. நீண்ட நேரம் மணத்தை தக்கவைக்கும் இயல்பையும் கொண்டுள்ளது

நத்தம் புளி:

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை உடையது. அதிக மகசூல் கிடைக்கிறது. இதன் கொட்டைகள் மலேரியா மற்றும் ரத்தம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாக பயன்படுகின்றன.

ஆயக்குடி கொய்யா:

இனிப்பு சுவை மற்றும் மிகுந்த மணம் உடையது. பழத்தின் சதை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆண்டு முழுதும் மகசூல் கிடைக்கும்

கப்பல்பட்டி கரும்பு முருங்கை:

கரும்பை போன்று நீண்டதாகவும், தடிமனாகவும் இருக்கும். கடுமையான வறட்சியை தாங்கி வளரும். நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. இதய நோய்கள், ரத்த சோகை, எலும்பு தொடர்பான நோய்களுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

xyzabc
ஜூலை 26, 2025 20:05

வேதாரண்யம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என நம்புவோம்.


Ramkumar Ramanathan
ஜூலை 26, 2025 14:56

benifit of getting GI tag for our products should be taught to our farmers and manufacturers


சின்னசேலம் சிங்காரம்
ஜூலை 26, 2025 14:53

சரி குறியீடு வாங்கினால் விவசாயிகளுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள்


சமீபத்திய செய்தி