உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்

'மதுரை திருப்பரங்குன்றம் மலையை, திருப்பரங்குன்றம் மலை, என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும்; ஆடு, கோழி பலியிடக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை என, ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இதுபோல் பரமசிவம் என்பவர் மற்றொரு மனு செய்தார்.ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்' என, பொதுநல மனு தாக்கல் செய்தார்.திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், 'தர்கா, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.திருப்பரங்குன்றம் ஒசீர்கான், 'மலையிலுள்ள தர்கா மற்றும் மசூதி நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிடக்கூடாது. அப்பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள், 'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்று என அறிவிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.இவ்வழக்குகளை, நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு ஏற்கனவே விசாரித்தது.அப்போது கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:ஹிந்து அமைப்பு 'ஸ்கந்த மலை' முஸ்லிம் அமைப்பு 'சிக்கந்தர் மலை' சமண சமூகம் 'சமணர் குன்று' எனவும், உள்ளூர் மக்கள் இதை 'திருப்பரங்குன்றம் மலை' எனவும் அழைக்கின்றனர்.மலை உச்சியிலுள்ள சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதும், அதை வழிபாட்டு முறையாக உட்கொள்வதும் பாரம்பரியமாக முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில், பாண்டிமுனீஸ்வரர் கோவில், மலையாண்டி கருப்பசாமி மற்றும் பிற முனியப்பன் கோவில்களில் விலங்குகளை பலியிடுவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையில், சமண கோவில்களும் உள்ளன.அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் அனைத்து மதங்களாலும் நடைமுறையில் உள்ள அதே நடைமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. பல்வேறு மதக்குழுக்களிடையே மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்.வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை போராட்டம், ஊர்வலத்தை கட்டுப்படுத்த இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் குறிப்பிட்டார்.தர்கா நிர்வாகம் தரப்பில், 'தர்கா அமைந்துள்ள பகுதி, கொடிமரம் மற்றும் அதற்கு செல்லும் பாதை, புது மண்டபம், நெல்லித்தோப்பு தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. மலையின் ஏனைய பகுதிகள் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என, மதுரை சார்பு நீதிமன்றம், 1923ல் உத்தரவிட்டது. இதை ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1931ல் லண்டன் பிரிவு கவுன்சிலின் ஐந்து நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இதனடிப்படையில் நுாறாண்டுகளுக்கு மேல் அவரவருக்குரிய பகுதிகளில் வழிபாடு நடத்தப்படுகிறது. அவரவருக்கு எல்லைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து யாரும் வழக்கு தொடரவில்லை,' என குறிப்பிட்டது.கோவில் நிர்வாகம்:மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி ஜெ.நிஷாபானு ஜூன் 24ல் பிறப்பித்த உத்தரவு:திருப்பரங்குன்றம் மலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, ஒரு சிறிய முஸ்லிம் வழிபாட்டுத்தலம் மற்றும் ஜைன கோவில்கள் உள்ளன என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. சுப்பிரமணிய சுவாமி கோவில் தேவஸ்தானத்தின் உரிமைகள் தொடர்பான சர்ச்சை, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை முழுதும், 33 சென்ட் தவிர, முருகனுக்கு சொந்தமானது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் உரிமைகளை சிவில் நீதிமன்றங்கள் தீர்மானித்துள்ளன. இவை ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. தர்காவில் விலங்குகளை பலியிடுவது பழங்காலத்திலிருந்தே முஸ்லிம்களால் மட்டுமல்ல, பிற சமூகங்களாலும் ஒரு மத நடைமுறையாக பின் பற்றப்படுகிறது என்பது தெளிவாகிறது. இன்று வரை, தமிழகத்திலுள்ள மத வழிபாட்டுத் தலங்களில் விலங்குகளை பலியிடும் பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை. திருப்பரங்குன்றம் மலையின் தெற்குப் பக்கத்தில் தர்கா அமைந்துள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. எனவே, ஒரு சமூகத்தின் எந்த மத நடைமுறைகளும் மற்றொரு சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட இடங்களை பாதிக்காது. முழு திருப்பரங்குன்றம் மலையும் ஒரு நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிக்கந்தர் தர்காவிற்கு பின்னால் உள்ள சமணப் படுக்கைகளில் சிலர் சட்டவிரோதமாக பச்சை எனாமல் பெயின்ட் பூசியதற்காக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்தனர். மத நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்கும் விலங்கு பலியிடுவதை தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், அத்தகைய செயல்பாட்டைத் தடுக்கும் எந்த உத்தரவையும் இந்நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. சடங்குகள், வழிபாட்டு முறை மதத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகக் கருதப்படுகின்றன. அவை உணவு, உடை விஷயங்களுக்கு கூட நீட்டிக்கப்படும். அத்தகைய நடைமுறைகளில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களைப் பொறுத்தவரையிலும், முஸ்லிம்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுக்கு உட்பட்டதாக இருப்பதால், எந்தவொரு தனிநபருக்கோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது சங்கத்திற்கோ சொந்தமானது அல்ல. மாறாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானது. கோவிலுக்குரிய உரிமைகள் மீறப்பட்டதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. பொது அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பேண வேண்டும். அதை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்கள், அமைப்புகள் மீது நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என கூறினார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கும் போது, ​திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக கோவிலுக்கு ஆதரவாக ஒரு உத்தரவு,தெருக்கள் தொடர்பாக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதகமாக ஒரு உத்தரவு, நெல்லித்தோப்பு தொடர்பாக தர்காவுக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு இருப்பதை ஒப்புக்கொண்டனர். அனைத்து தரப்பினரும் பொதுநல்லிணக்கத்தைக் கொண்டிருக்க விரும்புவதாக தெரிவித்தனர். மேற்கண்ட நீதிமன்ற உத்தரவுகளை மீறுவது பொது நல்லிணக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும்.கோவில் நிர்வாகம், '2023 ஏப்., 22ல் ரம்ஜானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. 2023 ஜூன் 29ல் பக்ரீத் பண்டிகைக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அந்தக் காலத்திலிருந்தே அந்த நடைமுறை இல்லை. அது சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்படுகிறது' என அறிக்கை தாக்கல் செய்தது. இதிலிருந்து, ரம்ஜான் அல்லது பக்ரீத் பண்டிகையின் போது தொழுகை நடத்தப்படாதது தெளிவாகிறது. மேலும் இது புதிதாகத் துவங்கிய நடைமுறையாகும். அதை அனுமதிக்க முடியாது.

மலையின் பெயரை மாற்றும் முயற்சி

சிக்கந்தர் மலை என்ற கூற்றைப் பொறுத்தவரை, 1920ல் நீதிமன்றம் மலையின் பெயரை 'திருப்பரங்குன்றம் மலை' என திட்டவட்டமாகக் கூறியுள்ளது. வருவாய்த்துறை பதிவுகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரில் உள்ளன. மலைக்கு 'திருப்பரங்குன்றம் மலை'என்று பெயரிடப்பட்டபோது, ​'மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அரசியல் கட்சி அமைப்பு' என தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா மசூதியில் விருந்து நடத்தப் போவதாக ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர். அதில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்காக சமபந்தி விருந்து நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, நிச்சயமாக குறும்புத்தனமானது மற்றும் திருப்பரங்குன்றம் மலையின் பெயரை மாற்றும் முயற்சியாகும்.விலங்கு பலியிடுவதை பொறுத்தவரை, தர்காவின் கூற்று என்னவெனில், கந்துாரி என்பது நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் ஒருவகையான விலங்கு பலியாகும். அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது கோவில் மற்றும் சில மனுதாரர்களின் கருத்து. தர்கா கந்துாரி விலங்கு பலி நடைமுறையைப் பின்பற்றியிருந்தால், அதை நிரூபிக்க சில ஆதாரங்கள் இருக்கும். தர்கா நிர்வாகம் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

புனிதத்தை பாதுகாக்கும் பக்தர்கள்

சன்னிதி தெருவில் இறைச்சிக்கடை இல்லை. கோவிலிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இறைச்சிக்கடை இல்லை. 300 மீட்டருக்கு மேல் பிராய்லர் கோழிக்கடை இல்லை. உண்மையில் திருப்பரங்குன்றத்திலுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் அசைவ உணவு சமைப்பதை அனுமதிப்பதில்லை. இந்த உண்மைகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் புனிதத்தை பக்தர்கள் எவ்வாறு பாதுகாக்கின்றனர் என்பதைக் கூறுகின்றன. கந்துாரி விலங்கு பலி நடைமுறைக்கு எதிர்ப்பு உள்ளது. ஹிந்து மதத்திலும் விலங்கு பலியிடும் நடைமுறை இருப்பதாக ஒரு எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அழகர்கோவில் ஒரு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. நிச்சயமாக அது பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில்தான் நிலவுகிறது; அழகர்கோவிலில் அல்ல. அழகர் தெய்வத்திற்கு அல்ல. மேலும், பழமுதிர்ச்சோலையிலுள்ள சோலைமலை முருகன் கோவிலுக்கும் அல்ல. அவ்வாதம் ஏற்புடையதல்ல.குறும்பு மற்றும் தீங்கிழைக்கும் செயல் சிக்கந்தர் தர்காவில் ஆடு மற்றும் கோழியை பலியிடுவது குறித்து வெளியிட்ட துண்டுப்பிரசுரம் நிச்சயமாக குறும்பு மற்றும் தீங்கிழைக்கும் செயல் என, இந்நீதிமன்றம் கருதுகிறது. இது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும். தர்காவிற்கு வந்தவர்கள் சமண குகைகளில் பச்சை வண்ணம் பூசியுள்ளனர். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வழி என குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளிலும் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது; இது கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும். சிக்கந்தர் மலை என்றோ, சமணர் குன்று என்றோ அழைக்கக்கூடாது. மலையில் எந்த விதமான கல்குவாரி பணிக்கு, தடை விதிக்கப்படுகிறது. ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகளின் போது கந்துாரி விலங்குகளை பலியிடுவது மற்றும் பிரார்த்தனை செய்வது நடைமுறையில் இருந்ததை நிறுவ தர்கா நிர்வாகம் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும். இருப்பினும், சந்தனக்கூடு திருவிழாவை தர்கா நடத்திக் கொள்ளலாம்.காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு, மாலை 6:00 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கக்கூடாது. இதனால் மலை மேல் மின்சார வசதி செய்யப்பட வேண்டியதில்லை. சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்தால் மலை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே அந்த நிவாரணங்களையும் வழங்க இயலாது.தர்காவின் புனரமைப்பு பணிகளுக்காக தர்காவின் அறங்காவலர் தொல்லியல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று பணியை மேற்கொள்ளலாம். சோலை கண்ணன், பரமசிவன், ராமலிங்கம் மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஓசீர்கான் மனு பைசல் செய்யப்படுகிறது. இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

மாறுபட்ட கருத்து அடிப்படையில் இரு நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்ததால் தகுந்த உத்தரவிற்காக இதை, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். தலைமை நீதிபதியின் பரிந்துரைப்படி மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அவர் பரமசிவம், சோலை கண்ணன், ராமலிங்கம் மனுக்களை விசாரித்தார்.பரமசிவம், சோலை கண்ணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், கார்த்திகேய வெங்கடாஜலபதி கூறியதாவது: திருப்பரங்குன்றம் கோவில் ஒரு குடைவரை கோவில். சிலைகளை மலை முழுவதிலிருந்தும் பிரிக்க முடியாது. முழு மலையும் புனித மலையாக கருதப்படுகிறது. இது ஒரு லிங்கமாக வணங்கப்படுகிறது. மலையைச் சுற்றி கிரிவலம் செல்வது பழங்காலத்திலிருந்து உள்ள நடைமுறை.

விலங்குகளை பலியிடும் நடைமுறை

மதுரை மாவட்ட நீதிமன்றம்,'நெல்லித்தோப்பு மற்றும் தர்கா பகுதியைத் தவிர முழு மலையும் கோவிலுக்குச் சொந்தமானது,' என, 1920ல் சிவில் வழக்கில் உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பில் விலங்குகள் பலியிடப்பட்டதற்கான குறிப்பு இல்லை.காசி விஸ்வநாதர் கோவிலும் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் ஆகம கோயில்கள். எப்போதும் அங்கு விலங்கு பலியிடப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. விலங்குகளை பலியிடும் நடைமுறை, 2024ல் மட்டுமே துவங்கியது. அதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து பக்தர்களால் எதிர்ப்பு எழுந்தது என்றார்.கோவில் தரப்பில் வழக்கறிஞர் மனோகர் கூறியதாவது:மலைக்கு பாதிப்பு ஏற்படுத்த தர்கா நிர்வாகம் அல்லது முஸ்லிம்கள் முயற்சி மேற்கொண்ட போதெல்லாம், கிராம சபையால் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன. கலெக்டர் மற்றும் போலீசாரிடம் கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. ஜன., 30ல் நடந்த அமைதிக் குழு கூட்டத்திற்கு, கோவிலின் அறங்காவலர்கள் அல்லது செயல் அலுவலர் அழைக்கப்படவில்லை.சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி முழு மலையும் கோவிலுக்குச் சொந்தமானது. அது ஒரு புனித மலையாக கருதப்பட்டு, ஹிந்துக்களால் வழிபடப்படுகிறது. அதை ஒரு போதும் சிக்கந்தர் மலை என்று அழைக்கவோ அல்லது பெயரிடவோ முடியாது. இதற்கு சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உள்ளன.நெல்லித்தோப்பு பகுதியைப் பொறுத்தவரை, அங்கு மசூதி அல்லது தர்கா இல்லை. சில கல்லறைகளைப் பாதுகாக்க ஒரு தற்காலிக தகரக்கொட்டகை மட்டுமே உள்ளது. அங்கு வழிபாடு நடந்தது என்பதற்கு எந்த பதிவுகளும் இல்லை. விலங்கு பலியிட அனுமதித்தால் ​​சிலர் ஆடுகள் அல்லது கோழிகளை பலியிடுவர். மலையின் புனிதம் பாதிக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பழங்கால நினைவுச்சின்னப் பாதுகாப்புச் சட்டப்படி மத்திய தொல்லியல் துறை 1908ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் மலையில் தெற்குப் பகுதியில் உள்ள பாறை குகைகள் மற்றும் கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டன. இதன் பரப்பளவு, 50 சென்ட்.மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு பின்னால் உள்ள மலைகளின் மேற்குச் சரிவில் பஞ்ச பாண்டவர் படுகைகள், குகை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக, 1923ல் அறிவிக்கப்பட்டது. இந்த 2 அறிவிப்புகளும் சிக்கந்தர் தர்கா இருப்பதையும், மலையின் பெயர் திருப்பரங்குன்றம் மலை என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. திருப்பரங்குன்றம் மலையைப் பற்றி சிக்கந்தர் மலை என்று எந்தக் குறிப்பும் இல்லை.சிவில் நீதிமன்ற உத்தரவில், '​நெல்லித்தோப்பு பகுதி வெறும் 33 சென்ட் பரப்பு கொண்டது. தர்காவும் குறைந்த அளவு பரப்பு கொண்டுள்ளது' என்பதை வெளிப்படுத்துகிறது. அது திருப்பரங்குன்றம் மலையின் முழுப் பகுதி, கிரிவீதி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைத் தவிர்த்து, நெல்லித்தோப்பு, புது மண்டபம் உட்பட மற்றும் நெல்லித்தோப்பிலிருந்து மலையின் உச்சியில் உள்ள தர்கா வரை செல்லும் படிக்கட்டுப்பாதையான தர்கா மற்றும் முஸ்லிம்களின் கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி வரை ஆகியவற்றின் உரிமையாளர் திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் என வெளிப்படுத்துகிறது.நெல்லித்தோப்பு, படிக்கட்டுப் பாதை மற்றும் மலையின் முழு உச்சிப்பகுதியான தர்கா மற்றும் கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் உரிமையாளராக முஸ்லிம்கள் உள்ளனர். இதை 1931ல் பிரிவி கவுன்சில் உறுதி செய்தது.பிரிவி கவுன்சில் உத்தரவில்,'இம்மலைக்குன்று சுவாமிமலை அல்லது கடவுளின் மலை என அரசு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது' என உள்ளது. நீதிமன்றத்தீர்ப்பின்படி 170 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், 33 சென்ட் நெல்லித்தோப்பு பகுதியும், சிறிது பகுதி தர்காவும் தவிர, மீதமுள்ள முழு மலையும் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்பது தெளிவாகிறது.பிரிவி கவுன்சில், 'கோவிலின் விக்ரகம் மலையின் ஒரு பகுதியாகவே கருதப்படுவதால் பக்தர்கள் மலையைச் சுற்றி 'கிரிவீதியை' சுற்றி வருகின்றனர். இம்மலைக்குன்று ஹிந்து சமூகத்தினரால் ஒரு லிங்கமாக வணங்கப்படுகிறது. இத்தனித்த வடிவத்திற்கு மதுரை தான் பிறப்பிடம் என்று நம்புவதற்கு சில காரணங்கள் உள்ளன' என குறிப்பிட்டுள்ளது. முழு மலைக்குன்றுமே சிவனாக கருதப்பட்டு, ஹிந்து பக்தர்களால் கிரிவலம் நடத்தப்படுகிறது. இம்மலையை 'சிக்கந்தர் மலை' என பெயரிட்டால், கிரிவலம் செய்யும் ஹிந்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும்.வக்ப் வாரியம், 'அனைத்து மசூதிகள் /தர்காக்களிலும் விலங்கு பலியிடும் சடங்கு நடைமுறையில் இல்லை' என ஒப்புக்கொள்கிறது. வழக்கில், சிக்கந்தர் தர்காவில் இச்சடங்கு முஸ்லிம்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக நடைமுறை என்று கூறப்படவில்லை.விலங்கு பலியிடுவதற்கு கோவில் நிர்வாகத்தால் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஒரு தரப்பினர் பழங்காலத்திலிருந்தே ஒரு நடைமுறை இருப்பதாகக் கூறி, மறுபுறம் அதை மறுத்தால், அத்தகைய வழக்கமான நடைமுறையை வலியுறுத்தும் தரப்பினர் அதை நிறுவ சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கோவில்களிலும் விலங்குகள் பலியிடுவது நடக்கிறது. தர்காவில் இதுபோன்ற நடைமுறைக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.தர்காக்களைப் போலவே பல்வேறு கோவில்களிலும் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் சில கோவில்களில் பின்பற்றப்படும் நடைமுறையை நம்பியிருக்க முடியாது. குறிப்பாக தர்கா மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மலை ஹிந்து பக்தர்களால் கடவுளாக கருதப்படுகிறது. அத்தகைய வழக்கமான நடைமுறை நெடுங்காலமாக நிலவி வருகிறது என நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் வழங்கப்படாதவரை, பிற கோவில்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஒரு காரணமாகக் கூற முடியாது.சமைக்க அனுமதிக்க முடியாதுஜன., 30ல் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. அதற்கு தர்கா நிர்வாகமோ அல்லது கோவில் நிர்வாகமோ அழைக்கப்படவில்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னையைத் தடுப்பதற்காக மட்டுமே அத்தகைய கூட்டம் நடந்தபட்டது தெளிவாகிறது. விலங்குகள் பலியிடுவது தொடர்பான பிரச்னையை முடிவு செய்ய அல்ல. அந்த அமைதிக் குழுவின் அறிக்கையை நம்ப முடியாது.இருப்பினும், திருப்பரங்குன்றம் மலையில் விலங்கு பலியிடும் வழக்கமான நடைமுறை குறித்து, சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நெல்லித்தோப்பு பகுதியில் எந்தவொரு விலங்கையும் பலியிட, சமையல் செய்ய, அசைவ உணவுகளை எடுத்துச் செல்ல அல்லது பரிமாற அனுமதிக்க முடியாது.ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின்போது நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர். மேலும் அவர்கள் பாரம்பரிய படிக்கட்டு பாதையை அசுத்தப்படுத்தவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது.பரமசிவம், சோலை கண்ணன் மனுக்களை அனுமதிக்கும் நீதிபதி எஸ்.ஸ்ரீமதியின் முடிவிற்கு உடன்படுகிறேன். ராமலிங்கம் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெ.நிஷாபானுவின் முடிவில் நான் உடன்படுகிறேன் என உத்தரவிட்டார்.

பாராட்டு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முருக கடவுளுக்காகவும், பக்தர்களுக்காகவும் தொடர்ந்து பல இன்னல்களையும் தாண்டி வெற்றி பெற்ற ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சோலை கண்ணன், இந்த வழக்கில் வாதாடி ஜெயித்த நமது சமாஜம் மூத்த ஆலோசகர் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். ஹரிஹர முத்துமாநில தலைவர், தமிழ்நாடு பிராமண சமாஜம்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி