நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகு தான் துறவி: தேசபக்தியை முன்னிறுத்திய அபிநவ வித்யாதீர்த்தர்
நம் தாய் திருநாட்டில், எண்ணற்ற துறவியரும் மனதால் உயர்ந்த மகான்களும் வாழ்ந்து, வழிவழியாக நாம் தர்மத்தை கடைப்பிடிக்க காரணமாக இருந்தனர். அப்படிப்பட்ட துறவியரில் மிகவும் முக்கியமானவர் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர். என்றென்றும் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அவர் நான்கு பீடங்களை உருவாக்கினார். அவற்றில், தென் பாரத மக்களுக்காக, சிருங்கேரி சாரதா பீடத்தை தோற்றுவித்தார். சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக, 1954 முதல் 1989 வரை அருள்பாலித்தவர், ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். தீபாவளி திருநாளன்று பிறந்த அவருடைய 108வது ஜெயந்தி விழா, நாளை சிருங்கேரியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொன்னான தருணத்தில், தேசபக்தியின் உன்னதமான உதாரணமான அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம்.ஜீவன் முக்தி கடந்த 1917ல் பெங்களூரில், வெங்கடலக்ஷ்மி அம்மாள் - -ராமா ஷாஸ்திரி தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ரீநிவாசன். அவருக்கு, சிருங்கேரியில் உப நயனம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கேயே தங்கி படிக்க விருப்பம் தெரிவித்த ஸ்ரீநிவாசனின் கோரிக்கையை, அப்போது பீடாதிபதியாக அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாசுவாமிகள் ஏற்றுக்கொண்டார். பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற ஸ்ரீநிவாசன், தன் 13 வயதிலேயே, சிருங்கேரி புண்ய தலத்தில், துறவறம் ஏற்றார். துறவறம் பெற்ற உடனேயே, யோகம் பயில ஆரம்பித்த அவர், அஷ்டாங்க யோகத்தின்படி நிலைகளை வேகமாக கடந்து, அதன் உச்ச நிலையான நிர்விகல்ப ஸமாதியில் நிலைத்து, தமது 18 வயதுக்கு முன்னரே ஜீவன் முக்தரானார். பின்னர், தமது குருவின் வழிக்காட்டுதல்படி மீமாம்சம், தர்க்கம், வேதாந்தம் உள்ளிட்ட சாஸ்திரங்களை கற்று பாண்டித்தியம் அடைந்தார். தர்ம பிரசாரம் சுதந்திர போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியில் நம் நாட்டின் கலாசாரத்தை அடியோடு அழிப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பொருட்டு, கல்வித் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர். குறிப்பாக, ஸமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும், அம்மொழியை மக்கள் கைவிடுவதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக, தர்ம ரீதியாகவும் பெறும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயரால் சுரண்டி துாக்கியெறிந்த வெற்று பாத்திரமாக நம் தாய் நாடு மாறியிருந்தது. சுதந்திரத்திற்கு பின், 1954ல் சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் பொறுப்பேற்றார். அப்போது, கலாசார ரீதியாகவும் தர்ம ரீதியாகவும் சுரண்டப்பட்டு இருந்த தாய் நாட்டில் மீண்டும் தர்மத்தை நிலைநிறுத்த ஸங்கல்பம் செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ஆதிசங்கரர் போலவே பாரதம் முழுதும் மூன்று முறை யாத்திரை மேற்கொண்டு, மக்களிடையே தர்ம பிரசாரம் செய்தார். தமது முதல் விஜய யாத்திரையை, தென் மாநிலங்களில், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மேற்கொண்டார். அயராது, தன் நலம் கருதாது கிராமம் கிராமமாக சென்று தர்ம பிரசாரம் செய்த தோடு, நலிந்த வேத பாடசாலைகளை மீட்டெடுத்து, புதிய பாடசாலைகளையும் உருவாக்கினார். அவரது காலத்தில், சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், சிருங்கேரியை அணுகுவது மிகவும் கடினமாக இருந்தது. பாரதம் முழுதும் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் சில கிளை மடங்கள் மட்டுமே இருந்தன. அதனால், பாரதமெங்கும் மக்கள் பயன்பெறும் வகையில், பல புதிய கிளை மடங்களை உருவாக்கினார். குறிப்பாக, சென்னையில் மட்டுமே நான்கு கிளை மடங்களும்; கோயம்புத்துார், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆலயத் தோடு கூடிய கிளை மடங்களும் ஏற்படுத்தினார். இவை, தர்மம் மற்றும் பாரதத்தின் பண்பாட்டை நிலைநிறுத்த இன்றும் பணியாற்றி வருகின்றன. தமது முதல் விஜய யாத்திரை முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே, இரண்டாவது விஜய யாத்திரையை மேற்கொண்டார். வட மாநிலம், தென் மாநிலம் என, முழு பாரதத்திலும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தர்ம பிரசாரம் செய்தார். அந்த யாத்திரையின் போது, 1967ல், அண்டை நாடான நேபாள மன்னரின் அழைப்பின் பேரில் அந்நாட்டில் தங்கி தர்ம பிரசாரம் செய்தார். ஜகத்குரு ஆதிசங்கரருக்கு பின், நேபாளத்தில் தர்ம பிரசாரம் செய்த முதல் ஆம்னாய பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸமஸ்கிருத மொழியை மீண்டும் செழிக்கச் செய்ய, 'சுரசரஸ்வதி சபா' என்ற அமைப்பை நிறுவினார். அதில், அனைவரும் படிக்க ஏதுவாக, அஞ்சல் வழியில் சமஸ்கிருத கல்வி திட்டம் அறிமுகமானது. இன்றைய அஞ்சல்வழி கல்விக்கு அது முன்னோடி! தர்ம கல்விக்காக, 'சங்கர கிருபா' என்ற மாத இதழை ஆரம்பித்தார். இந்த இதழ், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவருகிறது. பின்னர், 'தத்வாலோகா' என்ற ஆங்கில இதழையும் துவக்கினார். தர்ம பிரசாரத்திற்கு இவ்வாறு பாடுபட்ட ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களை வலுப்படுத்தவும் பணியாற்றினார். ஆதிசங்கரருக்கு பின், அவர் உருவாக்கிய நான்கு பீடங்களின் பீடாதிபதிகள், முதல் முறையாக சந்திக்கும், 'சதுராம்னாய சம்மேளனம்' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தார். தேசிய ஒருமைப்பாடு, பண்பாடு மற்றும் நம் கலாசாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த வைபவம் சிங்கேரியில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி புண்ணிய தினத்தில், 1979 மே மாதம், முதல் நாளில் நடைபெற்றது. இந்த மாநாட்டை காண பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும் கூடியிருந்தனர். தேசபக்தர் தேசப்பணியே தெய்வீக பணி என கருதி, வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். 'யாராவது உன்னிடம், நீ யார் என்று கேட்டால், முதலில் நான் ஒரு இந்தியன் என்ற நினைவுதான் வர வேண்டும், பின்னரே மற்ற விஷயங்கள் நினைவிற்கு வர வேண்டும்' என்று எப்போதும் அறிவுறுத்துவார். அப்படியே நடந்தும் கொள்வார் என்பதற்கு, ஜாகீர் ஒழிப்பு சட்டம் ஓர் நல்ல எடுத்துக்காட்டு. சிருங்கேரி அமைந்துள்ள கர் நாடகா மாநிலத்தில், இங்கிருந்த ஜமீன்தார் முறையை போல் ஜாகீர் முறை இருந்து வந்தது. அதை ஒழிப்பதற்காக, கர்நாடகா நில சீர்திருத்த சட்டம் 1961ல் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மடங்கள் மற்றும் கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாகீர் நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு, மாநிலம் எங்கும் எதிர்ப்பு நிலவியது. பலர், நிலங்களை அரசிடம் ஒப்படைக்க மறுத்தனர். ஜகத்குருவிடம் இது சம்பந்தமாக பேசி, மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைய வருவாய் துறை அமைச்சர் கடிலால் மஞ்சப்பா, சிருங்கேரிக்கு வந்தார். ஜகத்குருவிடம் தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தார். அப்போது, ஜகத்குரு, 'நாம் அனைவரும் அரசிற்கு கட்டுப்பட்டவர்கள். நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகுதான் துறவி மற்றும் பீடாதிபதி என்று எடுத்துரைத்து, நிலத்தை வைத்துக்கொண்டு நான் நாலு பேருக்கு நல்லது செய்வேன். அரசும் அதையேதான் செய்யப் போகிறது. 'நல்லதை யார் செய்தால் என்ன? அதனால் நிலத்தை தர நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று தெரிவித்தார். கடும் எதிர்ப்பை எதிர்பார்த்த அமைச்சர் மஞ்சப்பாவிற்கு, ஜகத்குருவின் பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னாளில், கர்நாடக முதல்வராக மஞ்சப்பா சிலகாலம் பொறுப்பில் இருந்தார். ஒருமுறை ஜகத்குருவை தரிசித்த அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட மஞ்சப்பா, பதவியில் இருக்கும் போதும், அதற்கு பிறகும் ஜகத்குருவை நாடி வருவார். இதைப்போல பல ஜனாதிபதிகள், பிரதமர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் ஜகத்குருவின் வழிகாட்டுதலை பெற்று பயனடைந்தனர். மைசூரு ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஜெய சாமராஜ உடையார், பின்னாளில் தமிழகத்தின் கவர்னராகவும் இருந்தார். அவர், ஜகத்குருவிற்கு கடிதங்கள் வாயிலாக தமிழகத்தின் அரசியல் சூழல் பற்றி தெரிவித்து, வழிகாட்டுதல் கோரினார். இன்றும் அந்த கடிதங்கள், சிருங்கேரியில் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேப்போல் பல தேச தலைவர்களும், ஜகத்குருவின் வழிகாட்டுதலைப் பெற்று வந்தனர். இப்படி தன் தவத்தாலும், ஞானத்தாலும், பாண்டித்தியத்தாலும் சிறந்து அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை, நாளை அவருடைய ஜெயந்தி நாளன்று நினைவுகூர்ந்து, அவர் வாழ்வில் இருந்து பயன்பெற, அவரைப் பற்றி மேலும் படித்து அறிந்து கொள்வோம். ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை பற்றிய புத்தகங்களை, சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்தா பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது. - இரா.கிருஷ்ணன் -