சென்னை: 'எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை; அன்புமணிக்கு தான் அரசியலில் பெரும் இழப்பு ஏற்படும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குமுறியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024 டிச., 28ம் தேதி நடந்த பா.ம.க., பொதுக் குழுவில், ராமதாஸ் -- அன்புமணி இடையே வெடித்த மோதல், எட்டு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இருவரும் தனித்தனியே பொதுக் குழுவை கூட்டி, 'நானே தலைவர்' என அறிவித்தனர். மகன் அன்புமணியை, ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு, அன்புமணி நேரடியாக பதில் அளிக்கவில்லை. 'நோட்டீஸ்'
இந்நிலையில், கடந்த ஜூன் 24ம் தேதி, மனைவி சரஸ்வதியுடன் 60வது திருமண நாளை கொண்டாடிய ராமதாஸ், அடுத்த இரண்டு மாதங்களில், சுசீலா உடன் 50வது திருமண நாளை ராமதாஸ் கொண்டாடினார். இது தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டன. இது, பா.ம.க.,வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசீலாவுடன் ராமதாஸ் ஜோடியாக இருக்கும் படத்தை, சமூக வலைதளங்களில் அன்புமணி ஆதரவாளர்கள் பகிர்ந்து, கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.இப்படி படம் வெளியாவதற்கு காரணமே அன்புமணி தான் என, ராமதாசிடம் சொல்லப்பட்ட தகவலை அடுத்து, அன்புமணி மீதான ராமதாசின் கோபம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக் குழுவில், அன்புமணி மீது கட்சி ரீதியிலான செயல்பாடுகள் தொடர்பாக 16 குற்றச்சாட்டுகளை கூறி, விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கான கெடு நேற்று முன்தினம் முடிந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிப்பதற்கு, ராமதாஸ் தலைமையில் பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், தைலாபுரத்தில் நேற்று நடந்தது. அதில், அன்புமணிக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, அவர் பதில் அளிக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சிலர், 'ஆகஸ்ட் 24ம் தேதி சுசீலாவுடன் நடந்த 50வது திருமண நாள் விழா படங்களை வெளியிட்டு, ராமதாசின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் அன்புமணி ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர். அவர்களுக்கு பதிலளித்த ராமதாஸ், 'என் தனிப்பட்ட விவகாரம் தொடர்பான பிரச்னைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை அசிங்கப்படுத்தி, வன்னியர்களிடம் இருந்து அன்னியப்படுத்த நினைக்கின்றனர். இனி, நான் இழப்பதற்கு எதுவும் இல்லை. இதுவரை நான் எந்த அரசு பதவியிலும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை. நாளை முடிவு
' என்னை அசிங்கப் படுத்தினால், அரசியலில் பெரும் இழப்பு அன்புமணிக்கு தான். இதை, அவர் தான் உணர வேண்டும்; ஆனால், உணர மாட்டார்' என, மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் பேசினார் என ராமதாஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து, அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களான சேலம் எம்.எல்.ஏ., அருள், முன்னாள் எம்.பி., துரை, தலைமை நிலைய செயலர் அன்பழகன் உட்பட ஒன்பது பேர் பங்கேற்றனர். இறுதியில், குழுவில் உள்ள ஒன்பது உறுப்பினர்களும் தனித்தனியாக அன்புமணியின் செயல்பாடு மற்றும் அவர் மீதான நடவடிக்கை தொடர்பாக தங்கள் கருத்துகளை எழுதி, சீலிட்ட கவரில் ராமதாசிடம் அளித்தனர். அந்த கருத்துகளின் அடிப்படையில், அன்புமணி மீது எந்தவிதமான நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து, நாளை ராமதாஸ் அறிவிப்பார் என பா.ம.க., -- எம்.எல்.ஏ., அருள் தெரிவித்தார்.