உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓடை ஓட ஓடுகிறேன்; நிமல் ராகவன்

ஓடை ஓட ஓடுகிறேன்; நிமல் ராகவன்

-நமது சிறப்பு நிருபர்-'தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரின் பேராவூரணியில் என் நாடியம் கிராமம். கடந்த 2019ல் இருந்து தற்போதுவரை, 300க்கு மேலான நீர்நிலைகளை துார்வாரி, சீரமைத்து மீட்டெடுத்த காரணத்தால், 'நீர்நிலை பாதுகாவலர்' எனும் விருதளித்து என்னை கவுரவித்து இருக்கிறது நம் தமிழக அரசு!'யார் குரல்?பெயர்: நிமல் ராகவன் வயது: 39 அடையாளம்: சமூகப்பணிமின்னணு பொறியியல் முடித்து அரபுநாடுகளில் பணி வாய்ப்பு, நல்ல சம்பாத்தியம் என பத்தாண்டுகள் உற்சாகத் தோடு நிமலின் வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. 2018 நவம்பர் 15 இரவில், இவரது கிராமத்தை 'கஜா' புயல் புரட்டியெடுக்க...என் குடும்பத்துல பல தலை முறைகளை வாழ வைச்ச தென்னை மரங்கள்ல எதுவும் மிஞ்சலை. அதைப் பார்த்ததும், 'நீ துபாய்க்கு போய்தான் ஆகணுமா'ன்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி!அந்த நிமிஷமே, 'நம்மை வளர்த்தெடுத்த மண்ணையும், சுற்றுவட்டார 90 கிராமங் களையும் மீட்டெடுக்கணும்'னு முடிவு பண்ணி களத்துல இறங்கிட்டேன்!' - நிமலின் குரலில் தாய் கையில் பசியாறிய திருப்தி.முதல் புள்ளி'பேராவூரணி ஏரி சீரமைப்பு' தான் என் கனவுகளோட முதல் படி. அப்படியே மாநிலம் கடந்து, தேசம் முழுக்க பயணிச்சு இந்த பணிகளை முன்னெடுத்தேன். நீர்நிலைகள் நிரம்ப ஆரம்பிச்சது. மக்கள் சந்தோஷத்துல கையெடுத்து கும்பிட்டப்போ மனசுக்குள்ளே திருப்தி; இந்த வேலையே இப்போ வாழ்க்கை ஆயிருச்சு!நிமல் பிறந்த ஆறாவது மாதம் தந்தை ராகவனுக்கு மூளையில் கட்டி கண்டறியப்பட, 'ராசி இல்லாத பிள்ளை' எனும் முத்திரை குத்தப்பட்டிருக்கிறார் இவர். தற்போது, அக்காயத்திற்கு மருந்து போட்டிருக்கிறது 'நீர் நிலை பாதுகாவலர்' விருது. இன்று தந்தை இல்லை எனினும், 'என்னை இயக்கும் சக்தி அவரே' என்கிறார் நிமல் ராகவன்.உங்களுக்கு காத்திருக்கும் முக்கியமான மூன்று பணிகள்?1. ராமநாதபுரம் எஸ்.எம். இலந்தைகுளம் கிராம குடிநீர் குழாய் பூட்டுகளுக்கு விடுதலை தரணும்2. சுகாதாரமற்ற குடிநீரால் நிகழும் சிறுநீரக பாதிப்புகள், உயிரிழப்புகளை தடுக்கணும்3. கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற காரணமாகுற இந்த தண்ணீர் பஞ்சத்தை ஒழிக்கணும்பிரமாதம்; நிமல் ராகவனின் முயற்சியில் இதுவரை, 568 காடுகளில் 26 லட்சம் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. 1,670 கி.மீ., நீளத்திற்கு ஆறு, கால்வாய்கள் புனரமைக்கப் பட்டு இருக்கின்றன. தமிழகத்தின் இருபது மாவட்டங்கள், இந்திய அளவில் 15 மாநில 300 நீர்நிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன.ராமநாதபுரம், பெரியகுளம் மக்கள் இவரது பணிக்கு நன்றிக் கடனாக, 'நிமல் ராகவன் ஓடை' என்றே நீர்நிலைக்கு பெயர் சூட்டி இருக்கின்றனர்!'நீர்நிலைகளை சுத்தமா நாம வைச்சுக்கணும்னா, 'கண்ணால பார்க்கக்கூடிய கடவுள் தண்ணீர்'னு நாம உணரணும்' என்கிறார் இந்த நீர்நிலைகளின் காவலன்.குரல் சொல்லும் குறள்* குறள்:36அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணைபொருள்: இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும்; அதுவே, உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

குமார்
அக் 25, 2026 21:25

நல்ல செயல்.. இவரின் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்


பைரவன்
அக் 25, 2026 20:17

வாழ்த்துகள். மக்கள் தாங்களாகவே முன் வந்து வாரத்தில் சில மணி நேரங்கள் சமூக சேவை செய்ய முன் வர வேண்டும். சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை நாட்டிற்கு அர்பணிக்கலாமே.


Indhu
அக் 25, 2026 20:12

Hats off to your service. May the Almighty bless you for many more achievements.Best of luck.


SS
அக் 25, 2026 16:10

தன்னலமற்ற உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்


சந்துரு
அக் 25, 2026 14:13

தனி ஒருவனாக படைத்த மகத்தான சாதனைக்கு வாழ்த்துக்கள். இங்கும் சில லீடர்ஸ் இருக்கிறார்கள். ஆற்றை சுத்தம் செய்கிறேன், குளத்தை சுத்தம் செய்கிறேன் என கூட்டத்தைக் கூட்டி ஒரு நாள் மட்டும் மீடியாக்கள் முன் போஸ் கொடுப்பதோடு சரி. அப்புறம் ஆளே காணாமல் போய் விடுகிறார்கள்.


manian
அக் 25, 2026 12:42

great work keep it up


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை