உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோயில்களில் தரிசனத்துக்கு முன்பதிவு நல்லதா?

கோயில்களில் தரிசனத்துக்கு முன்பதிவு நல்லதா?

திருப்பதி, சபரிமலையில் உள்ளது போல, தமிழக கோயில்களிலும் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதியை கொண்டு வர தமிழக அரசு விரும்புகிறது. இது குறித்து கோவை மக்களிடம் கேட்டோம்.

ஒரே வரிசை முறை வேண்டும்

ஒரே வரிசை வரலாம். மனக்கஷ்டம் வரும்போது, நினைத்த உடன் கோயிலுக்கு போய் வரலாம் என்றுதான் தோன்றும். அப்படியிருக்க முன்பதிவு செய்தால்தான் சாமி தரிசனம் என்ற விதியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசு செய்ய வேண்டியது முன்பதிவு கட்டாயமாக்குவது அல்ல; நீண்ட நேரம் காத்திருக்காமல் வசதிகளை மேம்படுத்துவதுதான். பணம் கொடுத்தால் தனி தரிசனம் என்ற நிலையை மாற்றி, சாமி அனைவருக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், ஒரே வரிசை முறையைக் கொண்டு வர வேண்டும். - தமிழ்செல்வி, பெரியநாயக்கன்பாளையம்

சாமானிய மக்களுக்கும் வேண்டும்

கோவில் தரிசனங்களுக்கு ஆன்லைனில் முன்பு பதிவு கொண்டு வருவதை மனதார வரவேற்கிறேன். மக்கள் கூட்டம் வருவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அனைத்து பெரிய கோவில்களிலும் இவர்களின் 'அட்ராசிட்டி' அதிகமாக உள்ளது. விரைந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதால் மக்களும் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கிறார்கள். இதற்கு பயந்து பலர் நல்ல நாட்களில் கோவிலுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் என்கிற முறை கொண்டு வருவது நல்லதுதான். -லோகநாதன், ஆர்.எஸ்.புரம்

நேரடி தரிசனத்துக்கு வாய்ப்பு

முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தினால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவும். விரைவு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய முறைகேடுகளையும் தடுக்க முடியும். அதே நேரத்தில், முன்பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு அந்த வசதி வழங்கப்படுவதோடு, நேரடியாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தரிசன வாய்ப்பு இருக்க வேண்டும். திடீரென கோவிலுக்கு வருபவர்களும் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் நடைமுறை அமைய வேண்டும். - தினேஷ், மலுமிச்சம்பட்டி

ஒழுங்குப்படுத்துதல் அவசியம்

எனக்கு தெரிந்த உறவினர் வட்டாரத்தில் பலர், கோவில் கோவிலாக முக்கிய தினங்களில் தரிசனத்திற்கு செல்வதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும், தங்குவதற்கு சாமி தரிசனத்திற்கு பெரும் சிரமப்படுவதாக கூறுவர். முன்பதிவு திட்டத்தை கொண்டுவந்து, இதை ஒழுங்குப்படுத்தினால், பக்தர்கள் பயனடைவர். கோவில் விவகாரத்தில் சில புதிய நடைமுறைகளை கொண்டு வருவது அவசியம். - மோகன்குமார், ஆர்.எஸ்.புரம்

கூட்ட நெரிசல் தவிர்க்கலாம்

முக்கிய தினங்களில் எவ்வளவு பேர் தரிசனத்திற்கு வருகின்றனர். அவர்களால் கோவில் நிர்வாகத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பது, இதுவரை எந்த ஆட்சியிலும் வெளிப்படையாக பேசப்படாத ஒன்றாக இருந்தது. திருப்பதி செல்லும் போதெல்லாம், இங்குள்ள நடைமுறை, நம்மூர் கோவில்களில் ஏன் பின்பற்றுவதில்லை என தோன்றும். இதை அமல்படுத்தினால், தேவையில்லாத கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். - ராம்நந்து, செட்டிபாளையம்

மனநிறைவு கிடைக்கும்

தமிழக கோவில்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறை அமல்படுத்தினால் அருமையாக இருக்கும். பக்தர்கள் நீண்ட நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. முன் பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து அமைதியான முறையில் தரிசனம் செய்ய வசதியாக இருக்கும். லஞ்சம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்யும் கெட்ட பழக்கத்தை முற்றிலும் தடுக்க முடியும். இப்புதிய முறையை அமல்படுத்தி தரிசனம் செய்ய அனுமதிக்கும் போது மனநிறைவு கிடைக்கும். - ராஜசேகர், நஞ்சுண்டாபுரம் ரோடு

பக்தர்கள் பாதிக்கப்படக்கூடாது

திருப்பதி, சபரிமலை போன்ற கோயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முன்பதிவு முறை உதவியாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதை கட்டாயமாக்கினால், திடீரென தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் சிரமப்பட வாய்ப்பு உள்ளது. பெரிய கோயில்களில் மட்டும் சிறப்பு நாட்களில் முன்பதிவு முறையை கொண்டு வந்தால் நல்லது. அதே நேரத்தில் சாதாரண பக்தர்களின் வசதியும் பாதிக்கப்படக்கூடாது. - செல்வக்குமார் வடவள்ளி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Srinivasan Narasimhan
ஜூன் 11, 2026 04:52

நல்ல முயற்சி


Tamilan
ஜூன் 10, 2026 19:31

கோவில்களை முடக்குவதுதான் நல்லது


Muralidharan Swaminathan
ஜூன் 10, 2026 18:18

அன்னதானம் மட்டும் செய்க அருச்சனை அபிஷேகம் வேண்டாம். குருக்களுக்கு மந்திரம் அபிசேகம் செய்ய தெரியாது தட்டில் போட வேண்டும்.உண்டியல் போடவேண்டாம்


Anantharaman Srinivasan
ஜூன் 10, 2026 15:36

இந்து கோவில்களில் மட்டும் எதற்காக முன்பதிவும் கட்டண தரிசனமும்.? மசூதி சர்ச்சுகள் போல் திறந்து விடுங்கள். நினைத்த போது நினைத்த தினத்தில் கோயில் திறந்திருக்கும் நேரத்தில் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு உரிமையுண்டு.


CHELLAKRISHNAN S
ஜூன் 10, 2026 13:00

Before COVID, several times, I booked dharshan tickets and room bookings through online for Palani temples, which was abolished later. If it is reintroduced, it would be helpful for senior citizens. Black marketing people would run away.


சத்யநாராயணன்
ஜூன் 10, 2026 11:06

நான் செய்யும் இந்த பதிவினை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்களோ எனக்கு தெரியாது ஆனால் என்னுடைய இந்த 54 வயது அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்ட உண்மை என்னவென்றால் கோவில்களில் அர்ச்சனை முறை தான் அத்தனை ஊழல்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது ஆகையால் அர்ச்சனை செய்ய விருப்பம் உடையவர்கள் அதற்கான பிரத்தியேகமான உண்டியலில் அவர்கள் விரும்பும் பணத்தை இட்டு வைத்தால் அதை கோவில் நிர்வாகம் எடுத்து அபிஷேகம் அர்ச்சனை அலங்காரம் போன்ற இறைப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அதனை டிஜிட்டல் ஸ்கிரீன் கார்டில் நேரடி ஒளிபரப்பு செய்து பிரத்தியேகமான அறைகளை பக்தர்களை அமர வைத்த அவர்களுக்கு தரிசன பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் இதற்கும் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது மேலும் அபிஷேக அலங்கார கால பூஜைகள் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அர்ச்சகர்கள் மூலஸ்தானத்தில் இருக்க தேவை இல்லை பக்தர்களுக்கும் இறைவனுக்கும் இடையே எந்த மீடியேட்டர்களும் தேவையும் இல்லை எல்லாவிதமான தரிசன டிக்கெட் முறைகளை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் ஒவ்வொரு கோவிலிலும் அதற்கான ஆகம விதிகளின்படி பூஜை நேரங்கள் நிர்ணயித்த அந்த நேரத்தில் மட்டுமே பூஜை அபிஷேக அலங்கார காரியக்கிரமங்களை செய்ய வேண்டும் மற்ற நேரங்களில் எல்லாம் எந்த விதமான பாகுபாடும் இடையூறும் இல்லாமல் ஃபர்ஸ்ட் இஸ் ஃபர்ஸ்ட் என்ற விதத்தில் பக்தர்களை தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருந்தால் எந்தவிதமான கியூ காம்ப்ளக்ஸ் கட்டிடங்களும் முன்பதிவுகளும் சில பிரத்தியேக கட்டமைப்பு உள்ள கோவில்களை தவிர மற்ற எந்த கோவிலிலும் தேவைப்படாது மிக மிக முக்கியமாக இறைவனுக்கு முன்னால் எல்லோரும் சமம் என்பதனால் வி ஐ பி தரிசனம் வி வி ஐ பி வி வி ஐ பி போன்ற தரிசன முறைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் அவர்களுக்கெல்லாம் இறைவனை காண வேண்டும் என்ற முழுமையான ஈடுபாடு இருந்தால் அவர்களும் வரிசையிலேயே வரவேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 10, 2026 10:53

தேர்தல் ஆதாயத்துக்காக ஆலயங்களுக்கு வரும் மாற்று மத அரசியல்வாதிகள். நாத்திகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை, பூரண கும்ப மரியாதை செய்தல் போன்ற தவறுகளை எப்போ தடை செய்வீர்கள்? திருமா, ஜவாஹிருல்லா என புகார் பட்டியல் நீள்கிறது.


Nagarajan D
ஜூன் 10, 2026 10:12

அரசுக்கு நிர்வகிக்க தெரியவில்லை என்றால் கோவிலை விட்டு அரசு வெளியே வந்து விட வேண்டியதுதான் சரியாக இருக்கும்.. இருப்பதில் மேலும் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒழுங்காக நடந்து ஒண்டிருந்த தரிசன முறையை வியாசர்பாடி காரனின் தலையீட்டால் சொதப்பி மீனாக்ஷி அம்மனை தரிசிக்க தற்போது 2 மணி நேரம் ஆகிறது.. தேவை இல்லாத விஷயம்


raja
ஜூன் 10, 2026 08:25

எந்த மண்ணாங்கட்டியும் தேவை இல்லை ....வரும் பக்தர்களை தேக்கி நிறுத்தி வைக்காமல் கடவுளை தரிசனம் செய்ய வரிசையாக அனுமதித்தால் எந்த கோயிலிலும் கூட்டம் இருக்காது...


chinnamanibalan
ஜூன் 10, 2026 08:22

பக்தர்களை அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வைப்பதுதான் ஊழலுக்கு வழி வகுக்கிறது. எனவே எளிதாக வரிசை முறையில் சென்று, விரைவாக தரிசனம் செய்யும் வழிகளை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டுமே தவிர, வழிபாட்டில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது. மேலும் சந்நிதிக்கு முன்பாக பக்தர்களை நிறுத்தி வைத்து, பணத்துக்காக அர்ச்சகர்கள் மாலை மரியாதை செய்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இதில் பெருமளவு காலதாமதம் ஏற்பட்டு, வரிசை முறையில் வருபவர்களை காத்திருக்க வைக்கிறது.


A viswanathan
ஜூன் 10, 2026 11:10

முன்பதிவோ பின்பதிவோ கடவுள் தரிசனத்திற்கு பக்தரிடம் பணம் பெறக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை