உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மே.வங்கத்தில் மம்தா ஆதிக்கம் சரிகிறதா? 15 ஆண்டு ஆட்சியை அசைக்கும் ஆசிரியர்கள்

மே.வங்கத்தில் மம்தா ஆதிக்கம் சரிகிறதா? 15 ஆண்டு ஆட்சியை அசைக்கும் ஆசிரியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தால் 25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7m955ofa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கு வங்கத்தில், 2011 முதல் தொடர்ந்து மூன்று சட்டசபை தேர்தல்களில் வென்று, 15 ஆண்டுகளாக முதல்வராக இருக்கிறார், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி.

கண்காணிப்பு

சாரதா சிட்பண்ட் ஊழல், நிலக்கரி முறைகேடு, கால்நடை கடத்தல், பொது வினியோக திட்ட குளறுபடி என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு, 'ஹாட்ரிக்' முதல்வராக தொடர்கிறார். 2011ல் காங்., 2016ல் மார்க்சிஸ்ட் கம்யூ., 2021ல் பா.ஜ., என எதிர்க்கட்சிகள் மாறினாலும், ஆளுங்கட்சியாக திரிணமுல் காங்., மாறவில்லை. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றுடன் மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மம்தா ஆதிக்கத்துக்கு தடை போடும் விதமாக ஆசிரியர் நியமன முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரது கடந்த ஆட்சியில், கட்சியினர் லட்சக்கணக்கில் பணம் பெற்று, ஆசிரியர்களை நியமித்தனர். வழக்கை விசாரித்த கொல்கட்டா உயர் நீதிமன்றம் 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்தது. இந்த உத்தரவை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த 25,000 பேரும் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், முறையான தகுதியில் வேலை பெற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆசிரியர் தேர்வு பணியை முழுக்க முழுக்க உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும். ஏற்கனவே, பணம் கொடுத்து வேலை வாங்கிய யாரையும் விண்ணப்பிக்க அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் 'கறார்' காட்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, 'வேலை இழந்த 25,000 பேரின் குடும்பங்களும் மம்தாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் இருக்கின்றன. அவர்களின் சாபம், சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்' என்கிறார், பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி. ஒவ்வொரு தாலுகாவிலும் 'டிஸ்மிஸ்' ஆசிரியர்கள் இருப்பதால், வறுமையில் வாடும் அவர்களின் நிலைமையை உள்ளூர் ஊடகங்களும், சமூக வலைதளங்களும் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. சிலர் தற்கொலை செய்ததால், அந்த குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி கல்வி நிலைமை பாதாளத்தை நோக்கி செல்லும் நிலையில், பல அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மட்டுமே இருக்கின்றனர். எப்படி பாடம் நடத்துவது; தேர்வுகளை நடத்துவது? என தெரியாமல் தவிக்கின்றனர்.

கரை சேருவாரா?

சமூக, பொருளாதார ரீதியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தால், மம்தா பானர்ஜிக்கு சோதனை காலம் துவங்கி விட்டதாக கூறினாலும், கடைசி நேரத்தில் அவர் மாற்றி விடுவார் என கட்சியினர் நம்புகின்றனர். ஆனால், ஆசிரியர் நியமனத்தில் பணம் வாங்கியது உட்பட பல வழக்குகளில் மம்தா கட்சியினர் மீது அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்றவற்றை மிக வேகமாக பா.ஜ., முடுக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை எதிர்ப்பலைகளையும் கடந்து, நான்காவது முறையாக மம்தா கரை சேருவாரா என்பதே மேற்கு வங்கத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆசிரியர்கள் -- போலீஸ் மோதல்

மேற்கு வங்கத்தில், நீதிமன்ற தீர்ப்பால் பணியை இழந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அம்மாநில கல்வித்துறை தலைமையகம் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற தங்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இக்கோரிக்கையை வலியுறுத்தி, கொல்கட்டாவின் சால்ட் லேக்கில் உள்ள மாநில கல்வித்துறை தலைமையகத்தை, ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக லேசான தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கலைத்தனர். இதில், பல ஆசிரியர்கள் காயமடைந்தனர்.எனினும், இதை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்படி, கல்வித்துறை தலைமையகத்தை நேற்றும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. - -நமது சிறப்பு நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மீனவ நண்பன்
மே 18, 2025 03:43

மம்தா மார்க்கத்தின் ஆதரவில் ஜெயிப்பார்


ஆரூர் ரங்
மே 17, 2025 09:30

செ.பாலாஜி மாதிரி பானர்ஜியும் வாங்கின பணத்தை திருப்பிக் கொடுத்து புனிதராக ஆகிவிடலாம். உடனடி பெயில் என்பதுதானே இப்போ கோர்ட்டின் ரூல்?


சாமானியன்
மே 17, 2025 05:33

உச்சநீதி மன்ற முடிவு மம்தாவிற்கும், அவரது கட்சிக்கும் பெருத்த தலைவலி. வரும் தேர்தலில் போதுமான சீட் கிடைக்காமல் போனால் ஆட்சிக்கு மறுபடியும் வரமுடாயாது.விநோதமான சூழ்நிலை. பாஜக அங்கு சக்தியுடன் இல்லை. மே.வங் இந்தி பாஜகவை போதுமான அளவு ஆதரிக்காது தமிழ்நாடு போல. கம்யூ கட்சியும் வலிமை இழந்து நிற்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை