உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கைதுக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிப்பது கட்டாயம்: சுப்ரீம் கோர்ட்

கைதுக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிப்பது கட்டாயம்: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒருவரை கைது செய்யும்போது, ஏன் கைது செய்யப்படுகிறார் என்பதற்கான விபரத்தை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுப்பது கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிஷிர் ராஜேஷ் ஷா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒருவரை கைது செய்யும்போது, கைதுக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக அவரிடம் வழங்காமல் இருப்பது சட்டப்பிரிவு 22பி (1) மற்றும் பிரிவு 47 ஆகியவற்றை மீறுகிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அளித்த தீர்ப்பு விபரம்: அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 22பி (1) வழங்கும் பாதுகாப்பு என்பது சம்பிரதாயமான விஷயம் கிடையாது. அது தனி நபர் சுதந்திரம் பற்றிய அடிப்படை உரிமையை பேசுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், ஒருவரை கைது செய்யும்போது கைதுக்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நபருக்கு வெறும் வாய்மொழியாக சொல்வது ஏற்புடையது அல்ல. அவர் எளிதில் புரிந்து கொள்ளும் மொழியில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் தான் ஜாமின் கேட்கவோ அல்லது மற்ற சட்ட உதவிகளை நாடவோ முடியும். ஏற்கனவே இருந்த இந்திய தண்டனைச் சட்டம், தற்போதுள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்து வகை சட்டங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதை பின்பற்ற தவறினால், சம்பந்தப்பட்ட நபரின் கைது நடவடிக்கை சட்டவிரோதமாக கருதப்படும். அதுமட்டுமில்லாமல், கைது செய்யப்பட்ட நபர் உடனடியாக விடுதலையும் செய்யப் படுவார். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு, கைதுக்கான காரணங்களை கண்டிப்பாக எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், தற்போது அதை மற்ற சட்டங்களுக்கும் விரிவுபடுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
நவ 08, 2025 14:21

1976 இல் மிசால கைதான ஒருவரால் இன்றுவரை கைதுக்கு அத்தாட்சியான DETENTION ORDER ஐயே காண்பிக்க முடியவில்லை. ஆனா உண்மையில் மிஸ்சால தான் கைதானார்.


சமீபத்திய செய்தி