உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கருவறை, அபிஷேக வழித்தடத்துடன் அயோத்தி ராமர் கோவில் இருந்தது உண்மை

கருவறை, அபிஷேக வழித்தடத்துடன் அயோத்தி ராமர் கோவில் இருந்தது உண்மை

சென்னை : சென்னை, சி.பி.ராமசாமி அய்யர் இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், 'இந்திய வரலாற்று கட்டமைப்பில் தொல்லியல் துறையின் முக்கியத்துவம்' என்ற தலைப்பிலான, இரண்டு நாள் கருத்தரங்கம், நேற்று துவங்கியது. இதில், டில்லி தேசிய அருங்காட்சியகத்தின் பொது இயக்குநரும், நொய்டா இந்திய பாரம்பரிய நிறுவனத்தின் துணை வேந்தருமான, பி.ஆர்.மணி பேசியதாவது:அயோத்தி அல்லது சாகேதா என்பது, ராமாயணம், ரகுவம்சம் உள்ளிட்ட பழைய இலக்கியங்களிலும், பிற்காலத்தின் ஸ்கந்த புராணம், அயோத்தி மஹாத்மியம், லால்தாசின் ருத்ரயமாலா, சத்தியாபாக்யானம், அயோத்தியா விலாசம் உள்ளிட்ட நுால்களிலும், கோவில் மற்றும் கட்டடங்களின் தன்மைகளாலும் வர்ணிக்கப்பட்டுள்ளன.நாட்டின் ஏழு புனித நகரங்களில் ஒன்றான அயோத்திக்கு, 18ம் நுாற்றாண்டில் வந்த ஐரோப்பிய பயணி ஜேசுட் டைபென்தாலர், தன் பயணக்குறிப்பில், அயோத்தியில் ராம சபுத்ரா வழிபாடு நடந்ததையும், மசூதி பற்றியும் எழுதி உள்ளார். இதனால், அப்பகுதியில், ராமர் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கோவில் கட்ட வேண்டும் என்ற முழக்கம் மேலோங்கிய நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு, வழக்கு நீதிமன்றம் சென்றது. அதன்படி, இடிக்கப்பட்ட இடத்தில், கோவில் இருந்ததற்கான தடயங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வு

அதாவது, பேரரசர் இக் ஷ்வாகுவின் ஆட்சியின் தலைநகராக அயோத்தி இருந்துள்ளது. அப்பகுதியில், மணிபர்வத், சுக்ரிவ்திலா, ராம்கோட் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் மேடுகள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் ராம்கோட் பகுதியில் இருந்த ராமஜென்ம பூமி. மேலும், நாகேஸ்வரர் கோவிலில் மவுரியர்களின் துாணில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு மற்றும் சின்னங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நாட்டில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள், பிரிட்டிஷார் ஆட்சி நடந்த நிலையில், பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்ட நிலையில், அந்த மசூதி மட்டும் தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களால் ஏற்கப்படாமலும், ராமர் பிறந்த இடமாகவும் கருதப்படுவது குறித்து கவனமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அந்த மசூதியை, பாபரின் உத்தரவுப்படி, மிர் பாக்கி, 1528ல் கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன்பின், 2003ல், மத்திய தொல்லியல் துறை, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திற்கு வெளியில் உள்ள இடங்களை அகழாய்வு செய்தது. மேலும், அதற்கு முன் பலர் ஆய்வு செய்த தடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. பின், நீதிமன்ற விதிமுறைகளின் படி, பலரின் கண்காணிப்பில் அகழாய்வு செய்யப்பட்டு, அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்படி, அகழாய்வு இடங்களில் 2,800 ஆண்டுகளுக்கு முற்பட்டதில் இருந்து, 10ம் நுாற்றாண்டு வரையிலான பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்தன.

உறுதி

மேலும், கட்டுமானத்துக்கு கீழே, 11, 12 நுாற்றாண்டைச் சேர்ந்த 50 துாண் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மத்தியில் வட்டவடிவ திண்ணை போன்ற சுவர் பகுதி கண்டறியப்பட்டது. மேலும், பல இடங்களில் எலும்புக்கூடுகளும், வெளியில் இருந்து மண் கொண்டு வந்து கொட்டப்பட்டதற்கான அடையாளங்களும் கிடைத்தன.அதாவது, 11ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், மஹ்மூத் கஸ்னவியின் ராணுவ தளபதியின் மருமகனான சையத் சலார், அப்பகுதியில் தாக்குதல் நடத்தி, கோவில் இடிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கலவரத்தில் இறந்தவர்கள், அங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்பது உறுதியானது.அதாவது, இந்த சான்றுகள், ஹரப்பா நாகரிக வீழ்ச்சிக்குப் பின், புத்தர், மகாவீரர் காலத்துக்கு பின் இருண்ட காலம் நிலவியது என்ற கோட்பாட்டை பொய்யாக்கியது.மேலும், அந்த கோவிலுக்கான துாண்கள், ஐந்து வரிசைகளாக, 17 துாண்கள் நிறுத்தப்பட்டன. அதன்படி, 85 துாண்கள் இருக்க வேண்டும். ஆனால், மையப்பகுதியில் துாண் இல்லை. அதற்கு பதில், வட்டமான திண்ணை போன்ற பகுதி இருந்தது. அதன் வடக்கு பக்க சுவரின் ஒரு செங்கல்லில் ஒரு ஓட்டை இடப்பட்டிருந்தது. அதற்கான நீர்வழித்தடமும் இருந்தது. இதிலிருந்து, திண்ணை போன்ற பகுதி கருவறையாகவும், வடக்குப் பக்கம், அபிஷேக நீர் வழிந்தோடும் பகுதியாகவும் இருந்தது உறுதியானது. இந்த கட்டுமான அமைப்பு, குஜராத்தின் சித்தர்பூர், மத்திய பிரதேசத்தின் குராரி, டெண்டூலி, சிரேநாத், சந்திரேேஹ, மிடாவலி, மசான் உள்ளிட்ட கோவில்களின் கட்டுமானத்தை போன்றுள்ளது. மேலும், வெளியில் உள்ள தொல்லியல் மேடுகளில், அதன் கட்டுமான தொடர்ச்சி இருந்ததும், மூன்று உறை கிணறுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. அவற்றில் இருந்த துாண்களில் சில, இந்த மசூதி கட்டுமானத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

உத்தரவு

மேலும், அதே ஊரில், லலாதபிம்பாவில் இருந்த கோவில் துாணில், கஜலட்சுமி உருவம் இருந்தது. இது, அயோத்தி கோவில் இடிக்கப்பட்ட பின் எடுத்து வரப்பட்டு, கட்டப்பட்டுள்ளது. கஹத்வால் வம்சத்தின் மன்னர் கோவிந்தசந்திரன் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஹரி கோவில் பற்றிய கல்வெட்டும் கண்டறியப்பட்டது. இதன்படி, அப்பகுதியில் விஷ்ணு கோவில் இருந்துள்ளது உறுதியானது. மேலும், வழிபாட்டில் இருந்த சிவலிங்கமும் கிடைத்தது. இதுபோன்ற பல்வேறு சான்றுகள் நேரடியாகவும், கண்காணிப்பு குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களின் வாயிலாகவும், கோவிலை இடித்து கட்டப்பட்ட பகுதியே பாபர் மசூதி என்பது உறுதியானது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின், தற்போது அங்கு, ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmsamy
மார் 29, 2025 10:47

ராமர் இருந்தாரோ இல்லையோ இப்போ ஏன் அதை வச்சு பிரச்சனை பண்றீங்க


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 05:06

இந்த விஷயங்களை வெளிக்கொணர்ந்த மக்களுக்கு நன்றி , இதனையெல்லாம் பள்ளி வரலாற்று புத்தகத்தில் பதிப்பிக்க வேண்டுமே ? செய்வார்களா ? ஏனெனில் பலமக்களுக்கு இன்றைய நிலையில் நாட்டின் மீது பற்றோ , காதலோ வரவே இல்லாதபடிக்கு மூளைச்சலவை செய்து வெளிநாட்டிற்கு தான் அடிமை சாசனம் எழுத முயன்று வந்துள்ளனர் பலர்


சமீபத்திய செய்தி