நாட்டில் எது நடந்தாலும் கருத்து தெரிவிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என கமல் பேசியது குறித்து மவுனம் சாதித்து வருவதை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ், சினிமா மட்டுமல்லாது, அரசியல், சமூகம் என அனைத்து பிரச்னைகளிலும், தன் கருத்தை பதிவு செய்ய தவற மாட்டார். அவரது கருத்துகளில் பெரும்பாலானவை பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும். ஆனாலும், விடாமல் கருத்து தெரிவிக்கும் வழக்கம் உள்ளவர்.பா.ஜ,வையும், ஹிந்துத்துவாவையும் விமர்சிப்பதென்றால், அவருக்கு அல்வா சாப்பிடுவது போல.அரசியல் ரீதியிலான கருத்துகளை அதிகம் பேசும் பிரகாஷ்ராஜுக்கு கடந்த 2019ல் அரசியல் ஆர்வமும் அதிகரிக்க, அந்தாண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் களம் இறங்கினார். பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்ட அவர், தன் பிரசாரம் முழுதிலும் பா.ஜ.,வையும், ஹிந்துத்துவாவையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். கூடவே, பிரதமர் மோடியை ஒருமையில் பேசி விமர்சித்தார். ஆனாலும், படுதோல்வி அடைந்தார்.தோல்வி குறித்தும் கருத்து பதிவிட்ட பிரகாஷ்ராஜ், 'இத்தோல்வி என் கன்னத்தில் விழுந்த அறை' என்றார்.'சந்திரயான்- - 3' திட்டம் குறித்து, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்ட பிரகாஷ்ராஜ், 'விக்ரம் லேண்டர் அனுப்பிய படம்' என குறிப்பிட்டு, ஒருவர் டீ ஆற்றும் படத்தை பகிர்ந்திருந்தார். இதுவும் அப்போது பெரும் சர்ச்சையானது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தபோது, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.சென்னையில் கடந்த மே 24ல் நடந்த, தக் லைப் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார். இது, கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். கமல் கருத்தை ஆதரித்தால், கர்நாடகாவில் பிரகாஷ்ராஜுக்கு எதிர்ப்பு கிளம்பும். கமல் கருத்தை எதிர்த்தால், தமிழகத்தில் தனக்குள்ள சினிமா, அரசியல் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும். அதனால்தான் அவர் மவுனம் சாதிக்கிறார் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.'கமல் கருத்து குறித்து ஏதாவது சொல்லி, அதனால் தன் சினிமா தொழிலுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது. அதோடு தமிழகம், கர்நாடகாவில் தனக்கான அரசியல் ஆதரவை இழந்து விடக்கூடாது. 'சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்றெல்லாம் சுயநலத்துடன் யோசித்துத் தான், கமல் பேசியதில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து, பிரகாஷ்ராஜ் கருத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார். 'சுதந்திரமாக செயல்படுவதாக சொல்லுபவர், இந்த விஷயத்தில் அமைதி காப்பதன் பின்னணி இதுதான். அவரது உண்மை முகம் இப்போது அம்பலமாகி விட்டது' என, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக பலரும் கொந்தளிக்கின்றனர். - நமது சிறப்பு நிருபர் -