காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஆட்டுப்புத்துாரை சேர்ந்தவர் குஜராஜ், 45. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை; செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும், நீர்வளத் துறையின் உதவி பொறியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். தற்போது, செங்கல்பட்டு நீர்வளத்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக உள்ளார்.இவர், அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துஇருப்பதாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவரை, பல ஆண்டுகளாக போலீசார் கண்காணித்து வந்தனர்.கூடுதல் வருமானம்
கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான தொடர் கண்காணிப்பின்போது, குஜராஜும், அவரது மனைவியும், தி.மு.க., மாவட்ட கவுன்சிலருமான ராஜலட்சுமி, 38, தாய் தமிழரசி, 77, அக்கா ராஜேஸ்வரி, 58, ஆகியோரது வருமானம் பல மடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்தது. வருமானத்துக்கு அதிகமாக, 3.98 கோடி ரூபாய் கூடுதலாக சம்பாதித்தது தெரியவந்துள்ளது. இதனால், நான்கு பேர் மீதும், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2016ம் ஆண்டு முதல், குஜராஜ் வாங்கும் சொத்துக்களை கண்காணித்து வந்தாலும், 2021ல் அவரது மனைவி ராஜலட்சுமி, காஞ்சிபுரத்தில், 2வது வார்டில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட்டபோது, தாக்கல் செய்த வேட்புமனுவில், மொத்த சொத்து விபரங்களையும் புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளார்.இந்த விபரங்களில், எந்தெந்த ஊரில், எத்தனை ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும், தன் பெயரிலும், கணவர் குஜராஜ் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துக்களையும் ராஜலட்சுமி பட்டியலிட்டிருந்தார். குஜராஜுக்கு, 61 லட்சம் ரூபாய் அசையும் சொத்துக்கள், 1 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள்; ராஜலட்சுமி பெயரில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 3.41 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை சுயமாக வாங்கி இருப்பதாக, வேட்பு மனுவில் தகவல்கள் இருந்தன. இதன் சந்தை மதிப்பு 7.17 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.நால்வர் மீது வழக்கு
சுயமாக சம்பாத்தியம் செய்த சொத்துக்கள், 2016 முதல், 2021ம் ஆண்டு வரையிலானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கிலான இந்த சொத்துக்கள், குஜராஜ் அரசு பணியில் சேர்ந்த பிறகே வாங்கி குவித்தது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுபோன்று, குஜராஜின் தாய், அக்கா ஆகியோரது சொத்துக்கள் என, பல்வேறு தகவல்களை திரட்டிய பிறகே, நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.