உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லோன் ஆப்பில் ரூ.300 கோடி மோசடி

லோன் ஆப்பில் ரூ.300 கோடி மோசடி

புதுச்சேரி; 'லோன் ஆப்' மூலம் நாடு முழுவதும், 300 கோடி மோசடி செய்த 14 பேர் கொண்ட கும்பலில், கேரளாவைச் சேர்ந்த வாலிபரை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, நெல்லித்தோப்பை சேர்ந்த ஆன்ட்ரூஸ், 40, என்பவர், தனது மொபைல் போனில் உடனடி லோன் ஆப் டவுன்லோடு செய்து, 2023ம் ஆண்டு, 10,000 ரூபாய் கடன் பெற்றார்.கடன் தொகை, அதற்கான வட்டியை செலுத்திய பிறகும், மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மறுத்ததால், ஆன்ட்ரூஸ் படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டினர்.ஆன்ட்ரூஸ் பல்வேறு தவணையாக 2.99 லட்சம் பணம் கொடுத்தார். மீண்டும், மீண்டும் மர்ம கும்பல் பணம் கேட்டு மிரட்டியதால், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.

14 பேர் கொண்ட கும்பல்

அதில், மொபைல் கடன் செயலி மூலம் சுருட்டிய பணம் நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 பேருக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த மோசடி கும்பலில், கேரளா மாநிலம், மலப்புரம், சேரூர் சென்ட்ரல் பஜார், முகமது ஷாபி, 37, என்பவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர். அவரது வங்கி கணக்கில் மட்டும், 10.65 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. முகமது ஷாபியின் மொபைல்போன், சொசுகு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது ஷாபியை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது அவர் இரு விரல்களை உயர்த்தி காண்பித்து, 'நான் பேமஸ் ஆகிவிடுவேனா?' என, கேள்வி எழுப்பியபடி சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தார்.சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறியதாவது:உடனடி லோன் வழங்கும் செயலிகள் மூலம் மோசடி செய்ததாக புதுச்சேரியில் கடந்த ஆண்டு 330 புகார்கள் வந்தன. இதில், 30 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர். ஆன்ட்ரூஸ் வழக்கில், முகமது ஷாபி கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 13 பேர் மூலம் நாடு முழுதும், 300 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டால், கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு அனுப்பப்பட்டது என தெரியவரும். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட, மும்பையை சேர்ந்த சித்தன் முகேஷாவின் 331 கோடி பணத்தை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. முகமது ஷாபியின் கூட்டாளியான அப்துல் ஷெரிப், போதை பொருள் வழக்கில் சென்னையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுதும் மோசடியில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்ட உடனடி லோன் ஆப்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிது புதிதாக மொபைல் ஆப் உருவாக்கி மோசடி செய்கின்றனர். பொதுமக்கள் உடனடி லோன் ஆப் டவுன்லோடு செய்து கடன் பெற வேண்டாம். கடன் வாங்கிய நபர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவர். இதுபோன்ற மிரட்டல் வந்தால், 1930 தொலைபேசி எண்ணில் அல்லது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Oviya Vijay
ஜன 24, 2025 18:28

தயவுசெய்து இது போன்ற ஏமாற்றுக்காரர்களின் வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் சுற்றம் மற்றும் நட்பு இதில் மட்டும் நீங்கள் நம்பிக்கையுள்ள ஆளாக பெயர் வாங்கினால் கண்டிப்பாக உங்களுக்கு தேவையான உதவிகள் நீங்கள் பெறக்கூடும். அதே போல் உங்கள் சுற்றத்திற்கும் நட்பிற்கும் அவர்களது தேவைகளின் போது நீங்களும் உதவிட வேண்டும். இதன் மூலமாக நம்பிக்கை வட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். வாங்குவதால் மட்டுமின்றி கொடுப்பதற்கும் நாம் தயாராக இருக்கும் பட்சத்தில் இவ்வாறான நம்பிக்கை வட்டம் உருவாகும். என் அனுபவத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முயற்சித்துப் பாருங்கள்...


அப்பாவி
ஜன 24, 2025 16:09

இந்தியாவில் இருக்கும் தத்தி சட்டங்கள் இருக்கும் வரை நீங்க உலக ஃபேமஸ் ஆயிடுவீங்க சாப். நம்ம சட்ட மேதைகள் சூப்பரா காப்பியடிச்சு எழுதியிருக்காங்க.


முக்கிய வீடியோ