உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அட்ச, தீர்க்க ரேகைகளுடன் நில வரைபடம்: நிலத்தை எளிதாக அடையாளம் காண வசதி

அட்ச, தீர்க்க ரேகைகளுடன் நில வரைபடம்: நிலத்தை எளிதாக அடையாளம் காண வசதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நிலம் அமைந்துள்ள இடத்தை, புவியியல் அடிப்படையில் துல்லியமாக அளந்து, அட்ச, தீர்க்க ரேகை விபரங்களுடன், நில வரைபடம் தயாரித்து வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டா பெயர் மாற்றத்துக்கு, வருவாய் துறையை அணுகுகின்றனர். அங்கு, நிலத்தின் விபரங்கள் சரி பார்க்கப்பட்டு, பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதில், ஒரு நிலம், பல்வேறு பாகங்களாக பிரிக்கப் பட்டு, வெவ்வேறு நபர்களுக்கு விற்கப்படும் நிலையில், அதன் பிரதான சர்வே எண்ணில், பல்வேறு உட்பிரிவுகள் ஏற்படுத்தப்படும். இதற்காக நிலம் முழுமையாக அளக்கப்பட்டு, ஒவ்வொரு உட்பிரிவுக்கும் தனித்தனியே நில வரைபடம் தயாரிக்கப்படும். இந்த வரைபடங்களில், சம்பந்தப்பட்ட நிலத்தின் நான்கு கோணங்கள், அதை ஒட்டியுள்ள சர்வே எண்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. மனை வாங்கிய நபர், இந்த வரைபடத்தை வைத்து, அந்த நிலத்தை யதார்த்த சூழலில், நேரடியாக அடையாளம் காண முடியாது. மீண்டும் நில அளவையாளர் வந்து, கிராம வரைபடங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து, உரிய நிலத்தை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.பொதுமக்கள் நேரடியாக தங்கள் நிலத்தை அடையாளம் தெரிந்து கொள்ளும் வகையில், நில வரைபடத்தில் மாற்றங்கள் செய்ய, வருவாய் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில அளவை பணியில், பல்வேறு நிலைகளில் நவீன கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன்படி, டி.ஜி.பி.எஸ்., மற்றும் சி.ஓ.ஆர்.எஸ்., எனப் படும் நவீன கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றை பயன்படுத்தி நிலத்தை அளக்கும் போது, அதன் ஆவணத்தில், அந்த நிலம் அமைந்துள்ள பகுதியை துல்லியமாக அடையாளப்படுத்தும் வகையில், அட்ச, தீர்க்க ரேகை விபரங்கள் சேர்க்கப்படும். இந்த விபரங்களை இணையதளத்தில் பதிவிட்டால், உலக வரைபடத்தில், அந்த நிலம் எங்கு அமைந்துள்ளது என்பதை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். முதல் கட்டமாக, நாமக்கல், ராணிப்பேட்டை, பெரம்பலுார், விருதுநகர் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால், பட்டா மாறுதலின் போது, நில வரைபடத்தின் மிக துல்லியமான தகவல்கள் மக்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி