வாசகர்கள் கருத்துகள் ( 2 )
துட்டுக்கு ஓட்டு ஜனநாயகத்திற்கு வேட்டு
காசுக்கு ஓட்டு போடாமல் நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க.
'ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 95 சதவீதம் வெற்றி பெற வேண்டும். இளைஞரணி நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் திட்டங்களை வகுத்து, தயாராக இருக்க வேண்டும்' என, மாவட்ட செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில், 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் ஜன., 5ல் நிறைவு பெறுகிறது. அதற்கேற்ப, இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சி நிர்வாகத்துக்காக மத்திய அரசின் நிதி கிடைப்பது சிக்கலாகும்.எனவேதான், உள்ளாட்சி தேர்தல் நடத்த, சென்னையை தவிர தமிழகம் முழுதும் ஓட்டுப்பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், ஆளுங்கட்சியும், ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுதான், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள உள்ளது.'தி.மு.க., மட்டுமல்ல கூட்டணி கட்சிகளும் சேர்த்து, 95 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கேற்ப, வியூகம் வகுத்து செயல்படுங்கள் என, மூத்த நிர்வாகிகள், மா.செ.,க்களுக்கு, அமைச்சர் உதயநிதி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்த போது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது எதிர்கட்சியாக இருந்த தி.மு.க., கடுமையாக மோதியது. இதில், தி.மு.க., கூட்டணி 55 சதவீத இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சியில் இருந்த போதும், அ.தி.மு.க., இரட்டைத் தலைமையாக இயங்கியதாலேயே, எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சி பெற முடியாமல் போனது. ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் இப்போதைக்கு அ.தி.மு.க., நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது. கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது; எதிர்கட்சியாக இருந்த போதும், வலு இல்லாமல் இருக்கிறது.தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளது; கூட்டணி வலுவாக இருப்பதோடு, கடந்த தேர்தலில் கூட்டணியில் இல்லாத மக்கள் நீதி மய்யம் கட்சியும் தற்போது கூட்டணியில் இணைந்துள்ளது. அதனால், ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் தி.மு.க., கூட்டணி கூடுதல் வலுவாகி இருக்கிறது. எனவே, தி.மு.க., கூட்டணி, ஏற்கனவே பெற்றதை விட, 40 சதவீதம் கூடுதலாக, அதாவது, 95 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும் என, முதல்வர் கருதுகிறார். இதற்காக புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் முதல்வர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, முதல்வர் இடத்தில் இருந்து கட்சியின் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி, தனக்கு நம்பிக்கையானவர்கள் வாயிலாக சில கட்சியினரிடம் பேசி வருகிறார்.நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாது; சட்டசபை தேர்தலில் தான் போட்டி என, ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, அக்கட்சி கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தோல்வி அடைந்த புதிய தமிழகம், தி.மு.க., கூட்டணியில் இணைய விரும்பினால், அக்கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
“ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலை உள்ளது. நாட்டிலேயே, தேர்தல் அறிவித்த 24 மணி நேரத்திற்குள், தேர்தலை சந்திக்கும் கட்சியாக, தி.மு.க., தயாராக உள்ளது. அந்தளவிற்கு கருணாநிதியும், முதல்வர் ஸ்டாலினும் கட்சியை வலுவாக உருவாக்கி வைத்துள்ளனர். தி.மு.க., கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். பா.ம.க., - புதிய தமிழகம் கட்சி வர வேண்டும் என்றால், கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். விஜய் கட்சி உட்பட யார் வேண்டுமாலும் கூட்டணிக்கு வரலாம்.
அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர் கூறியதாவது: கட்சி ரீதியாகவும், கூட்டணியாகவும் பலவீனமாக இருப்பதால், அ.தி.மு.க., தரப்பு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராக இல்லை. அதனாலேயே, உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்று கட்சி ரீதியில் ஆளும் தரப்புக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்கவில்லை. இருந்தபோதும், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில், தி.மு.க., அவ்வளவு எளிதாக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.இதற்காக கட்சியின் சட்டப் பிரிவு பொறுப்பாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் யோசனைபடி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்குப் பின், தேர்தல் தள்ளி வைப்புக்கான கோரிக்கையோடு, கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அக்கட்சி பிரமுகர்கள் கூறினர்.- நமது நிருபர் -
துட்டுக்கு ஓட்டு ஜனநாயகத்திற்கு வேட்டு
காசுக்கு ஓட்டு போடாமல் நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க.