உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜிவின் இலங்கை கொள்கை தோல்விக்கு ராணுவம், உளவுத்துறையே முக்கிய காரணம் மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு

ராஜிவின் இலங்கை கொள்கை தோல்விக்கு ராணுவம், உளவுத்துறையே முக்கிய காரணம் மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு

கவுசாலி : 'முன்னாள் பிரதமர் ராஜிவ் வகுத்த இலங்கை கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு நம் ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம்' என, மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் கவுசாலியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடந்தது.

சமூக எல்லை

இதில் பங்கேற்ற மணிசங்கர் அய்யர் பேசியதாவது:

ராஜிவ் தேர்ந்தெடுத்த அரசியல் கொள்கைகளுக்கும், தற்போதுள்ள நிர்வாகத்தின் அரசியல் கொள்கைளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தற்போதைய அரசியல் கொள்கைகள், நம் நாட்டின் புவியியல் மற்றும் சமூக எல்லைகளை புறக்கணிக்கின்றன. இலங்கை சிதறுண்டால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதை ராஜிவ் உணர்ந்திருந்தார். இதனால், இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார். இலங்கை சிதறிவிடாமல் இருப்பதை தடுக்கவும், தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் தலைதுாக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கையை ராஜிவ் எடுத்தார். இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது, அந்நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தான்; ஆட்சியை கைப்பற்ற அல்ல. ஆனால், அந்த முடிவு தவறாக மாறியது. முக்கிய தமிழ் தலைவர்கள் மற்றும் போராளி குழுக்களை தவறாக எடை போட்டதால், அனைத்தும் தவறாகி போனது. எது மிக முக்கியம் என ராஜிவ் நினைத்தாரோ, அந்த விஷயமே அவரை அரசியல் ரீதியாக மிகப் பெரிய விலையை கொடுக்க வைத்தது. அதற்கு காரணம் நம் ராணுவமும், உளவுத்துறையும் அவரை கைவிட்டது தான். இவ்வாறு அவர் கூறினார். இலக்கிய திருவிழாவின் போது, 'பாபர் மசூதி இடிப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 'டிவி'யில் ராமாயண தொடரை ஒளிபரப்பு செய்தது யார்?' என, மணிசங்கர் அய்யரிடம் கேள்வி கேட்கப்பட்டது. நம் இதிகாசம் அதற்கு அவர், ''நம் பாரம்பரியத்தின் மீது ராஜிவ் மிகுந்த மதிப்பும் பெருமையும் கொண்டிருந்தார். அவர் தான் ராமாயண தொடரை, 'டிவி'யில் ஒளிபரப்ப முக்கிய காரணமாக இருந்தார். ''நம் இதிகாசத்தை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதை செய்தார். மத ரீதியிலான பிரசாரத்துக்காக அவர் அதை செய்யவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ