உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டுக்கு பணம் தாராளம்: தேர்தல் கமிஷன் என்னதான் செய்கிறது?

ஓட்டுக்கு பணம் தாராளம்: தேர்தல் கமிஷன் என்னதான் செய்கிறது?

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்று கூறப்படுகிறது. 'கோட்டை' அந்தஸ்தை தக்கவைக்க அ.தி.மு.க.,வினரும், அதில் 'ஓட்டை' போட தி.மு.க.,வினரும் தீவிர பிரசாரம் செய்தனர். பிரசாரத்தை மட்டுமே நம்பாமல் ஓட்டுக்கு இவ்வளவு என வாக்காளர்களுக்கு பணம் வாரி வழங்கப்பட்டது. எங்கே, யார், எவ்வளவு கொடுத்தனர் என்ற விவரம் அறிந்தும் தேர்தல் ஆணையத்தினர் பெயரளவுக்கே நடவடிக்கை எடுத்தனர்.

சிங்காநல்லுார் தொகுதி

இங்கு ஏற்கனவே, சில்வர் அண்டாவை தி.மு.க.,வினரும், 'ஹாட்பாக்ஸ்' உள்ளிட்ட தொகுப்புகள் அடங்கிய பரிசு பொருட்களை அ.தி.மு.க.,வினரும் வாக்காளர்களுக்கு வழங்கிவிட்டனர். கடந்த ஒரு வாரமாகவே பணம் பட்டுவாடாவும் தீவிரமாக நடந்தது. தி.மு.க., தரப்பில் ஓட்டுக்கு ரூ.1,500 மற்றும் அ.தி.மு.க., தரப்பில் ரூ.1,000 வழங்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி

அ.தி.மு.க., காங்., இரு கட்சிகளுமே பாரபட்சமின்றி பணம் கொடுத்தன. அ.தி.மு.க.,வினர் ஓட்டுக்கு தலா ரூ.1,000 கொடுத்தனர். சில பகுதிகளில் ரூ.500 மட்டுமே வழங்கினர். நிச்சயமாக அ.தி.மு.க., ஓட்டு எனத் தெரிந்த இடங்களுக்கு மட்டுமே ரூ.1,000 வழங்கப்பட்டது. காங்., தரப்பில் ஆரம்பத்தில் இருந்தே சுணக்கம் காணப்பட்டது. ஆனால், இறுதிக் கட்டத்தில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கூட்டணிக் கட்சியுடன் இணைந்தே பட்டுவாடா நடந்தது. கையில் பட்டியல் வைத்துக் கொண்டு எந்தெந்த பூத் பகுதிகளைக் கவனிக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் பட்ஜெட் போட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பட்டுவாடா நடந்தது.

கோவை தெற்கு தொகுதி

இத்தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் என, வீடு வீடாக சென்று தி.மு.க.,வினர் பணம் கொடுத்தனர். இன்று தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பணம் பட்டுவாடா நடந்தது.புலியகுளம், அம்மன்குளம், பெரியார் நகர், சுங்கம் உள்ளிட்ட பகுதி களில் தி.மு.க.,வினர் ஏற்கனவே பெரும் பாலானவர்களுக்கு பணம் கொடுத்து விட்டனர். நேற்று காலை முதல் விடுபட்டவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து ஓட்டுப்போட வந்திருப்பவர்களுக்கு பணம் கொடுத்தனர். தேர்தல் பறக்கும் படையினருக்கு சந்தேகம் வராமல் இருக்க, இரண்டு பேர்களாக டூவீலரில் சென்று பணம் பட்டுவாடா செய்ததை காண முடிந்தது.

கோவை வடக்கு தொகுதி

தி.மு.க.,வினர் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபாய் வழங்கினர். ரத்தினபுரி சாஸ்திரி நகரிலுள்ள தி.மு.க.,மன்றத்தில் பகல் நேரத்தில் வாக்காளர்களை வரவழைத்து பட்டியலை சரிபார்த்து பணப்பட்டுவாடா நடந்தது. சாய்பாபாகாலனி கே.கே.புதுார், நல்லாம்பாளையம் புதுத்தோட்டம், வேதாம்பாள் நகர், ஜீவாநகரில் காரில் சென்ற தி.மு.க.,வினர், காரை ஓரமாக நிறுத்தி விட்டு நடந்தே சென்று பண வினியோகத்தில் ஈடுபட்டனர்.வேலாண்டிபாளையம் கோயில்மேடு பகுதியிலும், கண்ணப்பநகரிலுள்ள, 10 வீதிகள், கணபதி மூர்மார்க்கெட், டீச்சர்ஸ்காலனி, பூந்தோட்டம், கணபதிமாநகர் முழுக்க உள்ள தெருக்களில் ஸ்கூட்டரில் பண்டல் பண்டலாக ரொக்கம் எடுத்துச்சென்று வாக்காளர்களுக்கு வினியோகித்தனர்.அ.தி.மு.க.,சார்பில் வேலாண்டிபாளையம், ரத்தினபுரி, வெங்கிட்டாபுரம் காந்திநகர், நல்லாம்பாளையம், கண்ணப்பநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் கைபை சகிதமாக சென்ற உள்ளூர் நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு ரூ.1,000 கொடுத்தனர்.

தொண்டாமுத்துார் தொகுதி

தொண்டாமுத்தூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் ரூ.1,000, அ.தி.மு.க., சார்பில், ரூ.1,000 வீடு வீடாக வழங்கப்பட்டது. நேற்று மாலை வரை 80 சதவீத வாக்காளர்களுக்கு வினியோகம் முடிந்தது. த.வெ.க., சார்பில் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் உள்ள வாக்காளர்களுக்கு தலா, 500 ரூபாய் வீதம் வினியோகித்துள்ளனர்.

சூலூர் தொகு

தி சூலூர் தொகுதியில் இரு பிரதான கட்சிகளும் வாக்காளர்களின் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அச்சு பிசராமல் செய்து முடித்துள்ளனர். அ.தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு ரூ. ஆயிரம், தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, ரூ.2 ஆயிரம் எவ்வித தங்கு தடை யுமின்றி வழங்கப் பட்டது. சொந்த கட்சியினர், கூட்டணி கட்சியினருக்கு பூத் வாரியாக, 10 ஆயிரம், 20 ஆயிரம் என, இரு கட்சியினரும் வாரி வழங்கி உள்ளனர்.

பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட சிறுவர்கள்

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டிருந்தும், பிரசார நிறைவு நாளில் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டனர். அரசியல் கட்சியினர் ஓட்டு சேகரிக்கச் சிறுவர்களை பயன்படுத்துவது, வாகனங்களில் ஏற்றி கோஷமிட வைப்பது மற்றும் கொடிகளை ஏந்த செய்வது போன்றவை சட்டப்படி குற்றமாகும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரசார நிறைவு நாளன்று கோவை தெற்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் பிரசார நிறைவு கூட்டத்தில் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டனர். வழக்கம்போல் இதன் மீதும் நடவடிக்கை இல்லை.

சமாளிக்கிறார் தேர்தல் அதிகாரி

பண வினியோக புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பவன்குமார் கூறுகையில், “புகார்கள் அதிகம் பெறப்பட்ட கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 6 தொகுதிகளில் கூடுதல் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. பணம், இலவசப் பொருட்கள் மற்றும் கூப்பன்கள் வினியோகம் தொடர்பான அனைத்து புகார்களிலும் பாரபட்சமின்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான தனிப்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி