உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கப்படாத ரூ.3,000 பாஸ்டேக் பாஸ் வாகன ஓட்டிகள் அவதி; வாக்குவாதம் அதிகரிப்பு

மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கப்படாத ரூ.3,000 பாஸ்டேக் பாஸ் வாகன ஓட்டிகள் அவதி; வாக்குவாதம் அதிகரிப்பு

சென்னை: ரூபாய், 3,000 செலுத்தி பெறப்படும், 'பாஸ்டேக்' வருடாந்திர பாஸ், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்கப்படாதது, வாகன ஓட்டிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அதிகரித்துஉள்ளது. தமிழகத்தில், 6,600 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இச்சாலைகள் வழியே, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவற்றுக்கு கட்டணம் வசூலிக்க, 78 இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய திட்டம் அதேபோல, மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, வண்டலுார் - மீஞ்சூர் இடையேயான வெளிவட்ட சாலை, அக்கரை - மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலை போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் தேங்காமல் இருக்க, ரொக்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்கப்பட்டு, மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்டது. வாகன உரிமையாளர்கள், இந்த பாஸ்டேக்கில் முன்னரே குறிப்பிட்ட அளவு தொகையை செலு த்தியிருக்க வேண்டும். குறிப்பிட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது, அங்குள்ள கண்காணிப்பு கேமரா, மின்னணு கருவி வாயிலாக, சுங்க கட்டணம் கழித்து கொள்ளப்படும். அதன் விபரம், வாகன உரிமையாளர்கள் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்நிலையில், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, ஓராண்டுக்கு அல்லது, 200 முறை சுங்கச்சாவடிகளை பயன்படுத்தி கொள்ளும் புதிய திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்தது. தமிழகத்தில் ஏராளமான வாகன உரிமையாளர்கள், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, இந்த வருடாந்திர பாஸ்டேக் பாஸ் முறையில் இணைந்துள்ளனர். அவர்களின் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, ஓராண்டுக்கு, 200 முறை என்ற அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. அதில், பிரச்னையில்லை. பரிசீலனை ஆனால், சென்னை வெளிவட்ட சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் இந்த வாகனங்கள் செல்லும் போது, அங்குள்ள சுங்கச்சாவடிகளில், இந்த, 3,000 ரூபாய் வருடாந்திர பாஸ் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதற்கு மாறாக, வழக்கமான பாஸ்டேக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பழைய பாஸ்டேக்கில் பணம் இல்லையெனில், 3,000 ரூபாய் செலுத்தி பெற்ற பாஸ் இருந்தும், இரு மடங்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தற்போது, இரு விதமான பாஸ்டேக் கணக்குகளை பராமரிக்க வேண்டிய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இப்பிரச்னைக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்ப்பதற்கான பரிந்துரைகள், மாநில நெடுஞ்சாலை செயலர் செல்வராஜ் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. 'இதற்கென தனி திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
செப் 08, 2025 11:04

தேசிய நெடுஞ்சாலை துறையினர் வருடாந்திர பாஸ் திட்டம் அமல் படுத்தும் முன்பே இந்த விஷயத்தை தெளிவு படுத்தியுள்ளனர். வருடாந்திர பாஸ் திட்டம் பணம் முழுவதும் மத்திய அரசுக்கு போகிறது, அப்புறம் மாநில அரசு எப்படி அதை அனுமதிக்க முடியும். எதையும் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் குய்யோ முறையோ என்று கத்துவது நம்மவர் வழக்கம்!


அப்பாவி
செப் 08, 2025 09:47

அவிங்க உருவினால் இவிங்களுக்கு பங்கு தர மாட்டாங்க. அதான்.


நிக்கோல்தாம்சன்
செப் 08, 2025 08:35

தமிழ்நாட்டில் பாதி tolgattugal இன்றைய ஆளும் அரசின் பினாமிகளுடையது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், இந்த அரசு மாறினால் இந்த சிக்கல் உடனடியாக தீரும் என்பது எனது கணிப்பு, இல்லையா இப்படி மக்கள் வெறுப்படைகிறார்கள் என்று தலைமை குடும்பம் உணர்தலும் இது தீரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை