எல்லாம் 'ஓகே' முதல்வரே... இதையும் கொஞ்சம் கவனிங்க!
'முதல்வர் ஸ்டாலின், இதற்கு முன் ஆட்சி செய்த முதல்வர்களை காட்டிலும் சற்று வித்தியாசமானவர். தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஓட்டளிக்காதவர்களுக்கும் சேர்த்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசியல் பாகுபாடு காட்டாமல், அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்த திட்டங்களை முடக்காமல், மக்களின் தேவையை உணர்ந்து அவற்றை செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்' என்ற பாராட்டை பெற்றிருக்கிறார்.இதற்கு உதாரணமாக, கோவை மாவட்டத்தில் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம்; திருச்சி ரோடு மேம்பாலம்; உக்கடம் - ஆத்துப்பாலம் உள்ளிட்ட திட்டப்பணிகளை சொல்லலாம். தற்போது அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடக்கிறது. அதேவேளையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த பல்ேறு திட்டங்கள் மற்றும் பணிகள், அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் அலட்சியம் காரணமாக இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருக்கின்றன என்ற அதிருப்தியும் நிலவுகிறது. அவற்றில் சிலவற்றையும், மக்களின் எதிர்பார்ப்பையும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.இவற்றையும் சரி செய்தால் மக்களின் நம்பிக்கையினை இந்த அரசு பெறலாம்!'குப்பையாக வீசப்பட்ட ரூ.52 கோடி..
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சமயங்களில், முந்தைய ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை நிறுத்தி வைப்பதோ அல்லது முடக்கி விடுவதோ வாடிக்கை. வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை மீண்டும் தொடர்ந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்கிற கோரிக்கை தெற்குப்பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தற்போது ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகமான பயணிகள் போத்தனுாரை பயன்படுத்த ஆரம்பித்து இருப்பதால், வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்தை முழுமையாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், லட்சக்கணக்கான மக்கள் பயனடைவர். கோவையின் தெற்குப்பகுதி வளர்ச்சி அடையும்.
இத்திட்டத்தில் இதுவரை, 37 சதவீதம் கட்டுமான பணி முடிந்திருக்கிறது; மாநகராட்சி பங்களிப்பு தொகை ரூ.52.46 கோடிசெலவழிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை ரூ.84 கோடி விடுவிக்க வேண்டும். அந்நிதியை விடுவித்து செயல்படுத்தினால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும்.தற்போது மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. எல் அண்டு டி பைபாஸ் விரிவாக்கம் செய்யும்போது, நகரம் பெருமளவில் வளர்ச்சி அடையும். நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. முதல்வரின் கடைக்கண் பார்வைக்காகவும், அவரது அறிவிப்புக்காகவும் தெற்குப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
குப்பைக்கு போன 'மீண்டும் மஞ்சப்பை'
வீதிகளில் துாக்கி எறியப்படும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர் மற்றும் டம்ளர்கள் உள்ளிட்டவை நீர்நிலைகள் மற்றும் வடிகால்களில் அடைத்துக் கொள்வதால், ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது. அவற்றின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்திருந்தாலும், அதிகாரிகள் அக்கறையோடு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஓட்டல், மெஸ், பேக்கரி, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டுகள், வாரச்சந்தைகள் உள்ளிட்டவற்றில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது.
இதற்கு பதிலாக, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கினார். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பல இடங்களில் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் ரூ.10 செலுத்தினால் மஞ்சள் பை பெறும் வகையில் தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டன. அவை சரியாக செயல்படுவதில்லை; அதிகாரிகள் கண்காணிப்பதும் இல்லை. அதனால், மஞ்சப்பை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் இல்லை; எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
உருவாக்கலாமே தமிழக பருத்தி கழகம்
உலகளவில் பருத்தி விளைச்சல் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பருத்தி விளைச்சலை, 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்டுக்கு, 325 லட்சம் பேல் பருத்தி விளைவிக்கப்படுகிறது; 2030ல், நமக்கு, 500 லட்சம் பேல் பருத்தி தேவைப்படும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. தேவைக்கேற்ப விளைவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.தமிழக அளவில் ஆண்டுக்கு, 100 லட்சம் பேல்களை விட அதிகமாகவே தேவை. ஆனால், 6 -7 லட்சம் பேல்களே விளைவிக்கப்படுகிறது. பருத்தி உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, ஜவுளித்துறையினர் கூறுகின்றனர். பவானிசாகர், விழுப்புரம், பண்ருட்டி போன்ற பகுதிகளில் அறுவடை முடிந்ததும் பருத்தி விளைவிப்பர்; இப்போது, அதை குறைத்து விட்டனர். சேலம், ஆத்துார், கொங்கனாபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, கோவில்பட்டி, வாசுதேவநல்லுார், திருநெல்வேலி, பழனி, ஒட்டன் சத்திரம், அருப்புக்கோட்டை, தேனி, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விளைவிக்கப்படுகிறது. தமிழக அரசு முயற்சித்தால், பருத்தி விளைச்சலை அதிகரிக்க முடியும்.இந்திய பருத்தி கழகம் போல், 'தமிழக பருத்தி கழகம்' உருவாக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.இடம் மாற்றப்படாத கோவை மத்திய சிறை
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு, அப்பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். முதல்கட்டமாக, 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா பேஸ்-1 பணி நடந்து வருகிறது; அதை முதல்வர் இன்று கள ஆய்வு செய்கிறார். மத்திய சிறையை மாற்றியதும், மீதமுள்ள இடங்களில், செம்மொழி பூங்கா பேஸ்-2 பணி செயல்படுத்தப்படும் என அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பேசியிருந்தார்.அதன்படி, காரமடை அருகே பிளீச்சிக்கு மாற்றம் செய்வது தொடர்பாக, கடந்தாண்டு அக்., மாதம் கோவையில் உள்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காந்திபுரத்தில் தற்போதுள்ள சிறை வளாகம் போலவே சதுர வடிவில் அமைக்க, பூமி தான நிலத்துக்கு அருகாமையில் உள்ள, 38 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதில், 30 ஏக்கர் நிலத்துக்கு, அரசுக்கு சொந்தமான நிலத்தை, மாற்று இடமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.மீதமுள்ள எட்டு ஏக்கர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்த இரண்டு ஏக்கர் என, 10 ஏக்கர் நிலம், விலை கொடுத்து வாங்க வேண்டும். இதற்கு மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. பல மாதங்களுக்கு மேலாகியும், தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறது. அதிகாரிகளிடம் விசாரித்தால், மத்திய சிறையை பிளீச்சிக்கு மாற்றுவது தொடர்பாக திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பி விட்டோம் என்கின்றனர்.சர்வதேச கிரிக்கெட் மைதானம்: வெளியிடப்படாத அரசாணை
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தி.மு.க., தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், எம்.பி., பதவியை கைப்பற்றியது. உடனடியாக இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ஒண்டிப்புதுாரில் தற்போது திறந்தவெளி சிறை மைதானமாக உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஸ்டேடியம் கட்டுவதற்கான வரைபடம் தயாராக டெண்டர் கோரப்பட்டது. 'ஸ்டேடியம் மாடல்' இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையும் வெளியிடப்படவில்லை. கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு அடிக்கல் நடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான நிதியையும் ஒதுக்கி, அரசாணை வெளியிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இழுபறியில் மெட்ரோ ரயில் திட்டம்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கள ஆய்வு செய்து, முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடுகளை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. 2024 பிப்., 16ல் ஒப்புதல் அளித்த தமிழக அரசு, நிதியுதவிக்காக, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. 'மெட்ரோ' திட்டம் செயல்படுத்த வேண்டுமெனில், விரிவான திட்ட அறிக்கையோடு, 'காம்ப்ரிஹென்சிவ் மொபிலிட்டி பிளான்' வேறொரு வழித்தடத்துக்கு ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். இவ்விரு அறிக்கைகளை அனுப்பாததால், 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கை திரும்பி வந்திருக்கிறது. திட்ட அறிக்கையில் உள்ள சிக்கல்கள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, விரைந்து தீர்வு காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.பெருநகர வளர்ச்சி குழுமம் எப்போது?
நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த முடிவு செய்த தமிழக அரசு, கோவை, திருப்பூர், மதுரை, ஒசூர் நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2021ல் அறிவிப்பு வெளியிட்டது. பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2022ல் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் சிறப்பு அதிகார பணியிடங்கள் உருவாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் இட மாறுதலாகிச் சென்றதால், பெருநகர குழுமம் அமைப்பில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. துாசி தட்டி செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டியது கோவைக்கு மிக அவசியம்.'உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0'
வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டில், 'உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0' அறிவிக்கப்பட்டது. வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், பட்டுவளர்ச்சி என, வேளாண் சார்ந்த அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, 3, 4 ஊராட்சிகளை உள்ளடக்கி, அலுவலர்கள் நியமிக்கப்படுவர். சுமார் 1,200 எக்டர் பரப்பு உதவி வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலருக்கு ஒதுக்கப்படும். சாகுபடி தொடர்பாக, விவசாயிகளுக்கு அவர் உதவுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.