உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிந்தனைக்களம்: நீட் நிரந்தரமானது: தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனம்

சிந்தனைக்களம்: நீட் நிரந்தரமானது: தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க தமிழக சட்டசபை நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதி மறுத்துவிட்டார். இது எதிர்பார்க்கப்பட்டது தான். அதை தொடர்ந்து, தமிழக முதல்வர், 'தமிழக மக்களின் எண்ணங்களையும், சட்டசபை தீர்மானங்களையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. 'மத்திய அரசு நம் கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம்; ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நம் போராட்டம், எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை' என்று சட்டசபையில் பேசினார். நீட் விலக்கு மசோதாவாக இருந்தாலும் சரி, மேற்படி எந்த போராட்டமாக இருந்தாலும் சரி, அதன் முடிவு ஒன்று தான்... நீட் தேர்வை விலக்க முடியாது.

காரணம் என்ன?

தேசத்தில் உள்ள அனைத்து விதமான மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் இளங்கலை மருத்துவம் - எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவம் - பி.டி.எஸ்., படிப்புகளில் பாடத்திட்டங்கள் என்ன என்பதை, என்.எம்.சி., எனப்படும் தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்கிறது. அதாவது, தேசம் முழுதும், ஒரே தரத்தில் மருத்துவ கல்வியை உறுதி செய்கிறது. அந்த பாடத் திட்டங்களை கற்க, சில பாடப் பிரிவுகளில் குறைந்தபட்ச திறன் வேண்டும். அந்த திறன் இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்க, தேசம் முழுதும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வு தேவை என்று என்.எம்.சி., சட்டத்தின் 14வது பிரிவு கூறுகிறது. அந்த சட்டம் இதை வலியுறுத்துவதற்கு முக்கிய காரணங்கள்...மருத்துவ படிப்பில் சேர்பவர்கள், அதில் தேர்ச்சி பெற தகுந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், மிகுந்த போட்டியுள்ள இடங்கள் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கு சென்று வீணடிக்கப்படும். ஒரு படி மேலாக, தகுதியற்ற செல்வந்தர்களை தேர்ச்சி பெறச் செய்ய, கல்வி நிறுவன அளவில் முறைகேடுகள் நடக்கலாம். தேசிய மருத்துவ கவுன்சில் மருத்துவ கல்வியை நிர்வகித்த காலத்தில், இதெல்லாம் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இடப் பற்றாக்குறையால், ஒரு மாநிலத்தில் வாய்ப்பு கிடைக்காத ஓர் தகுதியுள்ள மாணவர், மற்றொரு மாநிலத்தில் வாய்ப்பு தேட வழி செய்ய வேண்டும். நீட்-டுக்கு முந்தைய காலத்தில் பணபலம் மட்டுமே இதற்கு ஒரு வழியாக இருந்தது. இதற்கு, பாரதத்தின், 28 மாநிலங்களிலும், எட்டு யூனியன் பிரதேசங்களிலும், தமிழக அரசியல்வாதிகள் மட்டும் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். கடந்த 2005- - 06ம் ஆண்டு, தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சி செய்தபோது, நீட் தேர்வை அறிமுகம் செய்தது; அப்போது, தி.மு.க., எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, சில சட்ட சிக்கல்களால் நீட் தேர்வு அமலுக்கு வராமல் தள்ளிப்போனது. கடந்த 2016ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து சட்ட சிக்கல்களை விலக்கியது. அப்போது, சில மாநிலங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், தாங்கள் தனி நுழைவு தேர்வு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று வைத்த கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் உறுதியாக நிராகரித்துவிட்டது. அதன் பின் தான் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. தற்போது, பார்லி மென்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம், 2019 சட்டப்படி நடத்த வேண்டிய ஒரு தேர்வாகிவிட்டது. ஆக, இது 20 ஆண்டுகளாக, தேசிய அளவில், முக்கிய ஸ்தாபனங்களில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயம். அடுத்தாண்டோடு நீட் தேர்வு அமலுக்கு வந்து, 10 ஆண்டுகளாகி விடும். இப்படி நிலையான ஒன்றை, இனி மாற்ற வேண்டுமானால், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை மாற்றி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தை தாண்டி வர வேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்று.தமிழக அரசியல்வாதிகள் தவிர வேறு எந்த மாநிலத்தவரும் இதை அரசியலாக்கவில்லை. நிலை இப்படி இருந்தும், நீட் பற்றிய பொய்களை மாணவர் மத்தியில் பரப்புவதும் குறையவில்லை; நீட் ரத்தாகும் என்று அவர்களுக்கு பொய்யான நம்பிக்கையை கொடுப்பதும் நிற்கவில்லை. மாணவர் மற்றும் பெற்றோர் நலன் கருதி ஒரு சில பொய்களை உடைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பொய்யும் மெய்யும் நீட் தேர்வு...

பொய் 1: சமூக நீதிக்கு எதிரானது.மெய் 1: மாநிலங்கள், தாங்கள் கடைப்பிடித்து வரும் இட ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க தேசிய கல்வி ஆணைய சட்டத்தில் எந்த தடையும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கிட்டு கொள்கைப்படி தான் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை நடந்து வருகிறது.பொய் 2: மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.மெய் 2: ஒரு படிப்புக்காக பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் வெவ்வேறு வகையான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எழுதும் சுமையையும் விரயத்தையும் நீட் தேர்வு விலக்குகிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு, நாட்டில் எந்த பகுதியிலும் எந்த மருத்துவ கல்வி நிறுவனத்திலும் சேரும் வாய்ப்பு உண்டு. பொய் 3: கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு கல்வியில் சம வாய்ப்பை பறிக்கிறது.மெய் 3: கிராமப்புற, ஏழை மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்ற வாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கும் பொருந்தும்!நுழைவு தேர்வை எதிர்கொள்வதில் ஒரு தொகுதி மாணவர்களுக்கு சிரமம் இருக்கிறது என்றால், அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்துவது தான் சரியான தீர்வு. நுழைவு தேர்வை எதிர்ப்பது அல்ல.பொய் 4: தமிழக மாணவர்களுக்கு மிகவும் கடினமானது.மெய் 4: இவ்வாறு கருத்து சொல்வதற்கு தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு வரையில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளின் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு வாயிலாக தான் நடைபெற்றது. அப்போது எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், அதற்குப் பிறகு நீட் தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் இருப்பதாக கூறுவதற்கு இரண்டே காரணங்கள் உள்ளன.முதலாவதாக, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறை ஆகும். அதில், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் உள்ளடக்கங்கள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. அந்த நேரத்தில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரத்தில், அனைத்து மாநிலங்களும் தங்கள் பாட திட்டங்களை சீராக்கிக் கொண்டு இருந்தன். மாறாக, தமிழகத்தில், அதை விட குறைவான தரத்தில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது.இரண்டாவது, பெரும்பாலான பள்ளிகள் பிளஸ் ௧ வகுப்பு பாடத்திட்டத்தை ஒதுக்கிவிட்டு, பிளஸ் ௨ வகுப்புக்கான பாடத்திட்டத்திலேயே முழு கவனம் செலுத்துகின்றன. நீட் தேர்வு பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதனால், தமிழக மாணவர்கள் சிரமப்படும் நிலை இருந்தது. நல்வாய்ப்பாக, தமிழக பள்ளி பாடத்திட்டம் அண்மையில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும், பிளஸ் ௧ வகுப்புக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. அதனால், தற்போது, மாணவர்கள் நீட் தேர்வை சிரமமின்றி எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது.பொய் 5: பயிற்சி மையங்கள் உருவாவதற்கு வகை செய்கிறது. அது சமத்துவத்திற்கு எதிரானது. மெய் 5: நீட் இல்லாவிட்டால் 2006 வரை இருந்தபடி வேறு ஒரு தேர்வு இருக்கும் அல்லது தனித்தனி தேர்வுகள் இருக்கும். போட்டித் தேர்வு என்று வந்துவிட்டாலே பயிற்சி மையங்களை நாடுவது வாடிக்கை தான். போட்டித் தேர்வு என்ன; பள்ளி தேர்வுகளுக்கே டியூஷன் போவது இல்லையா? பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற டியூஷன் மையம் போல் செயல்படும் பள்ளிகளும், அதீத கட்டணம் வாங்கி செயல்படத்தான் செய்கின்றன. பின், சமத்துவம் இல்லை என்ற வாதத்திற்கான இடம் எங்கு இருக்கிறது? அதனால், இதெல்லாம் சால்ஜாப்பு காரணம் தான். பொய் 6: தமிழக மாணவர்களுக்கான இடங்கள் பிற மாநிலத்தவருக்கு சென்றுவிடும்.மெய் 6: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களில், 15 சதவீத ஒதுக்கீடு நீங்கலாக அனைத்து இடங்களும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த எந்த மாணவருக்கும் அதில் இடம் கிடையவே கிடையாது. தமிழகத்தில் உள்ள 12,050 எம்.பி.பி.எஸ்., இடங்களில் 1,807 இடங்கள் தேசிய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும். அதே நேரம், மற்ற மாநிலங்களிலும் இது போல 15 சதவீத இடங்கள் தேசிய ஒதுக்கீட்டில் வரும் அல்லவா? அப்படி கிடைக்கும் இடங்கள் 15,921. அதாவது, தமிழகத்தின் மொத்த இடங்களைவிட அதிகம். இவற்றில் தமிழக மாணவர்களும் இடம் பிடிக்கலாம். உண்மையில் தமிழக மாணவர்களின் வாய்ப்பு விரியத்தானே செய்கிறது? பொய் 7: தற்கொலைக்கு வழி வகுக்கிறது. அதனால், அதை ரத்து செய்ய வேண்டும்.மெய் 7: இதை பொய் என்பதைவிட தவறான கருத்து என்று சொல்ல வேண்டும். நீட் தேர்வின் முடிவுகளால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது உண்மை. ஆனால், அதை வைத்து நீட் தேர்வே கூடாது என்பது சரியல்ல. அப்படியானால், பல ஆண்டுகளாகவே 10 மற்றும் பிளஸ் ௨ வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த விபரீத முடிவைத் தேடிய துயரமான நிகழ்வுகள் உண்டு. அதற்காக அந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட முடியுமா? தற்கொலை என்பது மிகவும் துயரமான முடிவு. மாணவர்கள் இத்தகைய விபரீத முடிவை கைவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் அதே சமயம், பல தற்கொலை சம்பவங்களுக்குத் தேர்வு முடிவுகள் மட்டுமே காரணமாக இல்லை என்பதை அனைவரும் அறிய வேண்டும். பொய் 8: மாநிலத்தின் உரிமையில் தலையிடுகிறது.மெய் 8: கல்வி, அரசியல் அமைப்பு சட்டத்தின் பொது பட்டியலில் உள்ளது. எனவே, நாட்டின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க முழு அதிகாரம் படைத்தது. அதை பின்பற்றி செயல்படுத்த வேண்டியது மாநிலங்களின் கடமையாகும்.

தயாராகுங்கள்

நீட் தேர்வில் நியாயமான, வெளிப்படையான அணுகுமுறை உள்ளது. நாட்டின் எந்த மருத்துவ கல்லுாரியிலும் பயில வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. அது மட்டும் அல்லாமல், சில வெளிநாடுகளிலும் நீட் தேர்வு முடிவு சேர்க்கைக்காக ஏற்கப்படுகிறது.நீட் தேர்வு முடிவு அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களே மாணவர் சேர்க்கையை நடத்துவதால், தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் நன்கொடை கட்டணம் என்ற சுமை ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் சமமான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்த தேர்வு சட்ட ரீதியாக நிரந்தரமானது, நாம் கணிக்கக் கூடிய எதிர்காலத்தில் அது விலக்கப்படாது. அதனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதியில்லை, அது ரத்து செய்யப்படும் போன்ற அரசியல் லாபத்திற்காக செய்யப்படும் பிரசாரங்களை நம்பாமல், மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் அனைவரும் நீட் தேர்வுக்கு தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் தயாராகும்படி வேண்டுகிறேன். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்!பாலகுருசாமி, முன்னாள் துணை வேந்தர்,அண்ணா பல்கலைக்கழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ethiraj
ஏப் 08, 2025 01:32

No of aspirants increases competition increases naturally competitive exams is a necessity. This is student parent and medical education issue. Politicians and commonmen has nothing to comment.


S Ramkumar
ஏப் 06, 2025 21:32

200ரூ உபிக்களின் காந்தல் வாடை நன்றாகவே தெரிகிறது


வரதராஜன்
ஏப் 06, 2025 13:10

ஐயா நீங்க தான் ஒரிஜினல் ஜால்ரா எப்படி ஏதோ ஒரு மாநிலத்தில் கவர்னரா இருக்கு வாய்ப்பு இருக்கு உங்களுக்கு


vivek
ஏப் 06, 2025 16:13

வராத ராஜா உனக்கு 200 ரூபாய் வந்ததா ராசா


Srinivasan Krishnamoorthy
ஏப் 06, 2025 21:38

Dr balaguruswamy is telling the fact. how long you can cheat with neet revocation, neet is going to stay and will be the gateway to medical education


அப்பாவி
ஏப் 06, 2025 06:53

அமெரிக்காவே ஆட்டம் காணுதாம். நீட் நிரந்தரமாம். எதுவும் நிலையானது கிடையாது


vivek
ஏப் 06, 2025 07:32

ரெண்டுகும் என்ன சம்பந்தம்


பாரத புதல்வன் தமிழக ஒன்றியம்
ஏப் 06, 2025 11:02

உனக்கு 200 நிச்சியம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை