'சிந்து நதி நீர் ஒப்பந்தம் மூலம், பாகிஸ்தானுக்கு தண்ணீரை வழங்கியது மிகவும் தவறான முடிவு. இந்த தவறை பின்னாட்களில் நேரு உணர்ந்துள்ளார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ajsb4ri4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 பார்லிமென்ட் நுாலக கட்டடத்தில் உள்ள பாலயோகி அரங்கில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும் பங்கேற்றனர். தவறான முடிவு தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, சி.பி.ராதா கிருஷ்ணனின் எளிய குடும்ப பின்னணி மற்றும் அவரது பிற்படுத்தப்பட்ட சமூக பின்னணியை குறிப்பிட்டு பிரதமர் பேசினார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், எம்.பி.,க்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரம் குறித்து பேசியதாவது: நம் நாட்டை ஒரு முறை அல்ல, இரண்டு முறை பிரிவினை செய்தவர் நேரு. சிந்து நதிநீர் ஒப்பந்தம் மூலம், பாகிஸ்தானுக்கு தண்ணீரை வழங்கியது மிகவும் தவறான முடிவு. இந்த தவறை பின்னாட்களில் நேரு உணர்ந்து உள்ளார். இது குறித்து தன் செயலரிடம், 'இந்த ஒப்பந்தத்தால் நமக்கு எந்த பயனும் இல்லை' என, அவர் கூறியுள்ளார். எனவே, சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது, முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரானது. இவ்வாறு அவர் பேசினார். ஒருமித்த கருத்து கூட்டத்தின் முடிவில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நிருபர்களிடம் பேசுகையில், ''தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அனைத்து எம்.பி.,க்களும் ஓட்டளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ''அதோடு, எதிர்க்கட்சி எம்.பி.,க்களும், இவரை ஆதரிக்க வேண்டும். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இவரை தேர்வு செய்ய முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்,'' என்றார்.
'கருப்பு முடி காலம் தொட்டு நண்பர்'
வேட்பாளர் அறிமுக நிகழ்வின்போது, வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, தனக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான 40 ஆண்டுகால நட்பை நினைவு கூர்ந்தார். அப்போது,''எங்கள் இருவரது தலை முடியும், கருப்பாக இருந்த காலத்தில் இருந்தே நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறோம்,'' என்றார். - நமது டில்லி நிருபர் -