உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நெல்லை இரட்டை கொலை; 7 பேர் சுற்றிவளைப்பு

நெல்லை இரட்டை கொலை; 7 பேர் சுற்றிவளைப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஜாதி வெறியால் இரண்டு பேரை வெட்டிக் கொன்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில், மூன்று டூ - வீலர்களில் அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ஒன்பது பேர் கும்பல், பெரும்பத்து, இந்திரா காலனி டீக்கடை முன் இருந்த பொதுமக்களை சரமாரியாக வெட்டினர். இதில், ஜான் மார்க், 45, என்ற மாற்றுத்திறனாளி மற்றும் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d9fbv09f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் சிலரை, அரிவாளால் வெட்டிய கும்பல், களக்காடு செல்லும் வழியில், கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு முன்னதாக உள்ள வடக்கு புளியங்குளம் கிராமத்திலும் இதேபோல வெறியாட்டம் நடத்தினர். செல்லும் வழியில், சரமாரியாக பெட்ரோல் குண்டுகளையும் வீசி சென்றவர்கள், எதிரே வந்த ஒரு நபரின் பைக்கையும் பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் இரவு முழுதும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., பிரசன்ன குமார் தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டனர். காயமடைந்த பெரும்பத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, வீராங்குளம் கணேசன், புளியங்குளம் சசிகுமார் ஆகியோர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், நெல்சன் உடல்நிலை மோசமாக உள்ளது. இறந்த ஜான், தலித் சமூகத்தை சேர்ந்தவர். இன்னொருவர், உள்ளூர் ஜாதிகளுக்கு சம்பந்தமில்லாத ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி. அப்பாவிகள் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பெரும்பத்து கிராம மக்கள் நேற்று காலை, 10:00 மணி முதல் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றதில், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிற்பகல், 2:00 மணி வரையிலும் தொடர்ந்த போராட்டம், குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என, போலீசார் உறுதி அளித்த பின் கைவிடப்பட்டது. இந்த கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட, நாங்குநேரி, தென்னிமலையை சேர்ந்த கண்ணன், 21, சுபாஷ், 19, கல்யாணி, 19, அந்தோணி மிக்கேல், 18, நம்பி நகர் இசக்கிராஜா, வள்ளியூர் உச்சிமாகாளி, 20, நெடுங்குளம் வசந்தகுமார், 21, ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக எஸ்.பி., பிரசன்ன குமார் தெரிவித்தார். கைதான ஏழு பேரும் நாங்குநேரி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஒரே சமூகத்தினர் என, எஸ்.பி., தெரிவித்தார். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: திரு நெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, மது போதையை விட, 'ஜாதி போதை' இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட, ஒன்பது பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மற்ற சமூகங்களை சேர்ந்தவர்களை தாக்கும் நோக்கில் இதில் ஈடுபட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் தலித். காயமுற்றவர்களில் ஒருவர் யாதவர், நான்கு பேர் நாடார் சமூகத்தினர். இவர்களுக்கும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே பள்ளிக்கூட மோதலில், நாங்குநேரி தலித் மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்கள், இந்த சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இதை வெறும் கஞ்சா போதை, குடி போதை என, ஒதுக்கி விட முடியாது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தென் மாவட்டங்களில் புறையோடி போயிருக்கும் ஜாதிய போதை தான், இந்த சம்பவத்தின் பின்னணியாகும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களக்காடு வழியாக, தென்காசி சென்று, பின், டூ - வீலர்களில் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வழியாக புதியம்புத்துார் வந்துள்ளனர். அங்கிருந்து சீவலப்பேரி வரும் வழியில், அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், சிலரது பின்னணியிலும் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என, தெரிகிறது. ஏழு பேர் கைதான நிலையில், மேலும் சிலரை தேடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

'ரத்த ஆறு தான் ஓடுகிறது'

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி கொலை சம்பவ காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளை மந்தமாக கடந்து விட்ட முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது. தி.மு.க., ஆட்சியில் ரத்த ஆறு தான் ஓடுகிறது. பட்டியலின மக்களை அச்சம், பதற்றத்துடன் வைத்திருப்பது தான் தி.மு.க., அரசின் சாதனையா? - பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்

முடங்கிய அரசு நிர்வாகம்

அப்பாவி மக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க துப்பற்ற நிலையில், தி.மு.க., அரசு முடங்கி கிடப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கஞ்சா போதையை கட்டுப்படுத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., அரசு, கஞ்சா சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியதன் தீய விளைவு தான் இத்தகைய தாக்குதல்கள். - அன்புமணி, பா.ம.க., தலைவர்

வெட்கக்கேடானது

திறனற்ற தி.மு.க., அரசின் நிர்வாகத்தால், எங்கு பார்த்தாலும் கஞ்சாமயமாகி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும், மக்கள் நலனையும் ஒருசேர கொன்று விட்டு, 'வெல்வோம் ஒன்றாக' என்று, தி.மு.க., அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது. - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்

'மக்களை திணறடிக்கிறது'

ஐந்து ஆண்டுகளில், 65,000 கிலோவுக்கு அதிகமாக கஞ்சாவும், 8,000 கிலோவுக்கு அதிகமாக போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில், ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை பாதித்த வன்முறை, இறுதி நாட்களில் கூட, மக்களை திணறடித்து வருகிறது. - அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்

'ரூ. 1 கோடி இழப்பீடு கொடுங்க'

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே நடந்த வன்முறை வெறியாட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு கஞ்சா போதைதான் காரணம். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், தடையின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. - ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

இது தான் ஆட்சியின் லட்சணமா?

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில், பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., எங்கே? நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழு ங்கு லட்சணம் இது தானா? ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் துாக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் பாதுகாப்பை பற்றி துளியும் யோசிக்காத இந்த ஆட்சி, துாக்கி எறியப்படுவது உறுதி - விஜய் த.வெ.க., தலைவர்

என்ன செய்கிறது உளவு போலீஸ்?

திருநெல்வேலி, திம்மராஜபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவு மண்டபத்தில், நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் குண்டு வீசியதில், அங்கிருந்த மாடம் தீக்கிரையானது.இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக, மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில், நாங்குநேரி அருகே ஒரு கும்பல் கொலை வெறியாட்டம் நடத்தி உள்ளது. ஜாதி ரீதியான இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடியும், அதிகமாகவும் நடக்கும் நெல்லை மாவட்டத்தில், முன்கூட்டியே சுதாரித்து சம்பவத்தை தடுக்காமல், உளவுத்துறை போலீசார் கோட்டைவிட்டதாக மக்கள் குமுறுகின்றனர்.அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Krishna
மார் 05, 2026 22:51

It Seems this is a Serious Goonda Case by Mentals Attacking Everybody Without CasteBasis


theruvasagan
மார் 04, 2026 18:44

அப்ப ஈரவெங்காயம் ஒழிச்சிட்டதாக சொன்னது எந்த கருமத்த.


சந்திரசேகர்
மார் 04, 2026 17:42

எந்த சாதி எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறார்களோ அந்த சாதி மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து எம் எல் ஏ வேட்பாளர் அல்லது எம் பி சீட்டுக்கு நிற்க வைப்பது தான் சமுக நீதி. சாதிகள் இல்லை தமிழகத்தில். இது பெரியார் மண்ணு. நம்புங்க தமிழக மக்களே. நம்புங்கள்


Sun
மார் 04, 2026 16:24

சுற்றி வளைத்தாலும் சரி, சுற்றாமல் வளைத்தாலும் சரி!சம்மந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுங்கள். முதல்வரின் இரும்புக் கரம் துருப்பிடித்து போவதற்குள் அதற்கு வேலை கொடுங்கள்.


தயாளன்
மார் 04, 2026 15:38

கொல்வோம் ஒன்றாக


பேசும் தமிழன்
மார் 04, 2026 12:54

எல்லாம் சரி..... முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்க்கு.... குற்றவாளிகள் முகத்தை மறைத்து இருப்பது ஏன் ?


Arul Narayanan
மார் 04, 2026 10:54

உளவுத்துறையா? அது எங்கே இருக்கிறது? வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு ஆட்சியாளர்கள் விரும்பும் வண்ணம் ரிப்போர்ட் தயாரித்து அளிப்பது தான் உளவுத்துறை.


Mani . V
மார் 04, 2026 05:25

ஆபீஸர்ஸ் பசங்க நம்ம கட்சி பசங்க அதுனால போலி மாவுக்கட்டு போட்டு போட்டோ எடுத்து பேப்பரில் போட்டு எட்டுக் கோடி மக்களையும் மு...டாள்கள் ஆக்க வேண்டும். அப்புறம் அந்த போலிக் கட்டில் மானே, தேனே மாதிரி கொஞ்சம் கூடுதலாக சிவப்பு சாயத்தை ஊற்றி விடுங்க. இல்லையின்னா மக்களை ஏமாற்றுவது கொஞ்சம் சிரமம். இருந்தாலும் முட..டாள் மக்கள் 5000 ரூபாய் பற்றித்தான் பேசுவார்கள்.


raja
மார் 04, 2026 04:30

அப்போ அந்த தமிழனை ஏமாற்றி பிழைத்த திருட்டு திராவிட ஈரோட்டு மண்ட கசாய வெங்காயம் ஒரு ஆணிய கூட புடுங்காம ஜாதிய ஒழிச்சிட்டோமுண்ணு சொல்லிட்டு போயிட்டான்னு சொல்லு தமிழா...


சமீபத்திய செய்தி