நெசவாளர்களுக்கு வேலை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்துக்காக ஏற்படுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு சில ஆண்டாக உரிய காலத்தில் நுால் டெண்டர் வைத்து வழங்காததால், முழுமையான பணி கிடைக்காமல் நெசவாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நடப்பாண்டும் அதே நிலை நீடிப்பதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு, 6 மாத காலத்துக்கு நிரந்தர வேலை கிடைக்கும் வகையில், இலவச வேட்டி, சேலை திட்டம் உருவாக்கப்பட்டது. மாநில அளவில், 240க்கும் மேற்பட்ட விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம், 70,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம், தலா, 1.77 கோடி இலவச வேட்டி, சேலை உற்பத்தியாகி, பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்கள் உட்பட குறிப்பிட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.இத்தொழிலில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள், பிற தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வாழ்வாதாரம் பெறுகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் மூலம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய, நுால் மில், சைசிங் சார்ந்த தொழிலாளர்கள், பாபின் கட்டை, கூட்டுறவு சங்கங்களில் பணி செய்யம் மடி தொழிலாளர்கள், சுமைப்பணியாளர்கள், பிரின்டிங், லாரி உள்ளிட்ட வாகன தொழிலாளர் என நீண்டு கொண்டே போகிறது.கடந்த சில ஆண்டுக்கு முன் வரை, மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, மார்ச் - ஏப்., மாதம் எண்ணிக்கை, தரம், டிசைன் போன்றவை இறுதி செய்து, ஏப்., - மே மாதம் நுாலுக்கு டெண்டர் விட்டு, ஜூனில் உற்பத்தி பணி துவங்கும். 6 மாதம் இலக்கு நிர்ணயித்து டிச., முதல் வாரம் முதல் பணி முடிந்து, ரேஷன் கடைகளுக்கு சென்றடையும்.கடந்த சில ஆண்டாக செப்., - அக்., மாதங்களில் கூட, நுால் டெண்டரை இறுதி செய்து, தரமான நுாலை வழங்காத நிலை நீடிக்கிறது, நடப்பாண்டிலும் தற்போது வரை, முழு வீச்சில் பணி துவங்காத நிலையே உள்ளது.
20 சதவீத பணிகளே முடிந்துள்ளன
இதுபற்றி, நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஆட்டோ லுாம், பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளில் இருந்து துணிகள், ஆயத்த ஆடைகள் வரத்தால் ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழில், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இச்சூழலில் இலவச வேட்டி, சேலை பணியை, செப்., - அக்., வரை டெண்டரை இறுதி செய்து, முழுமையாக நுால் வழங்காமல் இழுத்தடித்தால், நெசவாளர்கள் வேலை இன்றி பாதிக்கின்றனர்.வரும் ஆண்டுகளில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, ஏப்., - மே மாதம் நுால் டெண்டரை இறுதி செய்து, ஜூனில் உற்பத்தி பணியை துவங்க வேண்டும். டிச., - ஜனவரிக்குள் பணி முடியும்.மீண்டும் பிப்ரவரியில் பள்ளி சீருடைக்கு நுால் டெண்டரை இறுதி செய்து, மார்ச்சுக்குள் நுால் வழங்கினால், மே - ஜூனில் அப்பணி நிறைவு பெறும். ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை கிடைக்கும். இதை சார்ந்த பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.தவிர, ஒரு வேட்டிக்கு, 24 ரூபாய், சேலைக்கு, 43 ரூபாய் என, 5 ஆண்டுக்கு முன் கூலி நிர்ணயித்தனர். பாபின் கட்டை, பார்டல் கட்டை ஓட்ட மீட்டருக்கு, 31 காசு, 11 ஆண்டுக்கு முன் கூலியாக நிர்ணயித்தனர். துணி மடிக்க, 10 ஆண்டுக்கு முன், 1 ரூபாய் நிர்ணயித்து இன்று வரை உயர்த்தவில்லை. அதை உயர்த்த வேண்டும். நெசவுக்கூட மின் கட்டணம், சொத்து வரி, சொசைட்டி குடோன் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது.இவற்றை சரி செய்து வருமாண்டில் திட்டமிட்டபடி இலவச வேட்டி, சேலை பணியை துவங்கினால், நெசவாளர்கள் வாழ்வாதாரம் பெறுவர். நடப்பாண்டில் இது வரை நுால் டெண்டர் இறுதி செய்யப்படாததால், இலவச வேட்டி, சேலை உற்பத்தி, 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.இதனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்படுவது உறுதி.இவ்வாறு கூறினர். - நமது சிறப்பு நிருபர் -