டாக்கா: வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழலை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அங்கு போராட்டங்களை துாண்டி, அதை நம் நாட்டுக்கு எதிராக மாற்ற சதி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், மாணவர்களின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார். தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், அந்நாட்டில் இடைக்கால அரசு பதவியேற்றது. முகமது யூனுஸ் பதவியேற்றதில் இருந்து, சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, மர்ம நபர்களால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் டாக்கா உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழலை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அங்கு போராட்டங்களை துாண்டி, அதை நம் நாட்டுக்கு எதிராக மாற்ற சதி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, நம் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: வங்கதேசத்தில், 2026 பிப்., 12ல் பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்நாட்டின் மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதியின் கொலை தற்போதைய சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது. அவரது இறப்பு நேற்று முன்தினம் கலவரத்தை துாண்டியது. இந்த பதற்றமான சூழலை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. ஜமாத் - இ - இஸ்லாமி மற்றும் அதனுடன் தொடர்புடைய மாணவர்கள் பயிலும் மதரசா அமைப்புகளை போராட்டத்தை பின்னணியில் இருந்து துாண்டும்படி அறிவுறுத்தியுள்ளது. உள் நாட்டு தலைவர்களை முன்னணியில் நிறுத்தி, போராட்டத்தை இயல்பானதாக காட்டி, வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதே ஐ.எஸ்.ஐ.,யின் திட்டம். சிறிய கலவரத்தை ஊதி பெரிதாக்கும் முயற்சியில் பாக்., உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் வங்கதேச இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக அணி திரட்டும் வேலையும் நடக்கிறது. பாகிஸ்தானில் இருந்து பண உதவியும், இணைய செயல்பாடுகளும் இந்த பிரசாரத்தை வழிநடத்துகின்றன. கலவரத்தைத் துாண்டும் பல சமூக வலைதள கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுகின்றன. இவை இந்தியாவை தவறாக சித்தரிக்கின்றன. ஷேக் ஹசீனாவை நாம் பாதுகாப்பதாக கூறி இந்திய எதிர்ப்பை துாண்டுகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.