5 மாதமாக அசைந்து கொடுக்காத பழனிசாமி; மெகா கூட்டணி வாய்ப்பை பறிகொடுத்த அ.தி.மு.க.,
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டு, ஐந்து மாதங்களாகியும் மெகா கூட்டணி அமைக்கும் வாய்ப்பை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கோட்டை விட்டு விட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் அல்லது தனிப்பெரும்பான்மை பெறுவதை தடுக்க வேண்டும் என்பது, பா.ஜ., தலைமையின் இலக்காக உள்ளது.அதனால்தான், சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, கடந்த ஏப்ரல் 11ல், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., --- பா.ஜ., கூட்டணியை அறிவித்தார்.அன்றைய தினமே, பா.ம.க., உள்ளிட்ட சில கட்சிகளை சேர்க்க, அமித் ஷா விரும்பினார்; அது சாத்தியமாகவில்லை. அதன்பின், 'அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். மெகா கூட்டணியாக மாறும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பேசி வந்தனர். ஆனால், ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில், எந்தக் கட்சியும் இணையவில்லை. அதற்கு மாறாக, கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இருந்த தினகரனின் அ.ம.மு.க.,வும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும், வெளியேறின.கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் இருந்த பா.ம.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., 'வரும் ஜனவரியில்தான் கூட்டணியை முடிவு செய்வோம்' என்கிறது. புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட்டணிக்கு வரவில்லை. தே.மு.தி.க., பா.ம.க., புதிய தமிழகம், அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணி ஆகிய கட்சிகளை, கூட்டணியில் இணைக்க, அமித் ஷா விரும்புகிறார். ஆனால், தினகரன், பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைக்கவோ, கூட்டணியில் சேர்க்கவோ, பழனிசாமி மறுத்து வருகிறார். இதனால், கூட்டணியை வலுப்படுத்த முடியாத நிலை உள்ளது. பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகியுள்ள அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், 'பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்' என, அறிவித்துள்ளார்.இந்நிலையில்தான் அ.தி.மு.க., மூத்த தலைவரும், ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவருமான செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை, 10 நாட்களில் துவங்க வேண்டும்' என, பழனிசாமிக்கு கெடு விதித்தார். அதைத் தொடர்ந்து, அவரின் கட்சிப் பதவிகளை பழனிசாமி பறித்தார். செங்கோட்டையனை ஆதரிப்பவர்களும் நீக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், கூட்டணி அமைப்பதில் மட்டுமல்லாது, அ.தி.மு.க.,விலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக தன் தலைமையில், தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கக்கூடிய அருமையான வாய்ப்பை பழனிசாமி தவறவிட்டு விட்டார். இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், நடிகர் விஜயின் த.வெ.க.,வை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என, அக்கட்சி வட்டாரங்கள் கூறின. நமது நிருபர்