பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறிக்க, பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.,வில், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலரும், கட்சியின் அமைப்புச் செயலருமான செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தபடி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ipaif1m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ௪ பேருக்கு பதவி
சமீபத்தில், செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு, அவரிடம் கலந்து ஆலோசிக்காமல், மாநில அளவிலான பதவிகளை பழனிசாமி வழங்கினார்.இதனால், செங்கோட்டையன் அதிருப்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து, விவசாயிகள் சங்கம் சார்பில், பழனிசாமிக்கு ஆதரவாக நடத்திய பாராட்டு விழாவில், ஜெயலலிதா படம் போடவில்லை எனக்கூறி விழாவை புறக்கணித்தார். அதன்பின், பழனிசாமியும், செங்கோட்டையனும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர்.சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது, அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பிய போது, செங்கோட்டையன் அமைதி காத்தார். மறுநாள் செங்கோட்டையன் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். இது, அ.தி.மு.க., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்து சாணக்யா, 'யு டியூப்' சேனல் ஆண்டு விழாவில் பேசிய செங்கோட்டையன், பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்து பேசினார். அநாகரிகம்
இது, பழனிசாமி தரப்பினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையனை கண்டிக்கும் வகையில், 'பொதுவெளியில் அவர் இப்படி நடந்து கொள்வது அநாகரிகம்' என, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். இந்நிலையில், ஏற்கனவே பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டோரின் கட்சி பதவிகளை பறித்தது போல, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளையும் தற்காலிகமாக பறிப்பது குறித்து, மூத்த நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், செங்கோட்டையனை அழைத்து பழனிசாமி பேசாததும், மூத்த நிர்வாகிகள் சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றி, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனை, பொதுச்செயலர் பழனிசாமி நேரில் அழைத்து பேசினால், பிரச்னை தீர்ந்து விடும். ஆனால், பழனிசாமியோ, 'இதுபோல அதிருப்தியில் உள்ளோர் ஒவ்வொருவரையும் அழைத்து பேசினால், பிரச்னை அதிகமாகும். கட்சியை பொறுத்தவரை யாராக இருந்தாலும், தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும்' என்கிறார்.இதை மூத்த நிர்வாகிகள் சிலர் ரசிக்கவில்லை. ஏற்கனவே, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதால், தென்மாவட்டங்களில் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. தற்போது செங்கோட்டையனுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடுத்தால் கட்சிக்கு நல்லது என்பதே, அவர்களின் எண்ணமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.