சென்னை: ''பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி, ஐந்தாம் நாளாக பகுதி நேர ஆசிரியர்கள், நேற்று நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல் பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஐந்தாம் நாளான நேற்று, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தலைகீழாக நின்றும், கண்களில் கருப்பு துணி கட்டியும் கோஷங்கள் எழுப்பினர். சிலர், 'கியூ.ஆர்.கோடு' அச்சிட்ட பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அதை ஸ்கேன் செய்தால் 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, முன்னாள் முதல்வர் கருணநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தம் செய்யபடுவர்கள் என, வாக்குறுதி அளித்த வீடியோ காட்சிகள் தெரிந்தன.மேலும், பகுதிநேர ஆசிரியர்கள், தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, நாடகம் வாயிலாக வெளிப்படுத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்ளை ஏற்றி செல்வதற்காக, போலீசார் கொண்டு வந்த பஸ்களில் ஒன்று பழுதடைந்தது. எனவே, இருந்த பஸ்சில் அதிகமான நபர்களை ஏற்ற, போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள்; 1,050 பேர் கைது
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 18ம் நாளாக, கலெக்டர் அலுவலகம் அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட, 1,050 இடைநிலை ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்தனர். அதே பகுதியில், புதிய ஓய்வூதிய திட்டத்தில், தங்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி செயலர்கள், நேற்று ஏழாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 2,000 பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர்களுக்கு அறை கொடுக்காதீர்; போலீசார் அதிரடி உத்தரவு
போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து, மாலை விடுவிக்கின்றனர். அவர்கள் விடுதிகளில் தங்கி, அடுத்த நாள் காலையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களின் போராட்டம், போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் பகுதிகளில் உள்ள, லாட்ஜ் மற்றும் விடுதிகளில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு, அறை வழங்கக் கூடாது என, அதன் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அரசு டாக்டர்கள் போராட்டம்
'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354ன்படி, ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். தற்போதைய ஆட்சியில் வெளியிடப்பட்ட, அரசாணை 293ன்படி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு, மாதந்தோறும் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என, அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி, மாநிலம் முழுதும், அரசு டாக்டர்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, நேற்று முதல் பணியாற்ற துவங்கி உள்ளனர்.