பயங்கரவாத ஆதரவாளர்களை ஒடுக்க போலீஸ் - என்.ஐ.ஏ., கைகோர்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவு குழுக்கள் பெருகி வருவதால், அதைத்தடுக்க, உள்ளூர் போலீசாருடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது' என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன், மத மாற்றத்தை தடுத்த, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகளான சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலுார் வெள்ளையப்பன், சென்னை அம்பத்துார் சுரேஷ்குமார், தஞ்சாவூர் ராமலிங்கம், கோவை சசிகுமார் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். கார் குண்டு வெடிப்பு
இதன் பின்னணியில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த காஜாமொய்தீன் தலைமையில், ஐ.எஸ்., பயங்கரவாத ஆதரவு அமைப்பினர் செயல்பட்டது தெரியவந்தது. இக்கொலைகள் தொடர்பாக, போலீஸ் பக்ருதீன், பன்னா இன்ஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்டோர் கைதான நிலையில், காஜாமொய்தீன் கூட்டாளிகள் தொடர்ந்து சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர். அவர்கள் தான், கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் குண்டு வெடிப்பை நடத்தினர். இலங்கையில், ஈஸ்டர் நாளில் குண்டு வெடிப்பு நடத்தி, 250 பேரை கொன்ற தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ராம் ஹாசிம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடத்திய அப்துல் மதீன் அகமது தாஹா, முஸாவீர் ஹுசைன் ஷாகிப் ஆகியோருக்கு, தமிழகத்தில் காஜாமொய்தீன் கூட்டாளிகள் தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர். இவர்கள், அல்குவைதா, இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட வெவ்வேறு பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். புற்றீசல்கள் போல அதிகரித்து வரும் இக்குழுக்களை கட்டுப்படுத்த, உள்ளூர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தகவல் பரிமாற்றம்
அதற்கான செயல் திட்டங்களை, சில தினங்களுக்கு முன் தமிழகம் வந்த, என்.ஐ.ஏ., தென் மண்டல இயக்குனர் சந்தோஷ் ரஸ்தோகி வகுத்து தந்துள்ளார். அதில், உள்ளூர் போலீசாருடன் கைகோர்த்து எப்படி செயல்படுவது, தடைகளின்றி தகவல் பரிமாற்றம் மற்றும் ரகசியம் காப்பது என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.