சென்னை : 'காவலர் பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பு குறைப்பு, எல்லா காவலர்களுக்கும் பொருந்தாது' என அறிவிக்கப்பட்டதால், 45,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.தமிழ்நாடு காவலர் குடும்பங்கள் இணைந்து, காவலர் குடும்பநல அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அறக்கட்டளையின் தலைவி சத்யபிரியா, அரசுக்கு எழுதியுள்ள கடிதம்:காவல் பணியில் சேருபவர்களுக்கு எழுத, படிக்க தெரிந்து இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. அதேபோல, ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு என்ற அளவுகோலும் இருந்தது. கல்வி தகுதியில் வேறுபாடு இருந்தாலும், காவலர் பணியின் முக்கியத்துவம் கருதி, காவலர், ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.காலப்போக்கில் ஆசிரியர்கள் சங்கம் அமைத்து தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்து, ஊதிய உயர்வு பெற்றனர். தற்போது, காவலர்களின் ஊதியத்தை விட, பல மடங்கு அதிகம் பெற்று வருகின்றனர். எனவே, வரும் எட்டாவது ஊதிய உயர்வில், காவலர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும்.காவலர் பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பை குறைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், இது, எல்லா காவலர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்காததால், 45,000 போலீசார் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல, இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு அளிக்கும் போது, பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. போலீஸ் அதிகாரிகள், டி.பி.எஸ்., எனப்படும், தமிழ்நாடு போலீசில் இருந்து, ஐ.பி.எஸ்., எனப்படும் இந்திய காவல் பணிக்கு செல்லும் போதும், அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது இல்லை. ஆனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து அனுபவம் பெற்ற காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நினைவூட்டல் பயிற்சி அளித்தால் மட்டுமே போதுமானது. மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்களை பணி நியமனம் செய்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.