உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா தேர்தல்; எம்.பி., பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள்

சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா தேர்தல்; எம்.பி., பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேரின் பதவி, அடுத்த ஆண்டு ஏப்., 1ல் காலியாகிறது. அ.தி.மு.க., -- தம்பிதுரை, த.மா.கா., - வாசன், தி.மு.க., - திருச்சி சிவா, அந்தியூர் செல் வராஜ், என்.ஆர்.இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு ஆகியோரின் பதவி காலம் முடிகிறது.அடுத்த ஆண்டு ஏப்., அல்லது மே மாதத்தில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், ராஜ்யசபா தேர்தல் நடத்தினால் தான், தற்போது உள்ள தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அடிப் படையில், தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர். அதேபோல், அ.தி.மு.க.,வுக்கு, இரண்டு எம்.பி., பதவிகள் கிடைக்கும்.

விருப்பம்

சட்டசபை தேர்தல் முடிந்த பின், ராஜ்யசபா தேர்தல் நடந்தால், கள நிலவரம் மாறும். அப்போது எந்த கட்சிக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனரோ, அந்த கட்சிக்கு அதிக எம்.பி.,க்கள் கிடைக்கும் சூழல் உருவாகும். சட்டசபை தேர்தலில், முதன்முறையாக த.வெ.க., போட்டியிடுவதால், தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகும் சூழலும் ஏற்படலாம். எனவே, காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா எம்.பி., தேர்தலை சந்திக்க, தி.மு.க.,வும் அ.தி. மு.க.,வும் விரும்புகின்றன. இதற்கேற்ப, சட்டசபை தேர்தலுக்கு முன்பே, ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.இதற்கிடையில், அ.தி.மு.க.,விடம் உள்ள இரண்டு ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளை பெற, பா.ஜ., - த.மா.கா., ஆகிய இரு கட்சிகளும் விரும்புகின்றன. அதே சமயம், தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., ஆகிய கட்சிகளை சேர்க்க, பா.ஜ., மேலிடம் முயற்சித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்த, அக்கட்சிகளும் திட்டமிடுகின்றன.

சவால்

அதாவது, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவியை கேட்டு பெற, அக்கட்சிகள் கணக்கு போடுகின்றன. கூட்டணி பேரமாக, ராஜ்யசபா எம்.பி., பதவியை, இக்கட்சிகள் வலியுறுத்த உள்ளன. பா.ஜ., மேலிடமும், இந்த கோரிக்கையை பரிசீலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளும், ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு அடிபோடுகின்றன. எனவே, கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை சமாளித்து, ராஜ்யசபா தேர்தலை சந்திப்பது என்பது, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்கூட்டியே வரும் தேர்தல்?

தமிழகம், மஹராஷ்டிரா, ஒடிஷா, கர்நாடகா, மேற்கு வங்கம், அசாம், பீஹார், சட்டீஸ்கர், அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சல், ஹரியானா, தெலுங்கானா, ஆந்திரா, குஜராத், மணிப்பூர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய, 17 மாநிலங்களில், விரைவில் 72 எம்.பி.,க்களின் பதவி காலியாகிறது. இவர்களின் பதவிக்காலம் முடிந்த ஆறு மாதங்களுக்குள், தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், பதவிக்காலம் முடியும் வரை, தேர்தல் கமிஷன் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்கூட்டியே, 2026 மார்ச் மாதமே தேர்தல் நடத்தப்படலாம். கடந்த 1991 - 1996ம் ஆண்டில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி நடந்தது. கடந்த 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட்டது. அக்கட்சி சார்பில், தளவாய் சுந்தரம், ஆர்.கே.குமார் உட்பட, ஐந்து பேரும், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்சும் எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதுபோன்ற முன்னுதாரணங்கள் உள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே, தமிழகம் ராஜ்யசபா தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

duruvasar
டிச 24, 2025 15:42

இந்த பெயர்களில் ஹிந்தியில் பாட்டு பாடி வட மாநிலத்தவரையும் கவர கூடிய திறமை பெற்றவர் தமிழக மொஹமட் ரஃபி என அறியப்பட்டவர் திருச்சி சிவா மட்டுமே எனவே அவரை தேர்ந்தெடுத்து நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என மீண்டும் திராவிட மாடலை புரியவைக்கலாம்.சாணக்கிய ராஜதந்திரமாக இருக்கும் . முடிவு இளம் பெரியார் கைகளில்.


கனோஜ் ஆங்ரே
டிச 24, 2025 11:55

////சட்டசபை தேர்தலில், முதன்முறையாக த.வெ.க., போட்டியிடுவதால், தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகும் சூழலும் ஏற்படலாம்-//// அய்யா, அங்குசாமி... இது ஓவரா தெரியலை...? விஜய்..க்கு ஓவர் பில்டப் கொடுக்குறீங்க...? கூட்டமாக கூடும் விசிலடிச்சான் குஞ்சுகள், என் வீட்ல 9 ஓட்டு இருக்கு, எல்லாரும் விஜய்..க்கு ஓட்டுப் போடலை..ன்னா சோத்துல விஷம் வச்சிடுவேன்னு சொன்ன வாக்களிக்க தகுதியில்லாத பெண் முதல் பெரும்பாலான விசிலடிச்சான் குஞ்சுகள் வாக்களிக்க தகுதியுள்ள ஆட்கள் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், கூடும் கூட்டமெல்லாமே வாக்குகளாக மாறும் என்பது விதி என்றால்... தமிழ்நாட்டு அரசியலில், விஜயகாந்த் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டும்..? அதுனால, பதிவை சிந்தித்து போடணும்... சும்மா பொத்தாம் பொதுவா போகுற போக்குல பேசிட்டு போயிடக்கூடாது... விஜய்.. கட்சி இதுவரையில் ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினராககூட நின்ற அனுபவம் இல்லை... ரொம்ப ஓவர் பில்டப் பண்ணாதீங்க... எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், நின்றார்கள், தோற்றார்கள், ஓடினார்கள்... என்பதுதான் தமிழ்நாட்டில் நடிகர்களின் அரசியல் வரலாறு...? இதில் விஜய் ஒன்றும் விதிவிலக்கல்ல... என்பதை மறந்து ஓவர் பில்டப் கொடுக்காதீங்க... அத்துடன், நடிகர்களிலேயே எம்ஜிஆர்... மட்டுமே தனிக் கட்சி துவங்கி முதலமைச்சர் ஆனவர்... மற்ற நடிகர்கள் அனைவருமே தனிக் கட்சி ஆரம்பித்து ஓடிப் போனவர்கள்தான்... எம்ஜிஆர் என்றால் ஏற்கனவே ஒரு கட்சியில் கிட்டதட்ட இருபதாண்டுகள் இருந்து, பிரச்சாரம், தேர்தல், வியூகம் அனைத்தையும் அரசியல் ஜாம்பவான்களிடம் கற்றவர்...? அத்துடன் தனது வள்ளல் தன்மையால், மக்களிடம் சென்று களத்தில் இறங்கி, ஏழை, கிராமப்புற மக்களிடம் நற்பெயரை பெற்றவர். நடிச்சுகிட்டே இருந்து மார்க்கெட் போகப் போகுதுன்னு தெரிஞ்சு அரசியல் கட்சி துவங்கியவர் இல்ல எம்ஜிஆர்... அதுனால, எம்ஜிஆர் எனும் மேருமலையை... இந்த விஜய் எனும் குப்பை மேட்டுடன் ஒப்பிட்டு கணக்கு போடாதீர்கள்...


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 24, 2025 09:40

ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காகவே கட்சி நடத்தும் அம்மையார் பற்றியும், ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக கட்சியை விற்க முன்வந்த ஆண்டவர் பற்றியும் செய்தியில் ஏதும் இல்லையே


vee srikanth
டிச 24, 2025 17:10

வாரிசுவை எதிர்த்து கட்சி ஆரம்பிச்ச சொல்ல வேயில்லையே


ஆரூர் ரங்
டிச 24, 2025 09:11

ஹிந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை. தயாநிதிக்குக் கொடுத்தது போல. திருச்சி சிவாவும் காத்திருக்கிறார்.


புதிய வீடியோ