30 சீட் தருவோரிடம் ராமதாஸ் கூட்டணி: தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் ரகசிய பேச்சு?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கூட்டணி தொடர்பாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் ரகசிய பேச்சு துவக்கி இருக்கும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 30 'சீட்' கேட்டு நிபந்தனை விதிப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதலை தொடர்ந்து, கட்சி இரண்டாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7je3tglv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அன்புமணியை கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவித்து, செயல் தலைவராக்கிய நிறுவனர் ராமதாஸ், பின் அவரை கட்சியை விட்டும் நீக்கினார். இந்நிலையில், விரைவில் டில்லி செல்ல இருக்கும் ராமதாஸ், அங்கு பிரதமர் மோடி, உள்துறை செயலர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, இருவரிடமும் அப்பாயின்மென்ட் கேட்டுள்ளதாக தெரிகிறது. சந்திப்பின் போது, 'அன்புமணிக்கு எக்காரணம் கொண்டும் அரசியல் ரீதியில் அங்கீகாரம் அளிக்க வேண்டாம் என ராமதாஸ் கேட்டுக் கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவி இருக்கிறது. விரைவில் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, அன்புமணி விவகாரத்துக்கு நிரந்தர முடிவெடுக்க இருக்கும் ராமதாஸ், வரும் 25ல் வன்னியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தையும், 24ல் கட்சியின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டி விவாதிக்க உள்ளார். இவ்விரண்டுக்கும் முன்னதாக, நேற்று கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டி ராமதாஸ் விவாதித்துள்ளார். அப்போது, கட்சி ரீதியில் அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைவருடைய கருத்துகளையும் கேட்டுள்ளார். இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில், ராமதாஸ், அவருடைய மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி, கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஆசிரியர் பரந்தாமன், தலைமை நிலைய செயலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தன்னை வந்து சந்தித்து நடந்தவை அனைத்துக்கும் அன்புமணி வருத்தம் தெரிவித்து, தற்போதைய பிரச்னைகளை முடிப்பார் என ராமதாஸ் எதிர்பார்த்தார். ஆனால், சமாதானமாக செல்ல அன்புமணி விரும்பவில்லை. இதனால் தான், அன்புமணியை கட்சியை விட்டு நீக்கும் முடிவுக்கு வந்தார் ராமதாஸ். முதல் கட்டமாக, அன்புமணியின் நடைபயணத்தை தடுக்க முயற்சி எடுத்த ராமதாஸ், அடுத்தகட்டமாக, தேர்தல் கமிஷன் அன்புமணி தரப்புக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வைக்க முயன்றார். தொடர்ந்து, பிரச்னையை சட்ட ரீதியில் அணுகவும் முடிவெடுத்துள்ளார். இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்குவதால், தன் தலைமையில் இயங்கும் பா.ம.க.,வை தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் இணைக்க ராமதாஸ் விரும்புகிறார். இதற்காக, கட்சிகளிடம் ரகசிய பேச்சுக்களை துவங்கி உள்ள அவர், 30 தொகுதிகளை கொடுக்கும் கூட்டணியில் இணைய முடிவெடுத்து, அதற்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளார். இது தொடர்பான விஷயங்கள் தான், தைலாபுரத்தில் நடந்த கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -