தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று முன்தினம், தி.மு.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.இதில், தி.மு.க., துணைப்பொதுச் செயலரும், நீலகிரி எம்.பி.,யுமான ராஜா பேசியதாவது:
லோக்சபா, ராஜ்யசபாவில் பா.ஜ.,வை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களெல்லாம் வாரிசு என்பதன் அடிப்படையிலேயே அரசியலில் பொறுப்புக்கு வந்தவர்கள்.ஆனால், தி.மு.க.,வில் அப்படியில்லை. இளம் வயதில் இருந்து உழைப்பைக் கொடுத்து, அரசியல் செய்து, படிப்படியாக வளர்ந்து உச்சத்தை தொட்டிருப்பவர் நம் முதல்வர் ஸ்டாலின்.மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தை தனிமைப்படுத்த விரும்புகிறது.அதற்கு பதிலடியாக, மத்திய அரசை தனிமைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் ஸ்டாலின். இதற்காக, அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைக்கிறார் அவர்.பா.ஜ.,வுடன் இனி எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று முழங்கிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ.,வுடன் தி.மு.க.,வும் கூட்டணி வைத்திருந்த கட்சிதான் என, முட்டு கொடுத்து பேசுகிறார்.பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்திருந்தது உண்மைதான். ஆனால், கூட்டணியாக இருந்தவரை கொள்கைகள் எதையும் தாழ்த்திக் கொள்ளவில்லை. நாட்டுக்கும், உலகத்துக்கும் நல்லது செய்தோம்.பழனிசாமிக்கு துணிச்சல், திராணி இருந்தால், 'நாங்கள் எங்களது கொள்கையை விட்டுத் தரமாட்டோம்; பா.ஜ.,விடம் எதற்கும் மண்டியிட மாட்டோம்' என சொல்ல வேண்டும்.கூடவே, 'மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வரமாட்டோம்; தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்' எனவும் சொல்ல வேண்டும். அதற்கு பழனிசாமி தயாராக இருக்கிறாரா?இதை அவர் சொன்னால் போதும். தாமரைக்கும், இரட்டை இலைக்கும் நானே ஓட்டளிக்கிறேன்.தவறாக ஓட்டளித்தாலும், தமிழகத்துக்கு ஒரு விடிவு பிறக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.