மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்தாண்டு ஏப்ரலில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடக்கிறது. 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் இருக்கும் மம்தா, நான்காவது முறையாகவும் வெற்றியை எதிர்பார்த்துள்ளார். பெரும் தாக்கம் திரிணமுல் காங்கிரசுக்கு மாற்று சக்தியாக வலுவாக உருவெடுத்துள்ள எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த முறை ஆட்சி அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் முடுக்கி விட்டுள்ளன. மேற்கு வங்க சட்டசபை தேர்தல், மதம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடையது. அங்கு, ஹிந்துத்துவா கருத்துகள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றன. இதற்கு, பா.ஜ.,வின் எழுச்சியும் ஒரு முக்கிய காரணம். இது அரசியலில் மட்டுமல்ல, சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் நடக்கும் பேரணிகள், பொதுக்கூட்டங்களில், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிடுவது, தற்போது பொதுவானதாகி விட்டது. முன்பெல்லாம், 'மா துர்கா, மா காளி' என்ற முழக்கங்களே எதிரொலித்தன. ஒரு காலத்தில், கலாசாரம் மற்றும் சமூகத்தின் கொண்டாட்டமாக இருந்த துர்கா பூஜை பண்டிகை கூட, தற்போது அரசியல் நிகழ்வாக மாறிவிட்டது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் மீது, பா.ஜ., ஆளும் ஒடிஷா, அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேற்கு வங்க பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால், 'பெங்காலி' பேசும் நபர்கள் குறிவைத்து துன்புறுத்தப்படுவதாக திரி ணமுல் காங்., எதிர்ப்பு தெரிவிக்கிறது. தர்ம சங்கடம் வங்கதேசத்தில் பெங்காலி பேசப்படும் நிலையில், அதையொட்டிய மேற்கு வங்கத்திலும் அந்த மொழியே பேசப்படுகிறது. பெங்காலி பேசும் மேற்கு வங்க மக்களை, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அவர், மேற்கு வங்கத்தின் பெருமைகளை பற்றி பேச துவங்கி உள்ளார். பெங்காலி என்ற அடையாளத்தை முன்னிறுத்தும் அவர், 'மேற்கு வங்கத்தை பெங்காலி நபரே ஆள வேண்டும்' என, குரல் கொடுத்து வருகிறார். மேற்கு வங்கத்தில் வளர்ந்து வரும் பா.ஜ., ஹிந்துத்துவாவை தாங்கிப் பிடிக்கிறது. ஆனால், அதன் தேசிய தலைவர்கள், மேற்கு வங்கத்தின் கலாசார பெருமைகளை பேச தவறுகின்றனர். மேலும், அதன் பாரம்பரிய வார்த்தைகளை கூட அவர்கள் தவறாக உச்சரிக்கின்றனர். இது, மாநில பா.ஜ.,வை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. ஹிந்துத்துவா தாக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்த ஆளும் திரிணமுல் காங்., அதை பின்பற்ற துவங்கி உள்ளது. ஹிந்து பண்டிகைகள், கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் அக்கட்சி ஆர்வம் காட்டுகிறது. முக்கியத்துவம் 'ஹிந்துத்துவா விவகாரத்தில் பா.ஜ.,வுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல' என, திரிணமுல் காங்., நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஹிந்துத்துவா கொள்கையில் பா.ஜ.,வை யாராலும் வெல்ல முடியாது என்பதை, அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல், மதம் மற்றும் கலாசார ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் வெற்றி பெற ஆளும் திரிணமுல் காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் என்ன செய்யப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.